ஸ்ரீ.ல.சு.கட்சி மாநாட்டில் இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள்!

sonigaகொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் பங்குகொள்ளும் வகையில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தனது கட்சிப் பிரமுகர்களை அனுப்பி வைத்திருந்தார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் விபரம் வருமாறு:

காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரியும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மேபல் ரிபரோவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை சுதந்திரக் கட்சியின் 19ஆவது மாநாடு, கொழும்பில் நேற்று ஆரம்பமானது. காங்கிரஸ் கட்சி முதல் முறையாக தனது கட்சித் தலைவர்களை இம்மாநாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளை வீழ்த்தியதற்காக இலங்கை ஜனாதிபதிக்குத் தங்களுடைய பாராட்டுக்களைக் கட்சிப் பிரதிநிதிகள் தெரிவிப்பர் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதலில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர் சந்திர தேவ் மற்றும் ஜெயந்தி நடராஜனை தனது கட்சி பிரதிநிதிகளாக அனுப்பி வைக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு இருந்தது.

காங்கிரஸ் கட்சியின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் கரம்சிங், முதலில் கிஷோர்சந்திர தேவை தொடர்பு கொண்டு, கட்சியின் முடிவை தெரிவித்திருந்தார். கிஷோர்சந்திர தேவ் தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியிலும், அதன் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தவர். தமிழ் சரளமாக பேசக் கூடியவர். அதனால் அவரை இலங்கைக்கு அனுப்பி வைக்க கட்சி தீர்மானித்தது.

ஆனால் அவர்,

“இப்போதுள்ள சூழ்நிலையில் இலங்கைக்குத் தான் செல்ல இயலாது”எனக் கட்சித் தலைமைக்கு தெரிவித்து விட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ள தமிழர்களை அவரவர் வாழ்விடங்களில் குடியமர்த்துவது, நிவாரணப் பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த, பிரதமர் மன்மோகன் சிங்கின் சிறப்பு தூதராக, நேற்று முன்தினம் காலை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு சென்றிருந்தார்.

இலங்கையின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லஷ்மண் கதிர்காமர் நினைவு சொற்பொழிவில் அவர் கலந்து கொண்டார்.

பின் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித பொகொல்லகமவை, பிரணாப் முகர்ஜி சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்