ஸ்ரீலங்கா கார்டியன் செய்தி இணையத்தளத்திற்கு இலங்கை அரசாங்கம் தடை.

  
 
      பல வருடங்களாக இயங்கிவந்த அரசியல் உள்ளிட்ட செய்தித் தளமான ‘ஸ்ரீலங்கா கார்டியன்” என்ற இணையத்தளத்தை இலங்கையில் பார்வையிட இலங்கை அரசாங்கம் நேற்று முதல் தடைசெய்துள்ளது.
 
  போர் நடைபெற்ற போது, இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டுவந்த இந்த இணையத்தளம், கடந்த சில வாரங்களாகவே வடபகுதியிலுள்ள இடம்பெயர்ந்தோர் முகாம் மற்றும் தயான் ஜயதிலக பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக அரசாங்கததை விமர்சித்து செய்திகளை வெளியிட்டு வந்தது.

அமைச்சர் கருணாவை விமர்சித்து அவரது மனைவியின் செவ்வியை இந்த இணையத்தளம் வெளியிட்டமையே இந்த இணையத்தளம் தடைசெய்தவற்கான அண்மைய காரணமாக அமைந்ததென ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் சிரேட்ட அதிகாரியொருவர்  தகவலளித்தார்.

இதேவேளை, லங்கா கார்டியன் இணையத்தளத்தின் ஆசிரியர் நிலந்த இலங்க கடுவுக்கு எதிராக கடந்த சில நாட்களாக உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்ததாகவும் எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

கடந்த ஜுலை 11ம் திகதி   Lanka News Web இணையத்தளத்தையும் இலங்கையில் பார்வையிட தடைவிதிக்கப்பட்டதுடன், ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேர்வதன, இதற்கும் அரசாங்கத்திற்கும் எவ்விதத் தொடர்புமில்லையென வழமையான பாணியில் தெரிவித்திருந்தார்.