ஸ்பெயினிலிருந்து கத்தலோனியா பிரிந்து செல்ல வாக்கெடுப்பு நடத்துகிறது : அதிகரிக்கும் பிரிவினைக் கோரிக்கைகள்

cataloniaஸ்பையின் நாட்டில் தன்னாட்சிப் பிரதேசமான கத்தலோனியா பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்றை நவம்பர் 9ம் திகதி நடத்தப்போவதாக கத்தலோனியா பிரதேச அரசு அறிவித்துள்ளது. வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என ஸ்பெயின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மக்கள் இத்தீர்ப்புக்கு எதிராகப் போராட கத்தலோனிய உள்ளூர் அரசாங்கம் மக்களுக்கு ஆதரவளிக்கின்றது. திட்டமிட்டபடி வாக்கெடுப்பு நடந்தே தீரும் என்று கத்தலோனியர்கள் எழுச்சிகொள்ள பிரதேச அரசு ஆதரவு வழங்கிவருகிறது.

நிலமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட ஸ்பெயினின் பிரதமர் மரியானோ ரஜோய் உடனடியாக கததலோனிய உள்ளூர் அரசைப் பேச்சுக்கு அழைத்துள்ளார்.

கத்தலோனியா நான்கு மாகாணங்களைக் கொண்ட பிரதேசம். பார்சலோனா, ஜிரோனா, லியேடா, தரகோடா ஆகிய மாகாணங்களில் பார்சலோனா கத்தலோனியாவின் தலை நகர். கத்தலான் மொழியைப் பேசுபவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கத்தலோனியா ஸ்பையினின் 16 வீதமான பகுதியாகும்.
பிரிந்து செல்லும் உரிமை என்பது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை என்ற அடிப்படையில் கத்த்லோனியாவில் மார்க்சிய இடதுசாரி அமைப்புக்கள் சில பிரிவினையை ஆதரிக்க, சில அமைப்புக்கள் அது தேவையற்றது என அறிவிக்கின்றன.

இலங்கை போன்ற நாடுகளில் தேசிய இன ஒடுக்குமுறை என்பது இராணுவ ஆட்சியாக வளர்ந்துள்ள நிலையில் சிறுபான்மைத் தேசிய இனங்களில் பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டமே பிரதானமானது மட்டுமல்ல அவசியமானதும் கூட.

ஐரோப்பிய நாடுகளில் தேசிய இன முரண்பாடு பிரதான முரண்பாடாக இல்லாத நிலையிலும் பிரிந்து செல்லுன் உரிமைக்கான முழக்கங்கள் எழுச்சி பெறுகின்றன. இவற்றோடு ஆண்ட பரம்பரை போன்ற அடையாளக் குழுக்களும் இணைந்து தேசியவாத அரசியலை முன்வைக்கின்றன.

அதிகமாக தொழிலாலாளர்களதும் உழைக்கும் மக்களதும் ஆதரவோடு முன்வைக்கப்படும் ஐரோப்பிய தேசியவாதம் பல்தேசிய நிறுவனங்களும், ஐரோப்பிய முதலாளித்துவமும் எதிர்பார்த்திராத புதிய அரசியல் போக்கு. பிரிந்து செல்லும் உரிமைக்கான கோரிக்கைகள் எழுகின்ற போதெல்லாம் அதற்கு எதிராக பல்தேசிய வியாபார நிறுவனங்களும் அவற்றால் நியமிக்கப்பட்ட அரசுகளும் எதிர்  செயற்பாடுகளை ஆரம்பித்துவிடுகின்றன.

கத்தலோனியாவில் அந்த தேசத்தினுள் பல்தேசிய முதலாளித்துவத்தின் அடியாட்கள் எல்லாம் பிரிவினையைத் தலைமைதாங்கி வருகின்றனர்.

 மக்களுக்கு வழங்கப்பட்ட சமூக நலத் திட்டங்களை ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட ஸ்பெயின் இரட்டை வேகத்தில் சிக்கனம் என்ற பெயரில்  பறித்தெடுத்துக்கொண்டது.

இதனால் பாதிப்படைந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் வேலையற்றோரும் உழைக்கும் மக்களும் பிரிந்து சென்று தனியரசு அமைத்துவிட்டால் ஸ்பெயினின் ஏனைய பிரிவு மக்களை விட தாம் வசதியாக வாழலாம் என்று கருதுவதன் விளைவே பிரிவினை. ஸ்கொட்லாந்திலும் கூட இது தான் யாதார்த்தம். ஆயினும் நிலமை தலைகீழானது.

ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பல்தேசிய வியாபாரிகள் மக்களின் பணத்தைச் சுருட்டிக்கொண்டு அடிப்படை வரிகளைக் கூடக் கட்டுவதில்லை. இதனையே அடிப்படையில் பொருளாதார நெருக்கடி என்று அரசுகள் கூறுகின்றன. பிரிந்து செல்வதற்கான கோரிக்கையைப் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் அரசுகள் எதிர்க்கும் அதே வேளை பிரிவினைக்கான கோரிக்கையைத் தலைமை தாங்குவதும் அவற்றின் அடியாள் படைகளே.

தற்செயலாகப் பிரிவினைக்கான கோரிக்கை வெற்றிபெற்றாலும் மக்களைத் தொடர்ச்சியாகச் சுரண்டுவதற்கான பொறிமுறையைப் பல்தேசிய நிறுவனங்கள் ஏற்கனவே ஏற்படுத்தியுள்ளன. ஆக, உழைக்கும் மக்கள் கருதவதைப் போல் பிரிந்து செல்வதால் எந்தப் பிரச்சனையும் தீர்ந்துவிடப்போவதில்லை,
ஐரோப்பிய நாடுகளில் தேசிய இன ஒடுக்குமுறை பிரதான முரண்பாடாக இல்லாத நிலையிலும் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கான உரிமை மக்களின் அடிப்படை ஜனநாய உரிமை என்ற அளவில் ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஆதரவளிக்கின்றன.

கத்தலோனியாவிலும் ஸ்கொட்லாந்திலும் இது தான் இன்றைய நிலை.

கத்தலோனியாவை கடந்த 30 வருடங்களாக ஆட்சிசெய்த இடது குடியரசு முன்னணி என்ற இடது சாரி பாராளுமன்ற அரசியல் வாதிகளின் கூட்டணி பிரிவினையை ஆதரித்து மக்கள் மத்தியில் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றது. கடந்த 10 வருடங்களாக இடதுசாரியத்தின் பெயரால் சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட்டு சமூகநலத் திட்டங்களை இக் கட்சி அழித்தது.

கத்தலோனியாவின் பெரும்பான்மை தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும். இவர்கள் அணிதிரட்டப்படுவதும் தேசிய இன முரண்பாடு கூர்மையடைந்தால் அதற்கான போராட்டத்தை உழைக்கும் மக்களின் தலைமையில் முன்னெடுப்பதுமே இன்றைய அவசரத் தேவை. கத்தலோனியா மட்டுமல்ல ஸ்கொட்லாந்திலும் இதுவே புதிய தேசிய அரசியலாக முன்வைக்கப்பட வேண்டும். அவ்வாறன்றெனின் அழிவுகள் தொடரும்.