ஸ்டீபன் ஸ்பீல்பர்க் : பயங்கரவாதமும் விடுதலை வேட்கையும் -யமுனா ராஜேந்திரன்


மக்கள் கலைஞர்களை நம்பக்கூடாது. மக்கள் கலையையும் நம்பக்கூடாது கலை விளையாட்டின் பகுதியாக இருப்பது என்னவென்றால், அது உங்களை வியாக்யானத்துக்கு அழைக்கும் என்பதுதான். வடிவத்துக்கும் உள்ளடக்கத்திற்கும், அரசியலுக்கும் அழகியலுக்கும் இடையிலான உறவு மிகவும் சிக்கலானது. நல்ல அரசியல் என்பது நல்ல அழகியலை உருவாக்கும். மிக நல்ல அரசியல் என்பது மிக நல்ல அழகியலை உருவாக்கும். நல்ல அழகியல் என்பது எதை உருவாக்கும்? இந்தச் சிக்கலான கேள்வியை எவராயினும் கேட்டு நேர்மையாகத் தமக்குப் பதில் சொல்லிக் கொள்வார்களாயின், அது சாத்தியத்தில் உண்மையை உருவாக்கும். அதைத்தான் நாம் முற்போக்கான அரசியல் என்று சொல்கிறோம்.

டோனி குஸ்னர்

1

இஸ்ரேலிய மொசாத் உளவாளியான அவ்னர் தனது மனைவியுடன் பாலுறுவில் ஈடுபட்டிருக்கிறான். வேதனையிலும் மூரக்கத்திலும் இயந்திரம் போல் வியர்வை வழிய அவனது மனைவியின் உடல் மீது விறைத்த நிலையில் இயங்குகிறது அவனது உடல். எல்லையற்ற காதலுடனும் அவனளவு வேதனையுடனும் அவனது விந்துத் துளிகளை பரவசத்துடனும் புரிதலுடனும் தனக்குள் வாங்கிக் கொள்கிறாள் அவனது மனைவி. அவன் உடல் மூர்க்கம் பெறப்பெற அவனது சிந்தையினுள் ஜெர்மன் மியூனிக் விமானதளத்தில் துப்பாக்கிக் குண்டுகள், நள்ளிரவைக் கிழத்துக்கொண்டு சீறி வெடிக்க இரத்தம் தெறித்தநிலையில் வீழ்கின்றன பாலஸ்தீன உடல்கள், ஜெர்மானிய ராணுவத்தினரின் உடல்கள். கூடவே ஒவ்வொன்றாக வீழ்கின்றன அபய நிலையில் இருந்த இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களின் உடல்கள்.

ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கின் ‘மியூனிக்’ (2005) படத்தில் வரும் வன்முறை கொந்தளிக்கும் உணர்ச்சிவசமான காட்சிகளிலொன்றுதான் மேலே விவரிக்கப்பட்டிருக்கிறது..

‘மியூனிக்’ திரைப்படம் காட்சியளவில், 1972 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து 7 ஆம் திகதி முடிய, ஜெர்மனியின் மியூனிக் ஒலிம்பிக் நகரத்தில் நிகழ்ந்த, இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை பாலஸ்தீனப் போராளிகள் கடத்திய நிகழ்வு குறித்ததாக அமைகிறது. கருத்தியல் பிரச்சினை, அரசியல் வன்முறை தொடர்பானதாகவும், அதனது நீட்சியாக இன்று அதீதமான அரசியல் உரையாடலுக்கு உள்ளாகி இருக்கும் பயங்கரவாதம் தொடர்பானதாகவும் இருக்கிறது.

ஸ்பீல்பர்க் பாலஸ்தீனப் போராளிகளின் துயர்கள், அவர்களது அபிலாசைகள், மனிதர்களாக அவர்களிடம் இருக்கும் குழந்தைகள், மனைவியர், தமது சுற்றத்தார், தமது மக்கள் போன்றவர்கள் மீதிருக்கும் அவர்தம் நேசத்தைச் சித்தரிப்பதின் மூலம், அவர்களையும் மனிதாயப்படுத்துகிறார். இந்த ‘மனிதத் தன்மையுள்ளவர்களாக’ வன்முறையாளர்களைக் காண்பிப்பது என்பது, எப்போதும் ‘அரசியல் ரீதியாகச் சரியானது’ என்பதைப் பற்றி யோசிப்பவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் சந்தித்திருக்கிறது.

பயங்கரவாதம் குறித்து ஸ்பீல்பர்க் முன்வைத்திருக்கும் உரையாடல் இன்றைய நிலையில் மிக முக்கியமான உரையாடலாகும். இஸ்ரேலியர்களாயினும் பாலஸ்தீனர்களாயினும் இருபுறமுமான வன்முறையின் காரணங்களையும் பகுப்பாய்வு செய்யும் மியூனிக் திரைப்படம், இருவர் மீதும் எந்தவிதமான தீர்ப்புகளையும் முன்வைப்பதில்லை. குறிப்பாக பாலஸ்தீனர்களை அமெரிக்க ஹாலிவுட் படங்கள் வழக்கமாகச் சித்தரிக்கிற மாதிரி ஸ்பீல்பர்க் அவர்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கவில்லை.

பயங்கரவாதத்திற்கு எதிர்பயங்கரவாதம் அல்லது அரசபயங்கரவாதம் தீர்வு இல்லை, என்பதனையும் அவரது படத்தின் இறுதிக்காட்சியில் நாயகனான அவ்னர் சொல்லிச் செல்கிறான்.

“அறச்சமன்பாட்டின்’ அடிப்படையில் இந்தப் படத்தை விமர்சிப்பவர்கள், ராஜதந்திரம் என்பதனை அறச்சமன்பாட்டின் ஒரு நிகழ்முறையாகப் பார்க்கிறார்கள். யுத்தம் ஒன்றுதான் ஒரே பதில் எனவும் அவர்கள் சொல்கிறார்கள். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதென்பது பயங்கரவாதிகளை மனிதத் தன்மையற்றவர்களாகச் காண்பிப்பதிலும், அதன் மூலம் அவர்கள் குறித்த எந்தவிதமான கேள்விகளையும் தவிர்ப்பதிலும், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள, ஏன் இவ்வாறாக ஆனார்கள் என்ற கேள்விகளை இல்லாததாக்குவதிலும் தான் இருக்கிறது என அவர்கள் சாதிக்கிறார்கள். என்னளவில் நான் நம்புகிறேன் : ஒவ்வொரு பயங்கரவாத நடவடிக்கையும் கடுமையான எதிர்வினையைக் கோருகின்றன என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. அதே வேளையில், நாம் விளைவுகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்’ எனத் தனது மியூனிக் படத்துக்கான விமர்சனங்களுக்கு இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பர்க் எதிர்விணையாற்றுகிறார்.

2

1972 ஆம் ஆண்டு, ஜெர்மனியில் நடந்த மியூனிக் ஒலிம்பிக் பந்தயத்தில் பங்கு பெற வந்திருந்த இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை, ‘கறுப்பு செப்டம்பர்‘ இயக்கத்தைச் சேர்ந்த பாலஸ்தீனப் போராளிகள் கடத்திச் சென்றதை, பிரெஞ்சு இருத்தலியல் தத்துவவதியான ழான் பவுல் ஸார்த்தர்; தனது கட்டுரையொன்றில் ஆதரித்து எழுதினார். ‘கறுப்பு செப்டம்பர்’ போராளிகள் நிகழ்த்திய அந்தக் கடத்தல் பாலஸ்தீன தேசவிடுலைப் போராட்ட வரலாற்றில் இடம் பெறுகிறது.

1972 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் 5 ஆம் நாளன்று, அதிகாலை ஐந்து மணியளவில், மியூனிக் ஒலிம்பிக் பந்தயக் குடியிருப்பில் இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் தங்கியிருந்த விடுதியில் இந்தத் தாக்குதல் இடம் பெற்றது.

ஐந்து பாலஸ்தீனர்களும், பிற மூன்று பேருமாக 8 பேர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர். ‘இஸ்ரேலியச் சிறைகளில் வாடும் 200 பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும்’ என்பதுதான் போராளிகளின் கோரிக்கையாக இருந்தது. அப்போதைய இஸ்ரேலியப் பிரதமர் கோல்டா மேயர் பாலஸ்தீனர்களின் கோரிக்கையை உடனடியாக நிராகரித்துவிட்டார். ஜெர்மானிய உள்துறையமைச்சரும், ஒலிம்பிக் விளையாட்டுக் குழுத் தலைவரும், அரபுலீக் பிரதிநிதிகளும், டுனீசிய தூதரக அதிகாரியும் உள்ளிட்ட பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது.

பேச்சுவார்த்தைக் குழுவினருக்கும் பாலஸ்தீனப் போராளிகளுக்கும் ஒரு ஒப்புதல் ஏற்பட்டது. அதன்படி ஒலிம்பிக் தங்கும் விடுதியின் அருகிலிருக்கும் ஒரு ஜெர்மானிய ராணுவ தளத்திற்கு, உலங்கு வானூர்தியில் பாலஸ்தீனர்களும் இஸ்ரேலியப் பிணைக்கைதிகளும் 3 ஜெர்மானிய அதிகாரிகளும் செல்வதென்றும், அங்கிருந்து அவர்கள் விமானத்தின் மூலம் டுனீசியாவிற்கு எடுத்துச் செல்லப்படுவார்கள் எனவும் ஒப்பந்தம் ஆனது.

உலங்கு வானூர்தியிலிருந்து விமானத்துக்கு மாறும் தருணத்தில் ஒலிம்பிக் கமிடடியின் தலைவரிடமிருந்து ஒருசெய்தி வந்தது.

‘இஸ்ரேலியர்களுடன் பாலஸ்தீனர்கள் நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது’ என்பதுதான் அந்தச் செய்தி.

ஜெர்மானிய உலங்குவானூர்தியிலிருந்து விமானத்திற்கு மாறும் தருணத்தில் துப்பாக்கிகள் வெடித்தன. 11 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர். ஐந்து பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மூன்று பாலஸ்தீனர்கள் காயம்பட்டுப் பிற்பாடு பிடிபட்டனர். ‘நாங்கள்தான் முதலில் சுட்டோம் என நான் நினைக்கிறேன்’ என ஜெர்மானிய போலீஸ் தலைமையதிகாரி பின்னாளில் அது பற்றி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்குப் பேட்டியளித்தார். ‘இயற்கையாகவே போலீஸ்தான் முதலில் சுடவேண்டும்’ என பவேரிய உள்துறையமைச்சர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தனது சகோதர நாடுகளுடன் இணைந்து, பயங்கரவாதத்திற்கு எதிரான உலக அமைப்பை உருவாக்குவதென அமெரிக்கா அறிவித்தது. இந்தக் அமைப்பில் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. மற்றும் எப்.பி.ஐ பிரிவுகள் அங்கம் வகிக்கும் எனவும் சொல்லப்பட்டது.

வரலாற்றில் இந்தச் சம்பவம் ‘கறுப்பு செப்டம்பர்’ என்ற பெயரில் நிலைபெற்றிருக்கிறது.

‘கறுப்பு செப்டம்பர்’ சம்பவத்தின் அடிப்படையிலும், ‘கறுப்பு செப்டம்பர்’ சம்பவம் நடந்த ஒரு மாதத்தில் அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களைத் தேடித் தேடிக் கண்டு பிடித்துக் கொலை செய்த, இஸ்ரேலின் திட்டத்தின் அடிப்படையிலும், ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கின் படம் அமைகிறது.

படத்தின் விளம்பர வரிகள் இவ்வாறு சொல்கிறது : ‘மியூனிக் நகரில் பாலஸ்தீன கடத்தல்காரர்களால் 11 இஸ்ரேலிய விளையாட்டு விரர்கள் கடத்திக் கொல்லப்பட்டார்கள். பிற்பாடு என்ன நடந்துது என்பதனை மியூனிக் படம் சொல்கிறது’.

மியூனிக் விளையாட்டு அரங்கில் அமைந்துள்ள விளையாட்டு வீரர்களின் குடியிருப்புக்குள் நுழைவதற்காக, இரும்புக் கிராதியைக் கடந்து குதிக்க முயன்று கொண்டிருக்கிறார்கள் பாலஸ்தீனப் போராளிகள். அவர்களுக்கு அங்கு வந்த இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களே உதவுகிறார்கள். குடியிருப்பினுள் நுழையும் பாலஸ்தீனப் போராளிகள், இஸ்ரேல் விளையாட்டு வீரகளைக் கடத்துகிறார்கள். எதிர்ப்புக் காட்டுபவர்களைச் சுட்டுக் கொல்கிறார்கள்.

சம்பவம் உலகத் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகிறது. கடத்தப்பட்டமை, ஜெர்மானிய அரசு மற்றும் பாலஸ்தீனர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை, விமான ஓடுதளத்தில் நிற்கும் உலங்கு வானூர்தியிலிருந்து இறங்கி விமானத்தில் ஏற முயலும் போராளிகள், திடீரென அவர்களைச் சுட்டுக் கொல்லும் ஜெர்மானியப் போலிசாரின் நடவடிக்கை, பதட்டமுற்ற போராளிகள், கண்மண் தெரியாமல் இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களைச் சுடடுக்கொன்றமை, பிற்பாடு பரவும் அமைதி என, அனைத்துக் காட்சிகளையும் தனது வீட்டில் மனைவியுடன் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறான் இஸ்ரேலியனான அவ்னர்.

இஸ்ரேலிய தேசபக்தனின் மகனான அவனுக்கு கோல்டா மேயரைச் சந்திக்கச் சொல்லி அழைப்பு வருகிறது.

கோல்டா மேயர் அவனைத் தொட்டு வாஞ்சையாகத் தடவுகிறார். தனது பிரஜைகள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் திட்டத்தை அவரே முன்னின்று தலைமையேற்கிறார். பின் வந்த நாட்களில் பாரிஸ், லெபனான், இத்தாலி, லண்டன் என ஐரோப்பிய நகரங்களிலும், மத்தியக் கிழக்கு நகரங்களிலும், பாலஸ்தீனப் பிரதிநிதிகளும் கவிஞர்களும் மொழிபெயர்ப்பாளர்களும், பயங்கரவாதிகள் எனச் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

முதல் கொலை, இத்தாலியின் தலைநகர் ரோமில் அரங்கேறுகிறது. இரண்டாவதாக, 1972 ஆம் ஆண்டு டிசம்பரில் பாரிசில், பாலஸ்தீன விடுதலை இயக்கப் பிரதிநிதியான மொகமத் ஹம்ஸிரி தொலைபேசிக் குண்டு மூலம் கொல்லப்படுகிறார். தொடர்ந்து சைப்ரஸ், பாரிஸ், பெய்ரூத், ஏதென்ஸ் எனக் கொலைகள் அரங்கேறுகிறது.

நோர்வேயில் நடந்த லிலாமேயர் எனும் மொராக்கிய சமையற்காரரின் கொலைதான், இந்தச் சதித் திட்டத்தின் தோல்வியாக ஆகிறது. மூனிக் கொலைகளைத் திட்டமிட்டவராகச் சொல்லப்படும் யாசர் அராபத்தின் நெருங்கிய நண்பரான அலி ஹஸன் சலேமா எனத் தவறாகக் கருதப்பட்டு, அப்பாவியான மொராக்கிய சமையற்காரர் சுடடுக் கொல்லப்பட்ட பின்னால், மொசாத் உளவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு நோர்வேயில் அவர்கள் சிறைத் தண்டனை பெறுகிறார்கள்.

மொசாத் உளவாளிகள் நோர்வோ காவல்துறையினரிடம் தமது அரசின் திட்டங்கள் முழுவதையும் சொல்லிவிடுகிறார்கள். திட்டம் உத்தியோகரீதியில் கைவிடப்பட்டாலும், ஹஸன் ஸலாமே 1979 ஆம் ஆண்டு பெய்ரூத்தில் வைத்து, கார் குண்டு மூலம் கொல்லப்படுகிறார். இதற்கு உதவியாகச் செயல்பட்டவர் ஒரு பிரிட்டிஸ் பெண்மணி என்பதும் பிற்பாடு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

நோர்வே சம்பவம் ‘மியூனிக்‘ படத்தில் இடம் பெறவில்லை. அந்தச் சம்பவம் படத்தில் இடம் பெற்றிருக்குமானால் நிச்சயம் படத்தினது செய்தி திட்டவட்டமாக வேறொன்றாகவே இருந்திருக்க முடியும்.

அவ்னரின் தலைமையில் இந்தக் கொலைகள் அரங்கேற்றம் பெறுகிறது.

அன்றைய தினம் அரசியல் பிரச்சினைகளாக இருந்த கெடுபிடியுத்தம், சோவியத் கம்யூனிசம், கிறித்தவ அராஜகவாத அரசியல் சித்தாந்தம், ஜெர்மானிய வன்முறை இயக்கமான ‘பாதார் மெயின் காம்பின்’ நடவடிக்கைகள் போன்றவற்றின் பின்னணியில் கதை சொல்லப்படுகிறது.

லெபனான் வந்து தங்கும் அவனர் குழு தன்னை ‘பாதர் மெயின் காம்ப்’ குழவினர் எனக் கோரிக்கொள்கிறது. இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கும் அவ்னருக்கும் இடையில், பாலஸ்தீனப் பிரச்சினை, தேசிய விடுதலை தொடர்பான உரையாடல் நடக்கிறது. சோவியத் யூனியன் பற்றி விமர்சனம் கொண்ட மாபியா கும்பல், அவ்னருக்கு உதவி செய்ய, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் தேடித்தேடி கொல்லப்படுகிறார்கள்.

விடுதலை இயக்கத்திற்கு உதவி செய்தவள், அதே வேளையில் தமது உளவுக்குழு உறுப்பினரோடு அவரை ஏமாற்றிப் பாலுறவு கொண்டபின், அவனைக் கொலை செய்தவள் என்கிற காரணத்திற்காக, அரபுப் பெண்ணைத் தேடிக்கொல்லும் மொசாத் குழவினர, அவளை அவளது பெண் குறி வெளிப்படையாகத் தெரிகிற மாதிரி, அம்மணமாக விட்டுச் சென்று அவமானப்படுத்துகிறார்கள். அவளது மார்பிலும் பாலுறுப்பிலும் துளைகள் வீழந்திருக்க, இரத்தவெள்ளத்தில் அவளது மயிரடர்ந்த பெண்ணிறுப்பு விரியத் திறந்திருக்க விட்டுச் செல்லப்படுகிறாள்.

இந்தக் கொலைகள் வரலாற்றுரீதியில் நார்வே அரசின் நடவடிக்கையால் முடிவுக்கு வருகிறது.

ஒருவகையில் இஸ்ரேலினது திட்டம் ஐரோப்பிய நாடொன்றினால் கண்டுபிடிக்கப்பட, மொசாத் உளவாளிகள் தமது குற்றங்களை ஒப்புக்கொள்ள, அவர்களுக்கு நோர்வே அரசு சிறைத் தண்டனை விதிப்பதுடன் முற்றுப்பெறுகிறது.

உலக அளவில் எழுந்த கண்டனத்தின் பின் இஸ்ரேலினது திட்டம் கைவிடப்படுகிறது. காரணம் நோர்வே நாட்டில் அவர்களால் பாலஸ்தீன இயக்கத்தவர் என்று சுட்டுக் கொல்லப்பட்டவர், நியாயத்தில் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த அப்பாவியான ஒரு சமையற்காரர் ஆவார். அவரது கர்ப்பிணி மனைவியும் அந்தச் சம்பவத்தில் கொல்லப்படுகிறார்.

பிற அனைத்துச் சம்பங்களும் ஸ்பீல்பர்க்கின் படத்தில் இடம்பெற இந்த முக்கியமான சம்பவம் மட்டும் படத்தில் இல்லாமல் போகிறது.

வரலாற்றுச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இப்படத்தில், இரண்டு வரலாற்று உண்மைகள் முற்றிலும் இல்லாது போகிறது. கோல்டா மேயரின் இந்தத் திட்டம் படுதோல்வியடைகிறது என்பது மட்டுமல்ல, சர்வதேசியச் சமூகத்தினால் இது பயங்கரவாதம் எனச் சுட்டிக்காட்டப்பட்டு, அவரது உளவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள் எனும் உண்மையும் இங்கு இல்லாமல் போகிறது. கொல்லப்பட்டவர்களில் பலர் ‘கறுப்பு செப்டம்பர்’ சம்பவத்தில் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள் என்பதும் இங்கு இல்லாது போகிறது.

படத்தில் இந்தத் திட்டம் செயல்பட முடியாமல் போவதற்கான மனித காரணமாக அல்லது உளவியல் காரணமாக, ஸ்பீல்பர்க்கும் டோனி கிஸ்னரும் சொல்வதுதான் என்ன?

தொடர்ந்து கொலைகளைக் குரூரமாகச் செய்யும் அவ்னர் குற்ற உணர்வினால் பீதியடைகிறான். அவனால் தன்னுடைய அறைக்குள் படுக்கையில் நிம்மதியாகத் தூங்க முடிவதில்லை. தான் எந்த நிமிடமும் கொல்லப்படலாம் எனும் அச்சம் அவனை சதா ஆட்டிப்படைக்கிறது.

இந்தக் கொலைகளின் விளைவுகள்தான் என்ன? இதனால் பிரச்சினைகள் தீரப்போகிறதா? கொலைகளுக்குப் பதில் கொலைகள், எப்படி சமாதானத்தைக் கொண்டு வரும்? பழிவாங்குதல் அரசியல் அறம் சார்ந்த விசயம்தானா? கொலையுண்டவர்களுக்கும் மனைவியரும் குழந்தைகளும் இருப்பார்களே, அவர்களது நிலை என்ன? போன்ற கேள்விகள் அவ்னரை ஆட்டிப்படைக்கின்றன.

கொலைக்குப் பதில் கொலையாக இருக்க முடியாது. மாறாக பாலஸ்தீனப் போராளிகளின் வன்முறையின் பின்னிருந்த அரசியல் காரணங்கள் என்ன என்பதனையும் பார்த்து, அந்தப் பிரச்சினைகள் களையப்பட வேண்டுவதுதான் சரியான பதிலாக இருக்க முடியும் எனும் நிலைபாட்டுக்கு வருகிறான் அவ்னர்.

‘உரையாடல் ஒன்றுதான் தீர்வுக்கு வழியே அல்லாமல், வன்முறையோ பதிலுக்குப் பதிலான கொலைகளோ அல்ல’ என்பதனை அவ்னர் அறிகிறான். மொசாத் தலைவரிடம் தனது எண்ணத்தை வெளியிடுகிறான். அவனது கருத்துக்கள் எதனையும் மொசாத் தலைவர் ஏற்பவராக இல்லை.

அமெரிக்க மன்ஹாட்டன் நகரத்தின் உயர்ந்த கட்டிடங்களின் பின்னணியில் தூரத்துக் காட்சியொன்றில் அவ்னரும், மொசாத் தலைவரும் பரஸ்பரம் முதுகைக் காட்டியபடி வேறுவேறு திசைகளில் நகர்வதுடன் மூனிக் படம் நிறைவு பெறுகிறது.

புனைவு இப்படி முடிவுபெற, நிஜம் வேறாக இருக்கிறது.

நோர்வே அரசின் கைது நடவடிக்கையுடனும், இஸ்ரேலியக் கொலையாளிகளான மொசாத் உளவாளிகள் தண்டனை பெறுவதுடனும்தான்; இந்தத் திட்டம் நிஜத்தில் கைவிடப்படுகிறது.

3

படத்தின் ‘சொல்முறையும் கதை நிகழும் கருத்துக் களமும்’ மிகுந்த தொழில்நுட்ப மேதமையும், சமகால அரசியல் முக்கித்துவமும் கொண்டது.

‘மியூனிக்’ திரைப்படம், மிகமுக்கியமான, நேர்த்தியாக எடுக்கப்பட்ட, ஒரு அரசியல் திரைப்படம் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. வன்முறையும், வன்முறையினின்றும் தப்பித்தலாக உக்கிரமான பாலுறவும், திரைப்படத்தில் மிக நேர்த்தியாகச் சித்தரிப்புப் பெறுகிறது. குண்டுவெடிப்புக் காட்சிகளிலும், கடத்தில் நாடகக் காட்சிகளிலும், நிதானமும் அவசரமும் சமவிகிதத்தில் செயல்படுகிறது. யூத முகாரியிலான இசைத் துண்டுகள், உக்கிரமும் தணிப்பும் கொண்ட சொல்முறைக்கு இயைபாகச் செயலாற்றுகிறது.

‘மியூனிக்’ விமான நிலையக் கொலைக் காட்சிகள், பாரிசில் நிகழும் குழந்தை மற்றும் அவளது தாய்தவிர்த்த, பாலஸ்தீன இயக்கப் பிரமுகரின் கொலைக் காட்சிகள், அவ்னர் அவனது மனைவியுடன் பாலுறவு கொள்ளும் காட்சிகள் போன்றவற்றில் மானுட நாடகம் மிக நேர்த்தியாகக் காட்சியாகிறது.

படத்தின் கதைக்களம் எழுபதுகளில் இடம்பெறுகிறது. அன்றைய தினம் முக்கியமான அரசியல் நம்பிக்கைகளாக இருந்த, வன்முறை அரசியல் (சிவப்புப் படையணி – லெபனானிய அதிரடிக் கொலைக் குழுக்கள் – ஐரோப்பிய அராஜகவாதக் குழுக்கள்) மிக விரிவாக வசனங்களில் விவாதிக்கப்படுகிறது.

‘தேசியம் ஒருவரது தங்குமிடம் அல்லது ஒருவரது ஆன்ம வீடு’ எனும் ஆதாரமான கருத்தியல் படத்தில் விவாதப் பொருளாகிறது.

பாலஸ்தீனரது அரசியலும் இஸ்ரேலியரது அரசியலும் – இயக்க பயங்கரவாதம் மற்றும் அரச பயங்கரவாதம் – போன்றன விவாத்திற்கான பொருளாக ஆகிறது. மாபியா குழுக்கள் மற்றும் கெடுபிடிப்போர் அரசியல் பேசுகிற அறவியல்புக்காரர்களையும் படம் தன்னுள்ளே கொண்டிருக்கிறது.

எழுபதுகளில் கட்டற்ற வகையில் விரிந்த பாலுறவு நடவடிக்கைகள் கூட, மனிதர்களுக்கிடையிலான உறவுகள் அரசியல் பரிமாணம் பெறுவதில், ஊடாடிச் செல்வதாகப் படம் இருக்கிறது.

சோவியத் யூனியன், அமெரிக்க ஏகாதிபத்தியம், சிஐஏ, கேஜிபி, பாதார் மெயின் கேம்ப், அராஜகவாதம், கம்யூனிசம், பாலஸ்தீன விடுதலை இயக்கம், தனிநபர் பங்கரவாதம் என எழுபதுகளின் அரசியலில் அனைத்தும் தழுவியதாக, கதைக்களமும், வசனம் பேசப்படுகிற வெளிகளும் படத்தில் இடம் பெறுகிறது.

கதை நிகழும் காலம் குறித்த மிகப்பரந்த அளவிலான படிப்பும், அரசியல் கடப்பாடும், மேதைமையும் இல்லாமல், இம்மாதிரியான ஒரு உரையாடல் திரைப்படத்தில் சாத்தியமில்லை.

வலதுசாரி அரசியல் தரிசனத்திற்கும், தாராளவாத உலகியல் பார்வைக்கும் இடையில் அல்லாடும், ஒரு அரசியல் கண்ணோட்டம் கொண்டவர் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க். அவரது முன்னைய அரசியல் படங்களான ‘ஸின்ட்லர்ஸ் லிஸ்ட்’, ‘சேவிங் பிரைவேட் ரயான்’, ‘இன்டியான ஜோன்ஸ் அன்ட் டூம்ஸ் டால்’, ‘அமிஸ்தாத்’, ‘கலர் பர்ப்பிள்’ போன்ற படங்களில், அவரது அந்தத் தடுமாற்றத்தைக் கதை சொல்லுதலிலும், வசன அமைப்புகளிலும், காட்சிகளின் சொல்முறையிலும் ஒருவர் காணவியலும்.

ஆனால், ஸ்பீல்பர்க்கின் உலகியல் பார்வையையும் மீறி, ‘மியூனிக்’ படத்தில் செயல்பட்டிருக்கும் அரசியலுக்கான பாராட்டு, நிச்சயமாக டோனி குஸ்னரைத்தான் சென்று சேரும். மார்க்சியரும், சோசலிஸ்ட்டும், இன்றளவும் மார்க்சிய அரசியல் பகுப்பாய்வில் தனது நம்பிக்கையை வெளியிடுபவருமான, வசனகர்த்தா குஸ்னரைத்தான் இந்தப் பெருமை சென்று சேரும்.

சமகாலத்தன்மை என்கிறபோது கதை நிகழும் காலத்தின் சமகாலத்தன்மை மட்டுமல்ல, திரைப்படம் வெளியாகியிருக்கும் இரண்டாயிரம் ஆண்டுகளின் பின்னான, பின் செப்டம்பர் சமகாலமும் இப்படத்தில் இருக்கிறது. பயங்கரவாதம், அதன் மீதான பழிவாங்கும் தன்மையிலான அரச பயங்கரவாதம், போன்றவற்றின் அறத்தன்மையை இந்தப்படம் கேள்விக்கு உள்ளாக்குகிறது.

பயங்கரவாதம் என்று சொல்வதின்; பின்னுள்ள அரசியல் காரணத்தின் பொறுத்தத் தன்மையை செவிமடுக்க வேண்டும் என்பதனையும் இந்தப்படம் கோருகிறது.

படம் குறித்த விமர்சனங்களின் மீதான டோனி குஸ்னரின் கருத்தாடல் ஒரு தளத்தில் அமைகிறது. ஸ்பீல்பர்க்கின் கருத்தாடல்கள் பிறதொரு தளத்தில் அமைகிறது.

பயங்கரவாதம் என முத்திரை குத்திக் கொன்றொழிப்பதை குஸ்னர் மறுதலிக்கிறார். இப்படிக் கொன்றொழிப்பதின் மூலம் அரசியல் உரையாடலை இல்லாமலாக்குகிற இஸ்ரேலிய வலதுசாரிகளை அவ

ர் கேள்விக்கு உள்ளாக்குகிறார். பாலஸ்தீனப் பேராளிகளைப் படம் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தவில்லை. அன்பும் காதலும், பாசமும் காரணகாரிய அறிவும், விடுதலைத் தேட்டமும் மீட்சியும், கொண்ட மனிதர்களாகவே இப்படத்தில் பாலஸ்தீனப் பேராளிகள் சித்தரிக்கப்படுகிறார்கள். தீமையின் உருவமாகப் பாலஸதீனப் போராளிகள் ஆதாரத்தில் இப்படத்தில் சித்தரிப்புப் பெறுவதில்லை. சம அளவில் அரச பயங்கரவாதத்தை நிகழ்த்தும் மொசாத்தினர் குற்ற உணர்வு கொண்டவர்களாக, பயங்கரத்தின் விளைவுகளை எதிர்கொள்ளும் பீதிகொண்டவர்களாக, இப்படத்தில் சித்திரிப்புப் பெறுகிறார்கள். குஸ்னர், பயங்கரவாத்தின் அரசியல் கொள்கைகள் பரிசீலிக்கப்பட வேண்டியவை என்பதையே தனது பல நேர்முகங்களிலும் வலியுறுத்துகிறார். ஸ்பீல்பர்க் இப்பொழுதும் தனது முதல் காதல் இஸ்ரேலிடனிமும் அமெரிக்காவினிடமும்தான் இருக்கிறது என்கிறார். பயங்கரவாத்திற்கு எநதவிதத் தயக்கமும் இல்லாமல் உறுதியுடன் எதிர்விணை செய்ய வேண்டும் என்கிறார். பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்கிறார். பிற்பாடு ஸபீல்பர்க்கின் எச்சரிக்கைதான் என்ன? பயங்கரவாதிகள் மீது தாக்குதல் தொடுக்கும்போது கூட, தவறு நேர்ந்துவிடாமல், நீதியுணர்வுக்குப் பங்கம் நடந்துவிடாமல், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் அவர். மிகப் பிற்போக்கான இஸ்ரேலிய இனவெறியனான ஆரியல் ஸரோனது உதவியாளர்கள், மியூனிக் திரைப்படத்தை இஸ்ரேலில் திரையிட ஸ்பீல்பர்க்குக்கு உதவி செய்கிறார்கள். இஸ்ரேலின் நலனுக்காகத்தான்; இந்தத் திரைப்படத்தைத் தான் எடுத்திருப்பதாகவும் ஸ்பீல்பர்க் குறிப்பிடுகிறார். தொடர்ந்து, பாலஸ்தீனம்-இஸ்ரேல் என இரு தரப்பிலுமுள்ள பள்ளிக் குழந்தைகளுக்குத் தத்தமது பிரச்சினைகளைச் சொல்ல, ஒளிப்படக் கருவிகளையும் ஸ்பீல்பர்க் வாங்கிக் கொடுத்திருக்கிறார். பாலஸ்தீன-இஸ்ரேலியர் இடையிலான நல்லெண்ணம் வளரத் தான் விரும்புவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். கதைக் களத்தின் மையமாக இருப்பவர்கள், கதாநாயகர்களாக இருப்பவர்கள் இஸ்ரேலிய மொசாத்தினர்தான். பாலஸ்தீனர்களோ, பாலஸ்தீன இயக்கத்தவர்களோ இங்கு கதையின் மையமாகவும் இல்லை. கதாநாயகர்களாகவும் இல்லை. இங்கு குற்றவுணர்வுக்கு உள்ளாகிறவர்களும், பதில்களைத் தேடுகிறவர்களும், தமக்கான நியாயத்தை முன்வைப்பவர்களாகவும் இருப்பவர்கள் இஸ்ரேலியர்கள்தான். கோல்டா மேயர், ‘பாலஸ்தீனர்களைக் கருணையற்றுக் கொல்ல வேண்டும்’ எனச் சொல்கிற அதே போழ்தில், தனது பிரஜைகளைத் ‘தனது குழந்தைகள்’ என்கிறார். அவர்கள் மீது தீராத அன்பு கொண்டவராக அவர் இருக்கிறார். ஒரு வகையில் தனக்கு விசுவாசமான, தன்னைச் சுற்றிய மனிதர்களைத் தீவிரமாக நேசித்த, இட்லரது பண்புகள் அனைத்தையும் கொண்ட, இரத்தமும் சதையுமானவராகவே கோல்டா மேயரும் இருக்கிறார். 4 ‘மியூனிக்’ குறித்துப் பல்வேறு விதமான கடுமையான விமர்சனங்களும் இருக்கிறது. நியூயார்க் நகரிலுள்ள இஸ்ரேலிய தூதரக அதிகாரி, ‘படம் வரலாற்றுத் தவறுகள் கொண்டது மட்டுமல்ல,பயங்கரவாதத்தையும் நியாயப்படுத்துகிறது’ எனச் சொல்லியிருக்கிறார். ‘பாலஸ்தீனப் பயங்கரவாதத்தையும், இஸ்ரேலிய தற்பாதுகாப்புத் தாக்குதலையும் படம் சமஅளவில் வைத்துப் பார்க்கிறது என்றால், அது தவறு’ எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவின் இஸ்ரேலிய தேசபக்தக் குழுக்கள், ஸ்பீல்பர்க் தமது இனத்திற்குத் துரோகம் செய்துவிட்டதாகக்; கடுமையாக விமர்சித்திருக்கின்றன. ஆனால், ஸபீல்பர்க் படுகொலையுண்ட யூத மக்களுக்கான அருங்காட்சியகமொன்றை அமெரிக்காவில் அமைத்திருப்பவர். அதற்கென ஒரு நிரந்தரமான அமைப்பையும் உருவாக்கி இருப்பவர். தொடர்ந்து இஸ்ரேலிய அரசின் கடப்பாடுடைய ஆதரவாளராக இருப்பவர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க். படத்தின் சமத்தன்மையுள்ள உரையாடலே வலதுசாரி இஸ்ரேலியர்களுக்குச் சகிக்க முடியாததாக இருக்கிறது. படத்தின் செய்திக்குக் காரணம், டோனி குஸ்னர் என்கிற மாரக்சிஸ்ட்டைக் கதை எழுதச் சொன்னதுதான் என்றும், சோசலிஸ்ட்டான அவர் இஸ்ரேல் எனும் நாட்டைத் தொடர்ந்து விமர்சித்து வரும் இனத்துராகி எனவும் அவரை வலதுசாரிகள் விமர்சித்திருக்கிறார்கள். இன்னொரு இஸ்ரேலிய விமர்சகரான நோம்சாமஸ்க்கி போலவே, டோனி குஸ்னரும் பிறப்பால் ஒரு யூதர் என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது. படத்திற்கு வந்த கடுமையான எதிர்மறை விமர்சனங்களில் முக்கியமானது, கனடிய எழுத்தாளரான ஜோர்ஜ் ஜொனாசினுடையது. அவரது புத்தகமான ‘பாழிவாங்குதல்’ எனும் நூலின் அடிப்படையில்தான் ‘மியூனிக்’ படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் மீதான தனது ஆட்சேபமாக அவர் கூறுகிறபோது, ‘புத்தகத்தின் மிகமுக்கியமான செய்தியை திரைப்படம் தவறவிட்டிருக்கிறது’ எனக் குறிப்பிடுகிறார். ‘தீமையின் உருவமாக இருப்பவர்கள் பாலஸ்தீனப் பயங்கரவாதிகள். இவர்களின் மீது தயக்கமற்ற கடப்பாட்டுடன் போர் புரிகிறவர்கள் மொசாத் உளவாளிகள். அவர்கள் மேற்கொண்ட கொலைகளின் மீது அவர்களுக்கு எந்தவிதமான விமர்சனமும் இல்லை. அவர்களுக்குக் குற்றவுணர்வும் இல்லை. கதாநாயகனாக வருகிற உண்மையான அவ்னருக்குப் படத்தில் வருகிற மாதிரி, கலக்கமோ அல்லது பீதியோ அல்லது குற்றவுணர்வோ எதுவுமே இல்லை. அன்று செய்தது, இன்றும் சரி என்றுதான் அவர் குறிப்பிடுகிறார். கேள்வி என்பதற்கே அன்றும் இன்றும் இடமில்லை’ என ஜொனாஸ் குறிப்பிடுகிறார். ‘எனது நூலினது செய்தியும் அதுதான்‘ என்கிறார் ஜோர்ஜ் ஜொனாஸ். ‘பாலஸ்தீனர்களை மனிதர்களாக ஸபீல்பர்க்கின் படம் சித்தரிக்கிறது. ஆனால் என்னுடைய நூலின் முக்கியச் செய்தியே அவர்கள் தீமையின் உருவம் என்பதுதான்’ என்கிறார் அவர். ‘திரைப்படம் தனக்கு மிகவும் ஏமாற்றம் கொடுத்ததாகவும்’ அவர் குறிப்பிடுகிறார். அவரது நூல் முழுக்க முழக்க மொசாத் உளவாளிகளை உன்னதப்படுத்தி, அவர்களது கொலைகளைக் கொண்டாடி எழுதப்பட்டது எனும் செய்தி இங்கு மிக அவசியமாகப் பதியப்பட வேண்டியதாகும். ‘மனிதர்களை அரக்கர்களாகச் சித்தரிக்காததன் வழி, அரக்கர்களை மனிதர்களாகச் சித்தரிக்கிற காரியத்தை ஸ்பீல்பர்க்கும் குஸ்னரும் செய்திருக்கிறார்கள். பயங்கரவாதிகளை இவர்கள் மனிதர்களாகக் காட்டியிருக்கிறார்கள். இது புத்தகத்தின் செய்திக்கு முற்றிலும் விரோதமானது’ என்கிறார் ஜோர்ஜ் ஜொனாஸ். ஸபீல்பர்க்கின் அரசியல் என்றுமே இஸ்ரேலிய ஆதரவு அரசியல்தான். ‘அரசியல் ரீதியிலும், அற அடிப்படையிலும், தான் சுயமாகச் சிந்திக்கத் துவங்கிய நாட்களிலிருந்து, தான் ஒரு உறுதியான இஸ்ரேலிய ஆதரவாளன்’ என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார். அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிராக நடத்தம் யுத்தம் தொடர்பாகவும், பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலின் எதிர்விணை தொடர்பாகவும், தான் கேள்வி எழுப்புகிறேன் என்கிறார் அவர். என்ன காரணத்திற்காக அவர் இப்போது கேள்வி எழுப்புகிறார்? ‘உலகில் இப்போது யூதவிரோதமும், இஸ்ரேலின் மீதான வெறுப்பும் அதிகரித்து வருவது குறித்து, தான் கவலைப்படுவதாக’ ஸ்பீல்பர்க் தெரிவிக்கிறார். அந்த வகையில் பயங்கரவாத்திற்கு எதிரான தாக்குதலைக் கொள்கையளவில் ஏற்கும் ஸ்டீபன் ஸ்பீல்பர்க், ‘நடைமுறையில் நிதானம் வேண்டும்’ என்கிறார். ‘தாக்குதல் செய்வதற்கு முன்னால், எதிரியைத் திட்டவட்டமாக உறுதிப்படுத்திக் கொண்டு, மிகப்பெரிய சிவிலியன் சாவுகள் இல்லாமல், இதனைச் செய்ய வேண்டும்’ என்கிறார் ஸ்பீல்பர்க். ‘அவசியமானானல் நான் அமெரிக்காவுக்காகவும் இஸ்ரேலுக்காகவும் மரணமுறவும் தயாராக இருக்கிறேன்’ எனச் சொல்கிறார் ஸ்பீல்பர்க். பயங்கரவாத்திற்கு எதிரான தாக்குதலும், பாலஸ்தீனர்களுக்கு எதிரான தாக்குதலும் நடத்தப்படும் முறைதான் ஸபீல்பர்க்குக்கு ஆட்சேபனைக்குரிய விஷயமேயொழிய, கொள்கையளவில் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் தான் முழுக்க ஆதரித்து நிற்பதாகவே அவர் 

தெரிவிக்கிறார்.

 

அமெரிக்க இஸ்ரேலிய தேசபக்த நிலைபாட்டிலிருந்தே ‘மியூனிக் திரைப்படம் வெளியாகியிருக்கிறது எனும் ஸ்பீல்பர்க், ‘லாஸ் ஏஞ்ஜல்ஸ் டைம் பத்திரிகைக்குக் கொடுத்த நேரமுகத்தின்படி, ‘இந்தப்படம் எந்த வகையிலும் இஸ்ரேல் மீதான தாக்குதலாக ஆகாமல் பார்த்துக் கொள்வதில் அவரே சொல்கிறபடி, அவர் ‘அதிகக் கவனம் எடுத்துத்தான் இருக்கிறார்.

 

படத்தின் கதைக் கட்டமைப்பு, ஹாலிவுட் பாணிக்கும் ஐரோப்பிய பாணிக்கும் இடையில் நிற்கிறது.

 

பார்iயாளர்கள் எப்போதுமே சார்பு நிலை கொண்டிருக்கும் கதாநாயகர்களாக மொசாத் உளவாளிகள் வருகிறார்கள். கதாநாயகர்களாக அவர்கள் செய்வது நியாயம் எனப் படம்; சொல்கிறது. அவர்கள் தோற்றுப் போக் கூடாது, அவர்கள் திட்டம் வெற்றி பெற வேண்டு எனப் பார்வையாளன் நினைக்கிறான். அவர்கள் தமது திட்டம் தவறாகாமல் இருக்க வேண்டும், எவரிடமும் அவர்கள் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது, எனப் பார்வையாளனை உந்திச் செல்வது என்பது, ஹாலிவுட் கதாநாயகன்வில்லன் கதை சொல்லலின் முக்கியமான அங்கம்.

 

நிஜத்தில், கோல்டா மேயரின் தோற்றுப்போன திட்டம், படத்தின் கதைக்குள் வராமல் பார்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

 

படம் தனது முக்கியமான பாத்திரங்களாக நிறைய ஐரோப்பிய வழித்தோன்றல் யூதர்களைக் கொண்டிருக்கிறது. இஸ்ரேலில் இருக்கும் அவ்னரோடு இந்தத் திட்டத்தில் செயல்படும் யூதர்கள், தென் ஆப்ரிக்கா, பெல்ஜியம், ஜெர்மன் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களாகவும் யூதத் தொழில்நுட்ப வல்லுனர்களாகவும் கைவினைஞர்களாகவும் இருக்கிறார்கள். ஸ்பீல்பர்க்கின் முன்னைய படமான ‘ஷின்ட்லர்ஸ் லிஸ்ட் படத்தில் யூதராக வரும் பென் கிங்க்ஸியின்; கைவினைத் தொழில் மேதமையை ஓருவர் இங்கே ஞாபகம் வைத்துக் கொள்ளலாம். கொலைக் குழுவில் ஈடுபடும் இஸ்ரேலியர்களில் ஓருவர் வேகமான வாகனசாரதி, மற்றவர் பொம்மைகள் செய்வதில் வல்லவரான குண்டுத் தயாரிப்பாளர், மற்றவர் துப்புரவு செய்பவர், பிறிதொருவர் புத்தக விற்பனையாளரான போலி ஆவணக்காரர். கதையமைப்பில் இடம் பெறும் யூதர்களின் வழி, படத்திற்கு கூடுதலான ஐரோப்பியத் தன்மையையும், சர்வதேசியத் தன்மையையும் ஸ்பீல்பர்க் வழங்கியிருக்கிறார்.

 

கதையின் இடையில் இடம்பெறும், வாழ்வும் மரணமும் தொடர்பான பிம்பங்களை படம் நெடுகிலும் படரவிட்டு, வாழ்வும் மரணமும் சதா அருகருகில் இருக்கிறது எனும் தத்துவதரிசனம் ஒன்றையும் ஸ்பீல்பர்க் வழங்குகிறார்.

 

படத்தின் வசனங்கள் ஹாலிவுட் படங்கள் போல ஒற்றைப்பட்டைத் தன்மையானது அல்ல. பன்முகக் கருத்துக்களும் வருமாறான உரையாடலை படத்திற்கு வரலாற்றுரீதியிலான சான்றுகளுடன் டோனி குஸ்னர் வழங்கியிருக்கிறார். படம் பெற்றிருக்கும் ஆக்கபூர்வமான தன்மைகள் அனைத்தும் இந்த உரையாடல்களின் தர்க்கத்தில் விளைவைதேயாகும்.

 

5

 

மியூனிக் படம் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணம், அது முன்வைத்திருக்கும் பாலஸ்தீனப் பிரச்சினையின் சர்வதேசிய முக்கியத்துவம். இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சினை இன்றைய சூழலில் நிறையக் குழப்பியடிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் தமிழகத்திலும் இந்துத்துவம் இந்திய முஸ்லீம் மக்களின் பாலான தனது வெறுபபுணர்வை அரசியல் ரீதியிலும் கருத்தியல் ரீதியிலும் திரட்டிக் கொள்வதற்கு, இஸ்ரேலை ஆதரித்து நிற்பது என்பதனை ஒரு கலாச்சார அரசியலாக முன்வைத்திருக்கிநது.

 

சமவேளையில் பாலஸ்தீன விடுதலையைப் பாதுகாத்து நிற்கவேண்டும் என நினைக்கும் இந்திய முஸ்லீம் அறிவுஜீகள் சிலரிடம், வரலாற்று ரீதியில் குருட்டுத்தனமான இஸ்ரேலிய வெறுப்பணர்வு வெளிப்படுகிறது. யூதர்களை இட்லர் கொன்றொழித்தது சரியானதுதான், எனும் இஸ்லாமிய அடிப்படைவாத நிலைப்பாட்டை அடியொற்றியது இப்பார்வை. ‘யூதப் படுகொலையே நடக்கவில்லை என வெள்ளையினவாதிகள் சொல்லிவருவதற்கு கொஞ்சமும் குறையாதது இந்த நிலைப்பாடு.

 

வரலாற்றுரீதியில் படுகொலைக்கு ஆளான ஒரு இனம் யூத இனம் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. அன்று பாசிஸ்ட்டுகளால் 60 இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால், வரலாற்று ரீதியில் இட்லர் மேற்கொண்ட அதே விதமான இனக் கொலையை இன்று இஸ்ரேலிய இனவெறியர்கள் செய்துவருகிறார்கள்.

 

பாலஸ்தீன மக்களை அவர்கள் இனச்சுத்திகரிப்புச் செய்துவருகிறார்கள். வரலாற்றுரீதியில் இனக்கொலைக்கு உள்ளான ஒரு இனம், இன்று இனக்கொலையைச் செய்து வருகிறது.

 

இந்துத்துவவாதிகள் சௌகர்யமாக இதனை மறைத்துவிட்டு, இஸ்ரேலிய ஆதரவாளர்களாகத் தம்மைப் பிரகடனப்படுத்திக் கொள்கிறார்கள்.

 

யூதர்களின் பியானோவில் மரண ஓலமும் துயரும்தான் வழிந்திருக்கிறது. பாலஸ்தீன மக்களின் தோட்டங்களில் ஆலிவ் மரக்கிளைகளை புல்டோசர்கள் கொண்டு இன்று அழித்துக் கொண்டிருப்பவர்களும் இவர்கள்தான்.

 

பாலஸ்தீனத்தின் முறிந்த ஆலிவ் மரக்கிளைகளில் இன்று வழியும் துயரும், அன்று யூதக் கலைஞனின் பியானோவில் வழிந்த அதேதுயரை ஒத்ததுதான் என்பதை யூதர்கள் புரிந்துகொள்ளாததுதான் வரலாற்றின் மகத்தான சோகம்.

 

 

One thought on “ஸ்டீபன் ஸ்பீல்பர்க் : பயங்கரவாதமும் விடுதலை வேட்கையும் -யமுனா ராஜேந்திரன்”

  1. *//சமவேளையில் பாலஸ்தீன விடுதலையைப் பாதுகாத்து நிற்கவேண்டும் என நினைக்கும் இந்திய முஸ்லீம் அறிவுஜீகள் சிலரிடம், வரலாற்று ரீதியில் குருட்டுத்தனமான இஸ்ரேலிய வெறுப்பணர்வு வெளிப்படுகிறது. யூதர்களை இட்லர் கொன்றொழித்தது சரியானதுதான், எனும் இஸ்லாமிய அடிப்படைவாத நிலைப்பாட்டை அடியொற்றியது இப்பார்வை. ‘யூதப் படுகொலையே நடக்கவில்லை‘ என வெள்ளையினவாதிகள் சொல்லிவருவதற்கு கொஞ்சமும் குறையாதது இந்த நிலைப்பாடு.\\
    அடிப்படைவாதம் என தாங்கள் சொல்வது எனக்கு சரியாக புரியவில்லை தயை கூர்ந்து தெளிவு படுத்தவும்

Comments are closed.