ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பு

Scotlandஸ்கொட்லாந்து தனியாகப் பிரிந்து செல்வதற்கான பொதுசன வாக்கெடுப்பு இன்று  18.09.2004 நடைபெற்றது.  பிரித்தானியாவில் கூடுகட்டி வாழ்ந்துகொண்டு தமிழ் ஈழம் பிடித்துத் தருவதாகப் படம் காட்டும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தமது கொல்லைப் புறத்தில் நடைபெறும் பிரிந்து செல்வதற்கான போராட்டம் தொடர்பாக மூச்சுவிடக்கூட இல்லை.

ஸ்கொட்லாந்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான எட் மிலிபாண்ட் எடின்பரோ தெருக்களில் வைத்துத் தாக்கப்பட்டிருக்கிறார். பல்தேசிய வியாபார ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் உட்பட பலர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பாடுள்ளது.

பிரித்தானியா முழுவதும் புதிதாக ஒழுங்கமைக்கப்படும் பொருளாதார அமைப்பினால் ஸ்கொட்லாந்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட இந்தப் பாதிப்பு பிரித்தானியா முழுவதும் வாழும் மக்களுக்கானது. இதிலிருந்து விடுபட்டுக்கொள்வதற்கு பிரிந்து சென்று தனிநாடு அமைத்தாலே போதுமானது என்று ஸ்கொட்லாந்து மக்கள் எண்ணுகிறார்கள். பிரிந்து செல்லும் உரிமையைப் பெற்றுள்ள ஸ்கொட்லாந்து மக்கள் தீர்மானித்தால் அவர்கள் தனியாட்சி அமைத்துக்கொள்ளலாம்.

தனிநாடாகப் பிரிந்தாலும் ஸ்கொட்லாந்து பிரித்தானியாவின் பணமான ஸ்டேலிங்கையே பயன்படுத்தும் என்று ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி தெரிவிக்கிறது. அவர்கள் முதலாளித்துவத்தினது நெருக்கடிக்குள் தம்மை மேலும் மேலும் அமிழ்த்திக்கொள்வதற்கான அறிகுறியையே தேசியவாதக் கட்சி தெரிவிக்கிறது. கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் 49 வீதமானவர்கள் பிரிவினைக்கு ஆதரவாகவும் 51 வீதமானவர்கள் எதிராகவும் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இக்கருத்துக் கணிப்புக்கள் பிரிவினைக்கு எதிரான ஊடகங்களிடமிருந்தே வெளியாகியுள்ளன. ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதற்கான வாய்ப்பே அதிகமாகக் காணப்படுவதாக ஸ்கொட்லாந்தின் பிரிவினைக்கு ஆதரவான ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நீண்டகால கூட்டாட்சியில் ஆங்கிலேயர்களுக்கும் ஸ்கொட்டிஷ் காரர்களுக்கும் நெருங்கிய குடும்ப உறவுகள் ஏற்பட்டுள்ளன. குடும்பங்கள், நண்பர்கள், அயலவர்கள் இடையேயான மோதல் ஸ்கொட்லாந்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.

ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்புத் தோல்வியில் முடியுமானால் ஸ்கொட்லாந்து முழுவதும் வன்முறைகளும் போலிஸ் ஒடுக்குமுறையும் தோன்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வன்முறைகளின் வெம்மையில் நவதாராளவாதத்தின் அடியாட்களான ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியும் பிரித்தானிய மையக்கட்சிகளும் குளிர்காய்ந்துகொள்ளும். ஸ்கொட்லாந்து பிரிந்து செல்கிறதோ இல்லையோ பிரித்தானியாவின் ஒடுக்குமுறைகளும், மக்களின் எழுச்சியும் பிரிவினையை ஏற்கனவே உருவாக்கிவிட்டது.