வெள்ளையின மேலாதிக்கவாதியின் படுகொலையை தொடர்ந்து தென்னாபிரிக்காவில் மீண்டும் இனப்பதற்றம்.

 தென்னாபிரிக்க வெள்ளையின மேலாதிக்கவாதி எயுகென் ரெறெப்ளஞ்சின் கொலை தொடர்பான விசாரணையொன்றின் போது நீதிமன்றத்திற்கு வெளிப்புறத்தில் கூடிய நூற்றுக்கணக்கான வெள்ளை மற்றும் கறுப்பின மக்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் பெரும் முயற்சிகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரெறெப்ளஞ்சை கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நூற்றுக்கணக்கான வெள்ளை மற்றும் கறுப்பினத்தவர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்தனர்.

இவர்களுக்கிடையில் இன ரீதியான பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து இவ்விரு இனத்தவர்களையும் முட்கம்பி வயர்களைக் கொண்டு பொலிஸார் வேறுபடுத்தி வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.இனரீதியான பிளவுகளை மீண்டும் எதிரொலிக்கும் வகையில் நீதிமன்றத்திற்கு வெளிப்புறத்தில் கூடியிருந்த வெள்ளையினத்தவர்கள் நிறவெறி காலத்து தேசிய கீதத்தைப் பாடிய அதேவேளை, இதற்குப் பதிலாக கறுப்பினத்தவர்கள் புதிய வரிகளை உள்ளடக்கிய தேசிய கீதத்தைப் பாடியுள்ளனர்.

நடுத்தர வயது வெள்ளையினப் பெண்மணியொருவர் பானமொன்றை கறுப்பினக் குழுவொன்றின் மீது விசிறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலகத்தை பொலிஸார் கைத் துப்பாக்கிகள் மற்றும் கலகத்தடுப்பு கவசங்கள் என்பவற்றைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வந்ததுடன முட்கம்பி வயர்களைப் பயன்படுத்தி இருதரப்பையும் வேறுபடுத்தியுள்ளனர்.

அமைதியைப் பேணுமாறு ஜனாதிபதி ஜாகொப் ஷஹமா அழைப்பு விடுத்துள்ள அதேவேளை, கோபத்தை ஏற்படுத்தும் அறிக்கைகளைத் தவிர்க்குமாறு ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்களை வலியுறுத்தியுள்ளார்.

சம்பளப் பிரச்சினை தொடர்பில் ரெறெப்ளஞ்சை கொலை செய்ததாக அவரிடம் பணிபுரிந்த இரு தொழிலாளர்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இனரீதியான பதற்றம் அங்கு மீண்டும் தீவிரமாகியுள்ளது.ஒரு காலத்தில் கறுப்பின தொழிலாளர்களை சித்திரவதைகளுக்குட்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ரெஹெப்ளஞ்சின் ஆதரவாளர்கள் அவரது படுகொலையை போர்ப்பிரகடமாக வர்ணித்துள்ளனர்.

கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் இருவரினதும் பெயர் விபரங்கள் வெளியிடப்படாத போதும் இவர்கள் 28 மற்றும் 15 வயதுடையவர்களென தெரிவிக்கப்படுகிறது.குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டபோது அங்கிருந்த கறுப்பின இளைஞர்கள் பெரும் ஆராவாரத்துடன் அவரை வரவேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெய்லி ரெலிகிராப்