வெளிநாட்டு துருப்புகள் நாட்டுக்குள் நுழைந்தால் புனிதப் போரை பிரகடனப்படுத்துவோம்:யேமன் மதத் தலைவர்கள் குழு எச்சரிக்கை!

அல்ஹைடாவுக்கெதிரான நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டுத் துருப்புகள் நாட்டுக்குள் நுழைந்தால் புனிதப் போரைப் பிரகடனப்படுத்தப் போவதாக யேமனின் செல்வாக்கு மிக்க மதத் தலைவர்கள் குழுவொன்று எச்சரித்துள்ளது.இது யேமனின் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டு வரும் அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட தெளிவான எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.

தமது நாட்டுக்குள் முகாம்களை அமைக்கும் பணிகளில் வெளிநாட்டுத் துருப்புகள் ஈடுபட்டாலோ அல்லது தமது கடற்பரப்புக்குள் நுழைந்தாலோ புனிதப் போருக்கு அழைப்பு விடுக்கப்படுமென எச்சரித்துள்ள மதத் தலைவர்களின் அறிக்கை, எந்தத் தரப்பும் படையெடுப்பு அல்லது ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் இஸ்லாத்தின் பிரகாரம் ஜிகாத்திற்கு அழைப்பு விடுப்பது தவிர்க்க முடியாததாகி விடுமெனத் தெரிவித்துள்ளது.

தலைநகர் சானாவில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் வெளியிடப்பட்ட இவ்வறிக்கையில் 150 மதகுருமார் கைச்சாத்திட்டுள்ளனர்.தற்போது பயங்கரவாதிகளுடன் நாடு வெளிப்படையான யுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாக யேமனிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்தே இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

யேமனிய பழங்குடியினத்தவர்கள் அல்ஹைடா உறுப்பினர்களுக்கு புகலிடம் அளிப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள். அல்ஹைடாவினரை மறைத்து வைத்திருத்தல் மற்றும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் எச்சரித்துள்ளனர்.

இந்த எச்சரிக்கை நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் மீண்டுமொரு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ஆரம்பமாகலாமென்ற அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது.இந்நிலையில், நாட்டில் செல்வாக்குமிக்க மதத் தலைவர்கள் விடுத்துள்ள இவ்வறிக்கை வெளிநாடுகளின் தலையீடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான தெளிவான முயற்சியாக அவதானிகளால் நோக்கப்படுகிறது.

இந்த மதத் தலைவர்கள் குழுவில் அல்ஹைடா தலைவர் ஒபாமா பின்லேடனின் முன்னாள் ஆன்மீக ஆலோசகரும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐ.நா. மற்றும் அமெரிக்காவினால் தேடப்பட்டு வரும் மதகுருவான அப்துல் மஜித் அல்ஷிந்தனியும் உள்ளடங்குகிறார்.ஆனால் இவரைக் கைது செய்ய மறுத்துள்ள யேமனிய அரசாங்கம் பயங்கரவாதத்துடன் இவருக்குள்ள தொடர்பு நிரூபிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.எனினும் யேமனில் துருப்புகளை நடவடிக்கையில் ஈடுபடுத்தும் திட்டம் எதுவும் இல்லையென அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.