வெற்றி பெற்ற நாடுகள் போர் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட வரலாறு ஏதும் இல்லை:பலித கோஹனா

எவ்வளவு போர்க் குற்றங்கள் புரிந்திருந்தாலும் போரில் வெற்றி பெற்ற நாடுகள் எதுவும் போர் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட வரலாறு ஏதும் இல்லை என்று சிறிலங்க அயலுறவுச் செயலர் பலித கோஹனா கூறியுள்ளார்.

 கொழும்புவில் இருந்து வெளிவரும் டெய்லி மிர்ரர் எனும் நாளிதழிற்கு அளித்துள்ள பேட்டியில்,
 விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்க இராணுவம் சர்வதேச போர் விதி மீறல்கள் செய்துள்ளது என்ற குற்றச்சாற்று எழுந்துள்ளதே என்று கேட்டதற்கு பலித கோஹனா இவ்வாறு பதில் கூறியுள்ளார்.

சிறிலங்க அயலுறவுச் செயலராக இருக்கும் பலித கோஹனா, சிறிலங்க அரசிற்கான ஐ.நா. பேரவையின் நிரந்தரத் தூதராக பொறுப்பேற்கவுள்ள நிலையில் எடுக்கப்பட்ட இப்பேட்டியில், “வரலாற்றைப் பாருங்கள், போரில் தோற்றவர்கள்தான் போர் குற்றம் புரிந்ததற்காக தண்டிக்கப்பட்டுள்ளார்கள். போரில் வெற்றி பெற்றவர்களையும் அக்குற்றத்தின் கீழ் (சர்வதேச நீதிமன்றத்தில்) தண்டிக்க வேண்டுமெனில், அதனை துவக்க வேண்டிய இடம் வேறொங்கோ உள்ளது. போரின் போது நாங்கள் அணு குண்டைப் போடவில்லை, நகரங்களை அழிக்கவில்லை” என்று பலித கோஹனா கூறியுள்ளார்.

தமிழர் பிரச்சனைக்கு எதற்கு அரசியல் தீர்வு? என்றும் இவர் கேள்வி எழுப்பியுள்ளார். “நமது பிரச்சனைகள் அனைத்திற்கும் அரசியல் தீர்வு காண வேண்டும் என்றே யோசிக்கிறோம். ஆனால் அதற்கு தர்க்க ரீதியில் எந்த அடிப்படையும் இருப்பதாக எனக்குப் புரியவில்லை” என்று கூறியுள்ளார்.

“எங்கே இந்த (அரசியல்) தீர்வை நடைமுறைப்படுத்தப் போகிறீர்கள்? கொழும்பிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 54 விழுக்காடு தமிழர்கள் வாழும் பகுதிகளிலா அல்லது வடக்கிலும் கிழக்கிலுமா? வடக்கில் ஒட்டுமொத்தமாக ஏழரை இலட்சம் தமிழர்கள்தான் வாழ்கின்றனர். வன்னியில் மூன்று இலட்சம் பேர் – அதுவும் முகாம்களில் – உள்ளனர். வன்னிக்கு வெளியே ஒருவரும் இல்லை. மற்ற இடங்களில் வாழ்பவர்களோடு ஒப்பிட்டால் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே அரசியல் தீர்வு என்று எதுவும் தேவையில்லை” என்று பலித கோஹனா கூறியுள்ளார்.

 “அவர்களுக்கு (தமிழர்களுக்கு) பிரச்சனை இருக்குமென்றால் 54 விழுக்காடு மக்கள் சிங்களர்கள் வசிக்கும் பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்தது ஏன்? அவர்ளாகவேதான் வந்தார்கள், அவர்களுக்குப் (சிங்களர்களால்) பிரச்சனை இருக்குமென்றால் இங்கு வந்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ள பலித கோஹனா, “அரசியல் ரீதியாகத்தான் தீர்வு காண வேண்டும் என்று சுலபமாக ஆலோசனை கூறுகிறார்கள், ஆனால் அப்பிரச்சனை அரசியல் ரீதியானது அல்ல. வேலை வாய்ப்பின்மை, சிறுவர்கள் பள்ளியில் சேர்ப்பதில் சிக்கல் போன்ற பிரச்சனைகள் எந்த ஒரு நாட்டிலும் இருக்கும். ஆனால் அவைகளைத் தீர்க்க இன ரீதியான அணுகுமுறைத் தேவையில்லை” என்று கூறியுள்ளார்.

 இந்தியா எங்களுக்குப் பெரிதும் உதவுகிறது!

“நாம் இப்படிப்பட்ட தவறுகளைத்தான் செய்து வருகிறோம். இதுவரை தீர்வுகள் அனைத்தும் மேலிருந்து திணிக்கப்பட்டது. இதற்குமேல் எந்த மாற்றமாக இருந்தாலும் அது பெரும்பான்மையின் ஆதரவுடனேயே நிறைவேற்றப்படவேண்டும் என்று அதிபர் (ராஜபக்ச) கூறியுள்ளார்”.

தமிழர் பிரச்சனைக்கு இந்தியா அளித்துள்ள அதிகபட்சத் தீர்வு என்பது ராஜீவ் அளித்த 1987 ஒபந்தம்தான் என்று கூறியுள்ள பலித கோஹனா, “எங்கள் பிரச்சனைகளில் இந்தியா பெரும் உதவியாக இருந்தது. அந்த ஆதரவு தொடரும் என்பதில் நம்பிக்கையுடன் உள்ளோம். அவர்கள் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கின்றனர். அதற்கு அதிபரும் ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தாண்டி எதையும் இந்தியா விவாதிக்கவில்லை.

கொழும்பு மேற்கொண்ட (போர்) நடவடிக்கைக்கு மட்டுமின்றி, சிறிலங்காவிற்கு எதிராக மனித உரிமை மன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதிலும் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா ஆகிய நாடுகள் தங்களுக்கு ஆதரவு அளித்ததை பெருமிதத்துடன் கூறியுள்ளார் பலித கோஹனா.

 

One thought on “வெற்றி பெற்ற நாடுகள் போர் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட வரலாறு ஏதும் இல்லை:பலித கோஹனா”

Comments are closed.