வெற்றிப்பாதையில் நேபாளப் பெண்கள்: மல்லிகா அர்யாள்

நேபாளத்தில் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட அரசியலமைப்பு பேரவை கடந்த மாதம் முதல் முதலாக கூடியபோது பழங்குடிக் குழுக்களான மதேசி, ஜனஜடி, தலித் போன்றவற்றின் பிரதிநிதிகளும் சமுகமளித்திருந்தனர். பேரவை உறுப்பினர்கள் 601 பேரில் 191 பேர் பெண்களாவர்.
33 சதவீதம் பெண் உறுப்பினர்கள் இருக்க வேண்டுமென்ற இடைக்கால அரசியல் யாப்பு உத்தரவாதம் நிறைவேறுமா என்ற தேர்தலுக்கு முந்திய எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் 30 பெண்கள் தேர்தலில் வெற்றி பெற்றனர். விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் 161 ஆசனங்கள் பெண்களுக்குக் கிடைத்ததால் மொத்தம் 191 ஆசனங்களைப் பெண்கள் பெற்றார்கள். தெரிவு செய்யப்பட்ட மொத்தம் 575 உறுப்பினர்களில் இது 33.21 சதவீதமாகும்.
அனைத்து நேபாள பெண்களுக்கும் இது ஒரு சாதனையாகும் என்று இந்தக் தேர்தலில் போட்டியிட்ட ஒரு பெண்கள் கட்சியான ச.சக்தி நேபோல் என்ற கட்சியியைச் சேர்ந்த சரளா லமா கூறுகிறார். 1999 ஆம் ஆண்டுத் தேர்தலின் பின்னர் 6 சதவீதத்திற்கும் குறைவாக மொத்தம் 205 உறுப்பினர்களில் 12 பேரே பெண் உறுப்பினர்களாக இருந்தார்கள். தற்போதைய அரசியலமைப்புப் பேரவையில் 74 பெண் வேட்பாளர்கள் நேபாள சமுதாயக் கட்சியையும் (மாவோவாத) 39 பெண் வேட்பாளர்கள் நேபாள காங்கிரஸ் கட்சியையும் 36 பெண் வேட்பாளர்கள் நேபாள கம்யூனிஸ்ட் ஐக்கிய மாக்சிஸ லெனினிஸ்ட் கட்சியையும் 13 பெண் வேட்பாளர்கள் மதேசி ஜனாதிகார் கட்சியையும் சேர்ந்தவர்களாவர்.
நேபாள காங்கிரஸ், ஐக்கிய மாக்சிஸ லெனினிஸ்ட் கட்சிகளின் கோட்டையென வர்ணிக்கப்படும் கோர்கா1, பர்தியா1 போன்ற தொகுதிகளில் மாவோவாத பெண் வேட்பாளர்கள் சிரான்ஜிபி வாக்ளே, பாம் தேவ் கோதாம் போன்ற பழம்பெரும் அரசியல்வாதிகளையே மண்கவ்வ வைத்துள்ளார்கள்.
இந்தத் தேர்தலில் மக்கள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகவே வாக்களித்தார்கள். எனவே மாவோவாத பெண்கள் இந்தப் பழம்பெரும் ஆண் தலைவர்களை தோற்கடித்தமை ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று நேபாள சத்பபானா கட்சியைச் சேர்ந்த சரிதா கிரி தெரிவித்தார்.
நேபாள மக்கள் மாற்றத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிவித்த நேபாள வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சபிதா பண்டாரி பரல் வயது முதிர்ந்த ஆண் அரசியல்வாதிகளால் இந்த நிலைமையைப் புரிந்து கொள்ள முடியாதிருப்பதே அவர்களது வீழ்ச்சிக்குக் காரணமாகும் என்றும் கூறினார்.
தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் சிலர் யுத்தத்தினால் கணவன்மாரை இழந்த விதவைப் பெண்களாவர். பெண்கள் விவகாரங்களில் நிபுணர்கள் இந்த நிலைமையை வரவேற்கும் அதேவேளை ஒரு நாட்டின் அரசியல் யாப்பை எழுதும் நடைமுறை சிக்கலாக இருப்பதாலும் பல சட்ட விடயங்கள் சம்பந்தப்பட்டிருப்பதாலும் பெண்கள் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளும் சட்ட நிபுணர்களை பேரவையில் வைத்திருப்பது அவசியமாகும்.
கிரி பெரிதாக கவலைப்படவில்லை. பெண்கள் நல்ல தலைவர்கள் என்று மக்கள் நம்புவதால் அவர்களை அவர்கள் தெரிவு செய்தார்கள் என்றும் தெரிவு செய்யப்பட்ட பெண் பாடசாலைக்கே செல்லவில்லை என்று யாராவது கூறினால் அவரை அதைரியப்படுத்துவதற்காகவே அப்படிக் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
றொல்பா தொகுதியில் போட்டியிட்ட மாவோவாத வேட்பாளர் ஜய்பூரி கார்தி மகர் அவரது நேபாள காங்கிரஸ் போட்டியாளரை 22,000 க்கும் அதிகமான வாக்குகளால் தோற்கடித்தார். கடந்த வாரம் காத்மண்டுவில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர் மாவோவாத மக்கள் விடுதலை இராணுவத்தில் தாம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நாட்களை நினைவுகூர்ந்தார். மாவோவாத மக்கள் போராட்டத்தின் போது மகர் அவரது கணவரை இழந்தார். பல வருடங்களாக நிரந்தர வீடு ஒன்று இல்லாமலே அவர் வாழ்ந்து வந்தார். நேபாளத்தின் பல பகுதிகளிலும் அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது தமது பெண் குழந்தையையும் கையில் எடுத்துக் கொண்டே சென்றார்.
இதுவரை காலமும் கொடுமைப்படுத்தப்பட்டவர்கள் இந்தப் பேரவையில் பெண்கள் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதால் இந்தப் பேரவை விசேடத்துவம் பெறுகிறது என்று மகர் தெரிவித்தார். உயர் சாதியைச் சேர்ந்த பெண்கள் மாத்திரமே பாராளுமன்ற உறுப்பினர்களாகலாம் என்ற காலம் ஒன்று இருந்தது. இந்தத் தேர்தல் அந்த நடைமுறையை மாற்றி வைத்துள்ளது. தற்போது 12.5 மில்லியன் பல்வேறுபட்ட நேபாளப் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு சாதிகள், குழுக்கள், இனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 191 பெண்கள் அரசியலமைப்புப் பேரவையில் இருக்கிறார்கள் என்றும் மகர் கூறினார்.
ஐக்கிய மாக்சிஸ் லெனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாம் தேவ் கோதாமை 17,955 13,773 என்ற வாக்கு அடிப்படையில் தோற்கடித்த சரளா றெக்மி தமது வாக்காளர்களுக்கு நன்றி கூறுவதற்காக அவரது பர்தியா தொகுதிக்குத் திரும்பினார். அவர் கிராமங்கள் தோறும் சென்ற போது உள்ளூர் பெண்கள் திரண்டு சென்று நீண்ட காலம் ஐக்கிய மாக்சிஸ லெனினிஸ கட்சியின் கூட்டுப்பாட்டிலிருந்து வந்த தொகுதியில் துணிச்சலுடன் போட்டியிட்டமைக்காக அவரைப் பாராட்டினர். 1990 ஆம் வருட மக்கள் இயக்கத்திலிருந்து மாவோவாதிகளுடன் இணைந்து போராடி வந்த றெக்மி 1998 ஆம் ஆண்டில் நேபாள இராணுவம் கணவரைத் கொன்றதை அடுத்து மறைந்து வாழ்ந்து வந்தார்.
யுத்தத்தின் போது கிராமங்கள் தோறும் சென்ற றெக்மி மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் யுத்தத்தினால் பெரிதும் சோர்ந்து விட்டார்கள் என்றும் ஒரே அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்றும் அறிந்து கொண்டார். பெண்கள் அவர்களது வாழ்க்கையையே தியாகம் செய்து முன்னணியில் விளங்குகிறார்கள் என்பதை சில ஆண் ஆதிக்க சமுதாயத்தினர் ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறார்கள் என்று றெக்மி கூறுகிறார். தற்போது தங்களில் சந்தேகம் கொண்ட இத்தகைய மக்கள் தங்களால் சிறந்த அரசியல் யாப்பைத் தயாரிக்க முடியுமென நம்புகிறார்களில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தமது கட்சியில் பால் விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் சில பெண் பிரதிநிதிகள் பல குழுக்களுக்கு தலைமை தாக்குவார்கள் என்றும் றெக்மி நம்பிக்கை தெரிவித்தார்.
பேரவையில் 33 சதவீதமான பெண்கள் இருப்பது தங்களுக்குப் பெரு வெற்றியாக இருக்கிறபோதிலும் இந்தக் தொகை போதாது என்று மகர் தெரிவித்தார். 50 சதவீத பிரதிநிதித்துவம் பெண்களுக்குத் தர வேண்டுமென அவர் கோரினார்.
அரசியலில் மாற்றத்தை விரும்பிய நேபாள வாக்காளர்கள் பெண்களை வெற்றிபெறச் செய்தார்கள். புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதற்காக பேரவை கூடும் போது தங்கள் வாக்குகள் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றனவா என்பதை அவர்கள் அவதானித்து வருகிறார்கள்.
ஐ.பி.எஸ்.