வீடுகள் இடித்து அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டப் பேரணி !

கொழும்பு கொம்பனித்தெரு மக்களின் வீடுகள் இடித்து அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
வீடுகளை இழந்த மக்களும் “சார்க்’ நாடுகளைச் சேர்ந்த புத்திஜீவிகளுமாக 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டனர்.இதில் இடதுசாரி முன்னணி தலைவர் வாசுதேவ நாணயக்கார உட்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர்
இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு விகாரமகாதேவி பூங்காவிற்கு முன்பாக அமைந்துள்ள ஜோன் டி சில்வா ஞாபகார்த்த மண்டபத்திற்கு முன்பாக ஆரம்பித்து விகாரமகாதேவி பூங்காவைச் சுற்றிவந்து மீண்டும் ஜோன் டி சில்வா ஞாபகார்த்த மண்டபத்தின் முன்பாக முடிவுற்றது.
இதில் கலந்துகொண்ட வீடுகளை இழந்த மக்கள் தமக்கு உடனடியாக வீடுகளை அமைத்துத் தருமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
தெற்காசிய மக்கள் பேரவை இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. இதேவேளை, சார்க் நாடுகளின் புத்திஜீவிகள் 40 பேர் கொம்பனித்தெருவுக்குச் சென்று இடித்து அகற்றப்பட்ட வீடுகள் அமைந்திருந்த இடத்தைப் பார்வையிட்டனர்.

இவற்றைவிட;

“சார்க்’ உச்சி மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் சில பகுதிகள் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளதுடன், தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் புறக்கோட்டை, கோட்டை பகுதிகளில் அன்றாடம் கூலிவேலை செய்யும் நாட்டாண்மை தொழிலாளர்கள் பத்தாயிரம் பேர் தமது தொழில்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவர்கள் தினமும் உழைக்கும் கூலியின் மூலமே தமது குடும்பத்தை நடத்துகின்றனர்.

இவர்கள் புறக்கோட்டை வர்த்தக நிலையங்களில் இருந்து தள்ளு வண்டிகள் மூலமும், தலையில் சுமந்தும் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச்சென்று தொழில் புரிகின்றனர்.

ஆனால், “சார்க்’ உச்சி மாநாடு நடைபெறும் நாட்களில் இவர்கள் இத்தொழிலைச் செய்யமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

புறக்கோட்டையில் இருந்து கோட்டைப்பகுதிகளில் உள்ள கடைகள், உணவுக் கடைகள், ஹோட்டல்களுக்கு இவர்கள் தினமும் இப்பொருட்களை எடுத்துச் சென்று விநியோகித்து வருகின்றனர்.

அதிஉயர் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் பொலிஸாரினால் வழங்கப்படும் விசேட “பாஸ்’ இன்றி எவருமே அனுமதிக்கப்படமாட்டார்கள் என பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர்.

இதனால், இந்த கூலித்தொழிலாளர்கள் மட்டுமன்றி, புறக்கோட்டைப் பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்படும் நிலையே காணப்படுகிறது.

அதுமட்டுமன்றி, உள்ளூர் சந்தைகளுக்கான கொடுக்கல், வாங்கல் நடவடிக்கைகளும் இதனால் பெரிதும் தடைப்படும் நிலை ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளால் புறக்கோட்டைப்பகுதியின் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்படவுள்ளதால் வர்த்தகர்களும் பெரிதும் பாதிக்கப்படவுள்ளனர்.

இதனால், இந்த வர்த்தக நிலையங்களை நம்பி கூலிவேலை செய்யும் தொழிலாளர்களும் தமது அன்றாட வேலைகளை இழக்கவேண்டிய நிலை உள்ளது.