விளை நிலங்களை கையகப்படுத்தினால் போராட்டம் : ஜெயலலிதா

மக்கள் விரோத ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் தமிழகமெங்கிலும் விவசாயிகளின் நிலங்கள் அபகரிக்கபப்ட்ட வரலாறு உண்டு
. இன்று அதையே முன்னுதாரணமாகக் கொண்டு இன்னொரு மக்கள் விரோதியான கருணாநிதியும் அவரது வாரிசுகளும் விவசாயிகளின் நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பெரும் புதூரில் விரிவாக்கபப்ட்ட க்ரீன் பீல்ட் விமானநிலையம் அமைக்க விவசாயிகளின் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கிராம மக்கள் மீது கொலைவெறித்தாக்குதலை ஏவியது கருணாநிதியின் காவல் துறை, இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: கிரீன் ஃபீல்டு விமான நிலையம் அமைப்பதற்காக 6 ஆயிரத்து 921 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்த திமுக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளாய், சிறுகிளாய், பாடிசேரி, ராமாபுரம், வடமங்கலம், பூதேரிபண்டை, மாம்பாக்கம், இருங்குளம், மொளச்சூர், திருமங்கலம், கண்டிகை, சோகண்டி, கடம்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட வயலூர், அகரம், உச்சிமேடு, சூரகாபுரம், மும்முரகுப்பம், கன்னிகாபுரம், வாசனாம்பட்டு, திருப்பந்தியூர், திருமணிகுப்பம், பன்னூர், நரசமங்கலம், கொட்டையூர் ஆகிய பகுதிகளில் உள்ள விளைநிலங்களும் கையகப்படுத்தப்பட உள்ளன. கிரீன் ஃபீல்டு விமான நிலைய திட்டத்தினால் 20-க்கும் அதிகமான கிராமங்களில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் தங்கள் வீடுகள், விளைநிலங்களை இழந்து, அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர, பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளின் படிப்பும் பாதிக்கப்படும். வழிபாட்டுத் தலங்களும் இடிப்புக்கு உள்ளாக நேரிடும். இதனை எதிர்த்து இக்கிராமங்களைச் சேர்ந்த மூவாயிரத்துக்கும் அதிகமான விவசாயிகளும், பொதுமக்களும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக திருவள்ளூர் தாலுகா அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை அமைதியாக ஊர்வலமாகச் சென்றனர். ஏழை விவசாயிகளான அவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாயில் விழுந்து காயமடைந்த விவசாயிகளை விரட்டி போலீஸôர் அடித்துள்ளனர். இந்தக் கொடூர தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். திமுக அரசின் இந்த ஜனநாயக விரோத செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். “”தமிழகத்தில் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் கணக்கெடுக்கப்பட்டு நல்ல காரியங்களுக்காகப் பயன்படுத்த எண்ணியிருந்தபோது 2001-ல் அதிமுக ஆட்சி முடிவுற்றது. 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதையெல்லாம் ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக தருவோம்” என்று 2006 தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் கருணாநிதி வாக்குறுதி அளித்திருந்தார். எனவே, முதல்வர் கருணாநிதியால் கணக்கெடுக்கப்பட்ட 55 லட்சம் ஏக்கர் நிலத்திலிருந்து 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தை எடுத்து, அதில் கிரீன் ஃபீல்டு விமான நிலையம் அமைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். கிரீன் ஃபீல்டு விமான நிலையத்துக்காக விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அதனை எதிர்த்து அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று ஜெயலலிதா எச்சரித்துள்ளார். சென்னை, கோபாலபுரத்தில் அரசுக்குச் சொந்தமான 780 சதுர அடி நிலத்தை தனது வீட்டுடன் இலவசமாக இணைத்துக் கொண்டவர் முதல்வர் கருணாநிதி. ஆனால், உழைத்த பணத்தை சிறுகச் சிறுக சேர்த்து, ஏழை, எளிய மக்களால் வாங்கப்பட்ட விளைநிலங்கள், வீடுகளை கையகப்படுத்தப் போகிறேன் என்று கருணாநிதி கூறுகிறார். இது நகைப்புக்குரியதாக உள்ளது என்று ஜெயலலிதா கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த இரண்டு மக்கள் விரோதிகளின் நாடகங்களையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

One thought on “விளை நிலங்களை கையகப்படுத்தினால் போராட்டம் : ஜெயலலிதா”

  1. இரண்டுபேரும் ஊழல் பேர்வழிகளாக இருந்தாலும் , கருணா ஊழல் விஞ்ஞானி, இலேசில் ஆதாரமெதுவும் கண்டுபிடிக்கமுடியாதபடி தமிழ்நாட்டை தின்றுதீர்த்துவிட்டார் ,மக்கள் கோவணாண்டிகளாக இலவசங்களுக்காக அலையும் நிர்ப்பந்தம், அந்த இலவசங்களும் காரணத்தோடும் தனது வாரிசுக்களின் தொழிலோடும் சம்பந்தப்படுத்தி முடித்துக்கொண்டிருக்கிறார்,இனி கடவுள்தான் தமிழ்நாட்டை காப்பாற்றவெண்டும்,

Comments are closed.