விலைவாசி உயர்வு தமிழக மக்களைப் பாதிக்கவில்லையாம்- சொல்கிறார் கருணாநிதி.

ஆசியாவிலேயே பெரிய கோடீஸ்வரக் குடும்பம் கருணாநிதியினுடையது. அவரது குடும்பத்தினர் தமிழகத்தில் சகல தொழில்களையும் கட்டுப்படுத்தி வருகின்றனர். இன்னொரு பக்கம் தனியார் தாராளமய்க் கொள்கையால் நடுத்தர,மற்றும் ஏழைகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள நிலையில் விலைவாசி உயர்வு தமிழக மக்களைப் பாதிக்கவில்லை என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி.பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, இடதுசாரிகள், பாஜக உள்ளிட்ட கட்சிகள் வேலை நிறுத்தத்துக்கு திங்கள்கிழமை அழைப்பு விடுத்திருந்தன. இதனால், விளையப் போகும் பயன் என்ன? என்று கேள்வி எழுப்பி முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: வேலை நிறுத்தம் காரணமாக, பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நாட்டுக்கு இழப்பு என்று ஒரு செய்தியும், நாட்டின் தேசிய உற்பத்தியில் ரூ.13 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கைகளின் மூலமாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. வேலை நிறுத்தம் தவிர்க்க முடியாத காரணங்களால் நடத்த வேண்டிய நிலை இருக்குமானால், அதனை நான் என்றைக்கும் எதிர்த்து எந்தவிதமான கருத்தும் தெரிவித்தது இல்லை. கூறப்படும் குறிக்கோள், கொள்கை, கோரிக்கை அவற்றை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோர் யாராயினும் அவர்களை சந்தேகித்தது இல்லை. ஆனால், கூறப்படும் குறிக்கோள், கொள்கை இவற்றில் எவ்வளவு நியாயம் இருந்த போதிலும், அவற்றை அடைவதற்கான வழிமுறைகளில் வாய்மை தவறினாலோ அல்லது வன்முறை தலை காட்டினாலோ அப்போது குறிக்கோள் வெற்றிக்கு இரண்டாவது இடத்தையும், வழிமுறை தவறாத வாய்மையான நிலைக்கு முதல் இடத்தையும் தருபவர்கள் நாம். இலங்கைத் தமிழர் பிரச்னை, விலைவாசி உயர்வு கண்டனம் போன்ற எத்தனையோ பிரச்னைகளில் மக்கள் நலன், மக்கள் உரிமை அவற்றை முன்வைத்து நாம் போராட்டங்களை தனித்து நின்றும் நடத்தியிருக்கிறோம். பிற கட்சிகளின் துணை கொண்டும் நடத்தியிருக்கிறோம். அத்தகைய போராட்டங்களில் ரயில் நிறுத்தம், பஸ் மறித்தல் போன்ற கிளர்ச்சிகளைக்கூட திடுதிப்பென்று அறிவிக்கப்படாத நிகழச்சியாக அவற்றை நடத்தியதில்லை. முன்கூட்டியே அறிவித்து போராட்டம் நடத்தப்படும். அப்போது, போலீஸôர் அந்த இடத்துக்குச் சென்று அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பார்கள். இது, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இருந்து இன்று வரை கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறையாகும். தமிழகத்தைப் பொறுத்தவரை முழு அடைப்புக்கு ஆதரவில்லை என்றும், பாஜக, இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. விலைவாசி உயர்வு என்ற கோஷம் அதனால் ஏற்படும் பாதிப்பு இந்தியாவில் மற்ற மாநிலங்களைப் போல தமிழக மக்களைப் பாதிக்கவில்லை. அப்படிப் பாதிக்காத அளவுக்கு அவர்களைப் பாதுகாக்கும் கடமையை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. அதனால்தான் பூதாகரமாக எதிர்பார்த்த வேலை நிறுத்தம் வெற்றி பெறவில்லை. இதைச் சொல்வதால் விலைவாசி உயர்வுக்கு வெண்சாமரம் வீசுபவர்கள் அல்ல நாம். கிலோ அரிசி ஒரு ரூபாய், மானிய விலையில் மளிகைப் பொருள்கள், பஸ் கட்டண உயர்வில்லை போன்றவற்றின் மூலம் விலைவாசி உயர்வின் பாதிப்பு சாதாரண சாமான்ய மக்களிடம் இருந்து அகற்றப்பட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். ஒரு வேளை தனது குடும்பத்தினர்மட்டும்தான் தமிழக மக்கள் என நினைத்து விட்டாரோ என்னவோ?