விமான நிலையத்தில் 29 தமிழ் இளைஞர்கள், துணை இராணுவக் குழு மற்றும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரால் கைது !

airportpic-300கட்டுநாயக்கா விமான நிலையத்தில் 29 தமிழ் இளைஞர்கள், துணை இராணுவக் குழு மற்றும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் இளைஞர்களே இவ்வாறு விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் சென்ற 11 தமிழ் இளைஞர்கள், சிங்கப்பூர் விமான நிலையத்தில் இறங்கியபோது, அவர்களை சிங்கப்பூருக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்த குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் அவர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பியுள்ளனர்.

அன்றைய நாள் இரவு 10.00 மணியளவில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கிய அவ்விளைஞர்களை இலங்கைக் காவல்துறையினருடன் இயங்கும் துணை இராணுவக் குழு மற்றும் புலனாய்வுப் பிரிவினர்  கைதுசெய்துள்ளனர்.

அதேபோன்று, கடந்த 16ஆம் திகதி இலங்கையிலிருந்து பிரித்தானியா செல்ல முயன்ற தமிழ் மாணவர்கள் 18 பேர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து துணை இராணுவக் குழு மற்றும் புலனாய்வுப் பிரிவைனரால் கைதுசெய்யப்பட்டனர்.

பிரித்தானியா மாணவர் விசாபெற்று இவர்கள் அங்கு செல்ல முற்பட்ட வேளையிலேயே கைதாகி விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் தமிழ் மக்களைக் கண்காணிக்கும் நடவடிக்கையில் ஏராளமான புலனாய்வுப் பிரிவினரும், துணை இராணுவக் குழுவினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் கடந்த நான்கு மாதங்களாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.