வவுனியா முற்றிலும் இராணுவ மயம்:மக்கள் அச்சம்.

28.09.2008.

கிளிநொச்சியை அண்டிய பிரதேசங்களில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், வவுனியா நகரில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவம், விமானப்படை மற்றும் விசேட அதிரடிப்படையினர் மிக அதிகளவில் அங்கு குவிக்கப்பட்டிருப்பதாக சுயாதீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றபோதிலும், இது மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக அங்குள்ள அரசசார்பற்ற நிறுவன பணியாளர்கள் கூறுகின்றனர். தமது நடமாட்டம் இதனால் பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பதாக மக்கள் தம்மிடம் முறையிட்டிருப்பதாக உதவிப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு வவுனியா முற்றிலும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ள ஒரு சூழ்நிலையில், வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து மக்கள் வவுனியாவுக்கு வருவார்களா என்பது சந்தேகமே என்று தம்மை வெளிக்காட்ட விரும்பாத உதவிப் பணியாளர்கள் சிலர் கூறுவதாக கொழும்பு ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சியிலிருந்து வவுனியாவுக்கு நகர அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலும், ஒரு தடுப்பு முகாமுக்கு வருவதற்கு அவர்கள் விரும்பமாட்டார்கள் என்றும் அவர்கள் கூறுவதாக அந்தப் பத்திரிகைச் செய்தி குறிப்பிடுகிறது.

மேலும், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள மக்களை வவுனியாவுக்கு வருமாறு அரசாங்கம் விடுத்த செய்தி அந்தப் பகுதி மக்களைச் சென்றடைந்ததா என்பது சந்தேகமே என்று தெரிவித்துள்ள உதவிப் பணியாளர்கள், அவ்வாறு மக்கள் வருவதாக இருந்தால், அவர்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்வதற்குரிய ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.