வவுனியா முகாம்கள் ஹிட்லர் யுகத்தின் முகாம்களைப் போன்று காணப்படுகிறது: மங்கள சமரவீர

 
  இடம்பெயர்ந்த மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள முகாம்களை நிவாரணக் கிராமங்கள் என அரசாங்கம் குறிப்பிடுகிறது. எனினும், மெனிக் பார்ம் முகாம் மாத்திரமே சர்வதேசத்திற்கு காண்பிக்கப்படுகின்றது. மற்றைய முகாம்களுக்குச் சென்றுவருபவர்கள் அந்த முகாம்கள்,  யூதர்களைத் தடுத்து வைத்திருந்த ஹிட்லரின் முகாம்கள்போலக் காணப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.
நாடு என்ற ரீதியில் சர்வதேச சமூகம் மதிக்கும் அடிப்படை உரிமைகள் இந்த முகாம்களில் முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
 
 
 
  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்துரைத்த மங்கள சமரவீர,

முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களின் நடமாடும் சுதந்திரம், கருத்து வெளியிடுவதற்கான சுதந்திரம் ஆகிய அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. முகாம்களின் உண்மை நிலையை அறிந்துகொள்வதற்கு சர்வதேச சமூகத்திற்கு மாத்திரமன்றி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் உரிமையையும் இந்த அரசாங்கம் பறித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கெதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட போரில் வெற்றி பெற்றதாக 2009 ஜூன் 19ம் திகதி அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இடம்பெயர்ந்த சுமார் மூன்று லட்சம் இலங்கைக் குடிமக்களை பலவந்தமாக தடுத்துவைத்துள்ளதாக இந்த அறிக்கையில் விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அப்பாவிப் பொதுமக்களின் மனிதாபிமான பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் இந்த அறிக்கையின் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள், நடுத்தர மக்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட அவர்களது குடும்பங்கள் ஆகியோரே இந்த முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு நிதி என்பது பொருட்டல்ல. தென் மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையைவிட இவர்களது மனநிலை வேறுபட்டதாகும். தாம் பிச்சைக்காரர் இல்லையென்றே அவர்கள் கூறுகின்றனர். தமக்கு கொழும்பிலிருந்து வந்து உணவு தரவேண்டியதில்லை எனக் கூறுகின்றனர். தமது சொந்த இடங்களுக்குச் சென்று சமுதாயமாக வாழ்வதற்கு இடமளிக்க வேண்டும் என்பதே அவர்களது ஒரே கோரிக்கையாக உள்ளது.

இந்த மக்களை 6 மாதகாலத்திற்குள் மீள்குடியமர்த்துவதாக, இந்திய மற்றும் சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது. தற்போது மூன்று மாத காலம் முடிவடைந்துள்ளது. எனினும், அவர்களை மீளக்குடியமர்த்துவதற்கு ஒரு செயற்திட்டம் இருப்பதாக நாம் அறியவில்லை.

மக்களுடன் மக்களாக 20 ஆயிரம் பேர் வரையில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இருப்பதாக பாதுகாப்புச் செயலர் உள்ளிட்ட அரசாங்கத்தின் அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்கள் கூறுவதைப் போல் 20 ஆயிரம் பேர் இருந்தாலும், எஞ்சியுள்ள 280,000 ஆயிரம் மக்களை ஏன் இவ்வாறு பலவந்தமாகத் தடுத்து வைத்திருக்க வேண்டும்? அவர்கள் செய்த பிழையென்ன? விடுதலைப் புலிகள் பலம்கொண்டிருந்த பிரதேசத்தில் பிறந்தமைக்காக, விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடாத இந்த அப்பாவி மக்களை இவ்வாறு அடைத்து வைத்திருப்பது மிகவும் நியாயமற்ற செயலாகும்.

1988-90 காலப்பகுதியில் தேசப்பற்றுள்ள மக்கள் நடவடிக்கைக் குழுவினர் பாரிய பயங்கரவாத செயல்களை முன்னெடுத்தனர். மாத்தறை, ஹம்பாந்தோட்டை போன்ற பிரதேசங்களில் ஒரு குழுவினர் இந்த செயற்பாடுகளுக்காக உழைத்தனர். ரோஹண விஜயவீர கொல்லப்பட்டதை அடுத்து, அவர்கள் அடையாளம் காணும் வரை மாத்தறை, ஹம்பாந்தோட்டை பிரதேசங்களில் உள்ள அனைத்து மக்களையும் முகாம்களில் அடைத்துவைக்க வேண்டுமென அன்றைய அரசாங்கமும் முனைப்புக்களை எடுத்திருந்தால், எனக்கும், மஹிந்த ராஜபக்ச விற்கும் பல ஆண்டு காலம் முகாம்களில் அடைபட்டிருக்க நேரிட்டிருக்கும். எனினும், இன்று தமிழ் மக்கள் என்பதால் இவ்வாறானதொரு நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்கிறது. சிங்கள மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது அதனை எதிர்க்கவும், தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது அதனைக் கண்டுகொள்ளாதிருக்கவும் முடியாது. இலங்கையர்களான எமது மக்களை இவ்வாறு துன்புறுத்தும் போது அன்றைய தினம் போன்றே இன்றும் எதிர்க்கின்றேன்.

கடந்தகால அன்சாட்டுக்களை எடுத்து வாசிக்கும்போது, 1989ம் ஆண்டு நான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய மூன்றாவது உரையும் எனக்கு கரங்களில் இருந்தது.  பூசா| சிறைச்சாலையில் இருக்கும் குறைபாடுகள் குறித்தே அந்த உரை அமைந்திருந்தது. அன்று சிங்கள இளைஞர்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்ததைப் போன்றே இன்று தமிழ் இளைஞர்களின் பிரச்சினைகளுக்குக் குரல்கொடுப்பதற்கு நாம் அஞ்சத் தேவையில்லை. எனினும், அன்று சிங்கள இளைஞர்களின் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்த மஹிந்த ராஜபக்ச  மற்றும் அவரது சகோதரர்களின் அரசாங்கத்தின் கீழ், இன்று அதனையும்விட ஆயிரம் மடங்கிலான குற்றங்களை தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ளதாக நான் இன்று கவலையுடனும், இதய சுத்தியுடனும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இந்த அறிக்கையில் நாம் குறிப்பிட்டிருந்த விடயம்தான் இந்த பருவப் பெயர்ச்சி மழை. இதனால் முகாம்களில் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என எச்சரித்துள்ளோம். குடிநீர் மற்றும் மலசலகூட வசதிகளும் பெரும் பிரச்சினையாக உருவெடுக்குமென சுட்டிக்காட்டியிருந்தோம். இந்தப் பருவப் பெயர்ச்சி மழை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே ஆரம்பித்துவிட்டது. நாம் கூறியிருந்த விடயங்களும் உண்மையாகிவிட்டன. இந்த மழை காரணமாக எதிர்காலத்தில் கூடாரங்கள் வெள்ளத்தில் மூழ்குவது மட்டுமன்றி, பயங்கரத் தொற்று நோய்களும் பரவக்கூடிய நிலையும் ஏற்படும். இந்நிலை ஏற்பட்டு மேலும் ஆயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்படுவதற்கு முன்னர், இதற்கான தீர்வுகளைக் கண்டறியுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றோம். எனத் தெரிவித்தார்.