வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் மீது கொலை முயற்சி தாக்குதல்!

ccvவவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் கிருஸ்ணப்பிள்ளை தேவராசா (வயது 61) மீது இன்று (08.10.2014) இரவு நெடுங்கேணி பிரதான இராணுவ முகாமுக்கு சமீபமாக வைத்து கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10.10.2014 வெள்ளிக்கிழமை அன்று வவுனியா மாவட்ட நீதிமன்றம் முன்பாக ஜெயக்குமாரியினதும், ஏனைய அரசியல் கைதிகளினதும் விடுதலையை வலியுறுத்தியும், சட்டத்துக்கு முரணான கைதுகள், தடுத்து வைத்தல்களை கண்டித்தும் கவனயீர்ப்பு போராட்டத்தை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு நடத்தவுள்ள நிலையிலேயே இந்த கொலை முயற்சி தாக்குதல் அவர் மீது நடத்தப்பட்டுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்துக்கான முன்னாயத்த கூட்டம் இன்று வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினால் வவுனியாவில் நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டு விட்டு நெடுங்கேணி பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருக்கும் பயண வழியிலேயே இந்த கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு இனம் தெரியாத நபர்கள் அவரை இடை மறித்து, “மவனே போராட்டமா நடத்தப்போறாய். நீ உயிரோட இருந்தாத்தானே போராட்டம் நடத்துறதுக்கு?” என்று கொச்சை தமிழில் தூசன வார்த்தைகளால் பேசியவாறு வாயை பொத்தி பிரதான வீதியின் ஓரமாகவிருந்த வயல்காணிக்குள் இழுத்துச்சென்றுள்ளனர்.

அங்கு வயல் காணியின் பாதுகாப்பு வேலி இருந்தமையினால் மேற்கொண்டு அவரை இழுத்துச்சென்று தனிமைப்படுத்தி கொலை செய்யும் முயற்சி கைகூடாததால் சினம் அடைந்த அவர்கள், இரும்பு கம்பிகளால் தலையை குறிவைத்து தாக்கியவேளை தலைக்கவசத்தில் பட்டு வழுக்கி தோள்பட்டைகளில் பலமாக அடிகள் விழுந்தமையினால் தோள்மூட்டுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் கைகள் கால்களில் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதனால் கை கால் என்புகளிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததும் அங்கு உடனடியாகவே விரைந்து சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் மற்றும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் செயல்குழுவினர் நிலைமைகளை பார்வையிட்டுள்ளனர்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் ஆகியோரின் வலியுறுத்தலுக்கு அமைவாக வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

ccv2ccv1