வவுனியா நிவாரண முகாம்களில் 2.5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்க 50 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர்.

 

  இலங்கையில் நிவாரண முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான டாக்டர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவர் உபுல் குணசேகரா கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அதிபர் ராஜபட்சவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

  இலங்கையில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா மற்றும் செட்டிக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் உள்ள 2.5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்க 50 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். அவர்கள் இரவு பகலாகப் பணியாற்ற வேண்டியுள்ளது.

  300 நர்சுகள் இருக்கவேண்டிய நிலையில் 10 பேர் மட்டுமே உள்ளனர். இதனால், டாக்டர்களே நர்சுகளின் பணியையும் செய்ய வேண்டியுள்ளது.

  டாக்டர்கள் தங்குவதற்கு சரியான வசதியில்லை. கடந்த வாரம் சுமார் 5 ஆயிரம் பேர் சின்னம்மையால் பாதிக்கப்பட்டனர். நர்சுகளின் உதவி இல்லாமலேயே அவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க வேண்டியதாயிற்று.

  முகாம்களில் உள்ள தமிழர்களின் சுகாதாரத் தேவைகளை கவனிக்க உயர்நிலைக் குழுவை அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.