வவுனியா இராணுவ தலைமைத் தளம் மீது புலிகளின் தாக்குதல்:முறியடிக்கப்பட்டது-பாதுகாப்பு அமைச்சு.

09.09.2008.

புலிகள் இன்று அதிகாலை ஆகாய, தரைவழி தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.வவுனியா இராணுவ தலைமைத் தளம் மீதான விடுதலைப் புலிகளின் இத் தாக்குதலை இராணுவம் முறியடித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.எறிகணை மற்றும் விமானக்குண்டுத் தாக்குதல்களுடன் இந்தத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய பாரிய தரைவழித் தாக்குதலை இராணுவத்தினர் எதிர்த்தாக்குதல் நடத்தி விடுதலைப் புலிகள் 10 பேரைக் கொன்றுள்ளதாகவும் 10 இராணுவத்தினரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் இந்த மோதலில் உயிரிழந்துள்ளதாகவும் பாதுகப்பு அமைச்சகம் தனது செய்தியில் விபரம் தெரிவித்துள்ளது.இன்று காலை வரையில் விடுதலைப் புலிகளின் 10 சடலங்களைப் படையினர் கண்டெடுத்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

இதேவேளை, தமது தாக்குதல் இலக்கை அடைய முடியாமல் போன விடுதலைப் புலிகளின் 2 தாக்குதல் விமானங்களைத் துரத்திச் சென்ற விமானப்படை விமானங்கள் அவற்றில் ஒன்றை முல்லைத்தீவு பகுதியில் சுட்டு வீழ்த்தியதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதது.

விடுதலைப் புலிகளின் பாரிய தாக்குதல் முறியடிப்புச் சண்டையில் 15 இராணுவத்தினரும், 8 பொலிசாரும், 5 விமானப்படையினரும் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.