வலுக்கட்டாயமாகவே புலிகள் பொதுமக்களுக்கு பயிற்சி வழங்குகின்றனர்:சிறீ லங்கா ராணுவப் பேச்சாளர்

விடுவிக்கப்படாத பிரதேசங்களிலுள்ள பொதுமக்களுக்கு அவர்களின் விருப்புக்குமாறாக விடுதலைப் புலிகள் பலவந்தமாக ஆயுதப் பயிற்சி வழங்குவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறுவர்கள், வயோதிபர்கள் உள்ளிட்ட சகல வயதினரையும் வலுக்கட்டாயமாக படையில் சேர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலுள்ள பொது மக்களுக்கு ‘மக்கள் படை’ எனும் பெயரில் முதற்கட்ட ஆயுதப் பயிற்சிகளை வழங்கிவருவதாக பல்வேறு இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இச் செய்திகள் தொடர்பிலேயே இராணுவப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“இராணுவத்தினரின் வெற்றிகரமான முன்னேற்றம் காரணமாக விடுதலைப் புலிகள் தினமும் அதிகமான தமது உறுப்பினர்களை இழந்துவருகின்றனர்.

இதன்காரணமாக அவர்களுக்கு ஆட்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது” எனவும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இராணுவத்தினருக்கெதிரான போரில் பொது மக்களைப் பயன்படுத்தினால் பொதுமக்கள் பாரிய அபாயத்துக்குள் தள்ளப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள், வர்த்தகர்கள், பலநோக்குக் கூட்டுறவுச்சங்க அதிகாரிகள் என சுமார் 1000 பேருக்கு முதற்கட்ட பயிற்சிகள் வழங்கப்படுவதாக அந்த இணையத்தள செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.