வறுமை – கைத்தறி தொழிலாளியின் குடும்பம் தற்கொலை

தனியார் தாரளமயக் கொள்கையின் விளைவாய் நகரப்புற, கிராமப்புற தொழிலாளர்கள் வேலை வாய்ப்பிழந்து வருவதோடு போதிய வருவாய் இன்றி வறுமைச் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். தனியார் மயக் கொள்கையாலும் மின்வெட்டாலும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் கைத்தறி நெசவாளர்கள்தான். மின் வெட்டு காரணமாக ஆயிரக்கணக்கான தறிகள் மூடப்பட்டதோடு ஆங்காங்கு கஞ்சித் தொட்டிகளும் திறக்கப்பட்டன. கோவை, திருப்பூர், சேலம் போன்ற பகுதிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏராளமான தற்கொலைகளும் வறுமை காரணமாக நடந்திருக்கின்றன. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் அரிராம் (58). இவர் தனது மனைவி ராஜேஸ்வரி (50), மகன் வரதராஜன் (34), மருமகள் ஜீவா (30), பேரக் குழந்தைகள் வாணிஸ்ரீ (10), சந்தோஷ்குமார் (ஒன்றரை வயது) ஆகியோருடன் வசித்து வந்தார்.வீட்டிலேயே தறிக்கூடம் வைத்திருந்த அரிராம், தனது மகன் வரதராஜனுடன் நெசவுப் பணியில் ஈடுபட்டு வந்தார். அதில் குடும்பம் நடத்த போதிய வருவாய் கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இந் நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வரதராஜன் வீட்டை விட்டு வெளியேறியவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என்ற விபரமும் தெரியவில்லை.இந் நிலையில், அரிராம், ராஜேஸ்வரி, ஜீவா, குழந்தைகள் வாணிஸ்ரீ, சந்தோஷ்குமார் ஆகியோர் வீட்டில் விஷம் குடித்தனர்.உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர்களை சேலம் அரசு மருத்துவமனைக்கு அக்கம் பக்கத்தில் இருந்துவர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் அதற்குள் அரிராமும், ராஜேஸ்வரியும் உயிரிழந்தனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்ட ஜீவா, குழந்தை வாணிஸ்ரீ ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.மீதமுள்ள ஒன்றரை வயது குழந்தை சந்தோஷ்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடுமையான மின்வெட்டால் விவசாயமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மக்களின் வாழ்வை முழுமையாக தனியார் மயம் அபகரித்து மக்களுக்கு தற்கொலையை பரிசளிக்கிற நிலையில் தமிழகம் ஒளிர்கிறது என்று சொல்கிறார் கருணாநிதி.

3 thoughts on “வறுமை – கைத்தறி தொழிலாளியின் குடும்பம் தற்கொலை”

  1. உலகமயமாக்கலின் விளைவாக ஏற்பட்ட தொழில் இல்லாமை அதனால் விளைந்திட்ட வறுமையுடன் குடும்பத்தலைவர்களின் குடிப்பழக்கமும் அவர்கள் வறுமை என்னும் நெருப்பில் மேலும் எண்ணெய்யை ஊற்றுகிறது.இதற்க்கு முழுமுதல் காரணம் கருணாநிதியும் அவருடைய அரசும் தான்.

  2. குடிப்பழக்கம் இந்த தற்கொலைகளுக்கு காரணம் என்று நான் நினைக்கவில்லை.தொழிலாளர்கள் என்றால் குடிகாரர்கள் என்ற பொதுப்புத்தியில் இருந்து உருவாகிறது. முழுக்க முழுக்க தனியார் மயக் கொள்கைகளால் இம்மக்கள் வாழத் தகுதியற்றவரக்ளாகி விட்டார்கள்….. இவர்களுக்கு சாவைப் பரிசளிக்கிறார்கள் முதலாளிகள்

  3. இதே கருணாநிதியின் கட்சி தான் 60 ஆண்டுகள் முன்பு கைத்தறித் தொழிளள்ரின் வறுமையை நீக்க வீடு வீடாகச் சென்று கைத்தறித் துணி விற்றது. (அதற்கு ஒரு கதர் எதிர்ப்புப் பரிமாணமும் இருந்தது).
    அது ஒரு சினிமாப் படத்தில் காட்சியாகவும் வந்தது.
    தமிழுக்காகத் தண்டவாளத்தில் வைத்த தலை மாறிப் பல காலம்.
    1960கள் முதல் கருணாநிதி ஒரு கைதேர்ந்த சூழ்ச்சிக்காரர்.

Comments are closed.