வரவு செலவுத் திட்டம் வாக்குகளைப் பெறுவதற்கான லஞ்சம் : ஜே.வி.பி

vijithaஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கை தீவு முழுவதும் பணம் விநியோகிக்கப்படும் என்று வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கண்டனம் தெரிவிப்பதுடன் இத்திட்டத்தின் நோக்கம் குறித்து தெரிவிக்கையில் ராஜபக்ச அரசு வாக்குகளை எதிர்ப்பார்த்து வழங்கப்பட்ட இலஞ்ச திட்டமாகும் என முன்னணியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் தருணம் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்:-
நாட்டை கட்டியெழுப்புவதற்கான எந்தவொரு வேலைத்திட்டமும் இல்லாமல் கடன் மலையை பெறுவதற்காக ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் நோக்கோடு சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளை மாத்திரம் கொண்டிருக்கும் ஜில்மாட்ட நடவடிக்கையாகும்.
எதிர்கால நோக்கின்றி இலக்கங்களால் மெழுகி பூசப்பட்டிருக்கும் வாக்குறுதிகள் அடங்கிய பொதியில் எவ்விதமான பிரயோசனமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
இலஞ்சம் கொடுத்து நடத்தப்படுகின்ற ஜனாதிபதி தேர்தல் சட்டவிரோதமானது. அதேபோல, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் போட்டியிடமுடியாது.
இறுதி வியாக்கியானத்தின் பிரகாரம் போட்டியும் சட்டவிரோதமானது போட்டியாளரும் சட்டவிரோதமானவர் என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டவிரோதமான ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டாம் என்பதே மக்கள் விடுதலை முன்னணியின் நிலைபாடாகும்.
நாட்டின் அடிப்படைச்சட்டத்தை எப்படியாவது எட்டி உதைத்து ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலை நடத்துவராயின் அவரை தோல்வியடைய செய்வதற்கு ஆகக்கூடிய தலையீடுகளை மேற்கொள்வோம். சட்டவிரோதமான வேட்பாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கையையும் எடுப்போம் என்றும் அவர் கூறினார்.

இலங்கையின் மற்றொரு இனவாதக் கட்சியும் கம்யூனிசத்தின் பேரால் பேரினவாதத்தை விதைக்கும் ஜே.வி.பியும் அக்கடியிலிருந்து பிளவடைந்த முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் சம உரிமை இயக்கத் தலைவர்களும் இனப்படுகொலைக்கு ஆதரவளித்து ராஜபக்சவை வளர்த்தனர்.