வன்னேரிக்குளத்தில் 25 படையினர் பலி : புலிகள் அறிவிப்பு

விடுதலைப்புலிகள் வன்னேறிகுளம் பகுதியில் இராணுவத்தினர் மீது மேற்கொண்ட முறியடிப்புத் தாக்குதலில் 25 படையினர் கொல்லப்பட்டதுடன் 40 பேர் காயமடைந்தாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். 4 மணிநேர மோதல்களில் படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் படையினரிடம் இருந்து ஆயுதங்கள் பலவற்றை மீட்டுள்ளதாகவும் அத்துடன் படையினரின் இரண்டு சடலங்களைத் தாம் கைப்பற்றியதாகவும் விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

வன்னேறிகுளம் பகுதியில் இன்று முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 1 மணிவரை இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளன. விடுதலைப்புலிகள் பிரதேசத்தில் தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை கிளிநொச்சிக்கு தெற்கில் நேற்று கடும் மோதல்கள் இடம்பெற்றதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த மோதல்களில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை நாச்சிக்குடா கடற்பகுதியில் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இன்று முற்பகல் 11.30 அளவில் மூன்று மணிநேரம் பரஸ்பர மோதல்கள் ஏற்பட்டதாக படையினர் தெரிவித்துள்ளனர். இரண்டு தரப்பிலும் சமமான சேதங்கள் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை