வன்னி மோதல்கள் : மக்களின் அவலம்

அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் நடைபெற்ற வேறு பல பிரதேசங்களில் இருந்து பாதுகாப்புக் கருதி வன்னேரிக்குளம் அக்கராயன் மற்றும் ஆனை விழுந்தான் ஆகிய இடங்களில் தஞ்சமடைந்தவர்கள் இப்போது அந்தப் பகுதிகளில் இருந்து அச்சம் காரணமாக பாதுகாப்புக் கருதி வேறு இடைப்பட்ட பகுதிகளை நோக்கி இடம்பெயரும் பெரும் அவலநிலை தோன்றியுள்ளது. இப்போது இந்தமக்கள் தாம் வந்து தங்கிய மேற்குறிப்பிட்ட இடங்களுக்கும் கிளிநொச்சி நகருக்கும் இடைப்பட்ட பகுதிகளை நோக்கி நகரத்தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. மன்னார் ,வவுனிக்குளம், மல்லாவி, துணுக்காய் ஆகிய பகுதிகளில் மோதல்கள் தீவிரமாகியதைத் தொடர்ந்து அங்கிருந்து மக்கள் இடம்பெயர்ந்து முன்னர் கூறிய பகுதிகள் பாதுகாப்பானவை என்று நினைத்து அங்கு குடிபெயர்ந்தனர். பாதுகாப்புக் கருதி இப்போது மீண்டும் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர வேண்டிய அவல நிலைக்கும் நிர்க்கதிக்கும் ஆளாகியுள்ளனர். வன்னேரிக்குளம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடைவெளியின்றி ஷெல்கள் வீழ்ந்து வெடித்ததில் 49 வயதுடைய சின்னத்தம்பி அருளானந்தம் என்பவர் கொல்லப்பட்டிருந்தார். இதேவேளை கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு பகுதியில் நடத்தப்பட்ட விமானக் குண்டுத்தாக்குதலில் காயமடைந்த 18 பேரில் ஒருவர் சத்திரசிகிச்சையின் பின்னர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையில் விமானக்குண்டு வீச்சு எறிகணை வீச்சுக்கள் காரணமாக கிளிநொச்சி நகரை அண்டிய பகுதிகளை நோக்கி இடம் பெயரும் மக்களை பாதுகாப்பாக பாடசாலைகளில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை கிளிநொச்சி மாவட்ட அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் எடுத்துள்ளனர். இதற்கென 15 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டு அங்கு தங்கவைக்கப்படுபவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவதற்கான கட்டமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.