வன்னி மக்களை கைவிட்டு விட்டோம் என்ற உணர்வு எம் மனதில் தொடர்ந்தும் உள்ளது’

26.09.2008.

இலங்கையில் மனிதநேய பணியாளர் ஒருவர் வன்னியில் இருந்து வெளியேறியதால் தனக்கு ஏற்பட்ட வலி என்னும் தலைப்பில் கடந்த 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று பிபிசி ஆங்கில இணையத்தள செய்திக்கு விபரித்த தகவல்களின் தமிழ் வடிவம் இது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை கைப்பற்றும் நோக்கத்தோடு இலங்கை இராணுவத்தின் வலிந்த தாக்குதல்கள் மிகவும் ஆக்ரோஷமாக இடம்பெறுவதால் வடக்கில் மனிதாபமான நிலையானது மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதோடு மிகவும் பாரதூரமான நிலையையும் தொட்டு நிற்கின்றது. மோதல்கள் காரணமாக 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ள சூழலில், ஒரு வாரத்திற்கு முன்பு ஐ.நா. சபையும் மற்றும் அரசசார்பற்ற தன்னார்வ தொண்டர் நிறுவனங்களும் வெளியேறியுள்ளார்கள். ஒரு தன்னார்வ தொண்டர் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர் வன்னியில் இருந்து வெளியேறி செல்கையில் எவ்வளவு கடினமாக இருந்தது என தனது மன உணர்வுகளை விபரிக்கின்றார்.

கிளிநொச்சியில் கடந்த சில வாரங்களில் நான் இருந்தபோது ஒரு மிகப் பெருமெடுப்பலான இராணுவ முன்னெடுப்பு தென்மேற்கு முனையில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இலங்கை இராணுவத்திற்கும் விடுத லைப் புலிகளுக்குமிடையிலான இந்த யுத்தத்தின் தீவிரமானது நகர்ப்புறத்தை நோக்கி அண்மித்து வருவதாகவே தென்படுகின்றது. இந்த நடவடிக்கைக ளினால் பாரிய அளவிலான மனித இடப்பெயர்வு அவலங்கள் வன்னிம ண்ணில் அரங்கேறுகின்றது. நான் முன்னொருபோதும் கேட்காத அளவிற்கு சத்தங்களும் துப்பாக்கிசூடுகளும் மிக நெருக்கமான சண்டைகள் நடைபெறு வதை உணர்த்தின, இரவு பகல் வித்தியாசமின்றி தொடர்ச்சியாக குண்டுகளும் ஆட்லறி, மற்றும் பல்குழல் எறிகணை தாக்குதல்களும் சற்று தள்ளி வீழ்ந்து வெடிப்பதையும் கணிக்க முடிந்தது.

நாளுக்கு நாள் ஆக்ரோஷமான மிகமோசமான ஆட்லறி எறிகணை வீச்சுக்கள் மிக அண்மையில் நெருங்கி வீழ்ந்து வெடிப்பதையும் உணர்ந்தேன்.

ஒவ்வொரு முறையும் ஷெல்கள் விழுந்து வெடிக்கும்போது எனது அலுவலகம், எனது படுக்கையறை, எனது சமையலறை ஏன் எனது பதுங்குகுழி கூட அதிர்வுகளால் நடுங்கிக்கொள்ளும். நிஜ யுத்தம் ஒன்று வாசல்படியை நெருங்கி வருவதையே எனக்கு அது உணர்த்திற்று.

ஒரு தன்னார்வ தொண்டர் நிறுவன பணியாளனாக தினமும் யுத்த அவலத்தால் இடம்பெயர்ந்து திரண்டு வரும் மனித ஜீவன்களுக்கு தேவையான அடிப்படை வாழ்வாதாரத்தை வழங்குவதில் மிகவும் சிக்கல்களையும் சவால்களையும் எதிர் கொண்ட அதேவேளை சில கணங்களில் செய்வதறியாது திணறிவிட்டேன்.

ஆரம்பத்தில் வன்னியின் தென்மேற்கு பகுதிகளில் இருந்தே மக்கள் ஆட்லறி சத்தத்தின் அதிர்வுகளாலும் பயத்தினாலுமே வேறு இடங்களை நோக்கி ஓடத்தொடங்கினர். மிகமிக மட்டுப்படுத்தப்ப ட்டளவிலேயே வாகன வசதிகள் இருந்ததால் மக்கள் மிகக் குறுகிய தூரத்திற்கே இடம்பெயர முடிந்தது, அங்கு மரநிழல்களில் அடைக்கலம் தேடிக் கொண்டார்கள்.

இராணுவம் தொடர்ச்சியாக தமது இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னேறியதால் மீண்டும் குண்டுமழையில் இருந்து தப்பிப்பதற்காக ஒருசில தினங்களில் மீண்டும் இடம்பெயரவேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டனர். தன்னார்வ நிறுவன ங்களின் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு பொதுவாக வன்னி தென்மேற்கு பகுதிகளில் எமது பணியாளர்கள் கடமைபுரியவில்லை.

ஆனால் யுத்தத்தின் தீவிரத்தன்மையாலும் இராணுவ முன்னேற்றத்தாலும் மக்கள் கிளிநொச்சியை அண்டிய பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து வந்ததால், அவர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதுடன் அவர்கள் ஒருதடவையல்ல இரண்டுதடவையல்ல பல தடவைகள் இடம்பெயர்ந்த சோகமான கதைகளையும் கேட்க முடிந்தது.

அத்துடன் அம்மக்கள் மிகவும் பசியுடனும், களைப்புடனும், அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்துடனும் காணப்பட்டனர். அதில் இருந்த தந்தையர் தமது வாழ்வாதாரத்தை முற்றாக இழந்து ள்ளார்கள். தொழில்களை இழந்ததோடு தமது சொத்துகளாக இருந்த மீன்படி படகுகள், வலைகள், படகு இயந்திரம் என்பவற்றையும் இழந்து போக்கற்றவர்களாக காட்சியளித்தனர். அங்கிருந்த தாய்மார் உணர்வுகளின் உச்சத்தில் நின்று குடும்பத்திற்கான உணவு, உறைவிடம் இல்லாமல் அல்லாடும் சோகக் காட்சி இன்னும் மனதில் தெரிகின்றது. சிறுவர்களோ பள்ளிப்படிப்பை மறந்து பல மாதங்கள் கடந்துவிட்டன.

தன்னார்வ மனிதநேயப் பணியா ளர்களாக நாம் எம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம். தலைக்கு மேல் ஒரு கூரை, தண்ணீர் வசதி, களிவறைவசதி என்பவற்றை எம் சக்திக்குட்பட்டு செயற்படுத்தினோம், தவிரவும் அவசர தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், கிளிநொச்சியை பாதுகாப்பான இடமாக கருதியதாலும் அனைத்து வசதிகளையும் முடிந்தளவு நிறைவேற்றினோம். ஆனாலும் நாட்கள் நகர நகர நிலைமை மோசமாக தொடங்கியது.

அதாவது குண்டுகளும் ஆட்லறிகளும் கிளிநொச்சி நகருக்குள்ளும் அதனையண்டிய பகுதிகளிலும் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கியது. இதனால் மனிதநேயப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமில்லாத ஒரு இறுக்கமான நிலை தோன்றியதால் எமது பணியை தொடரமுடியாத கையறு நிலைக்கு தள்ளப்பட்டோம்.

பாதுகாப்பு நிலைவரமானது பாரதூரமான உச்சநிலையை எட்டியது. ஆட்லறி எறிகணை தாக்குதல்களும், விமான குண்டுவீச்சு தாக்குதல்களும் கிளிநொச்சியில் சாதாரண நிகழ்வாக இடம்பெற ஆரம்பித்தது. இனிமேலும் மனிதநேய தன்னார்வ தொண்டர் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தை வழங்கமுடியாது எனவும், இதனால் வன்னியை விட்டு வெளியேறும் வண்ணம் இலங்கை அரசால் எமக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. அத்தரு ணத்தில் மொத்தமாக 10 சர்வதேச மனிதாபமான பணியாளர்கள் வன்னியில் இருந்தோம். எமது அலுவலகங்களை அரசகட்டுப்பாட்டு பகுதிக்கு நகர்த்த வேண்டியது மனதை உருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம்.

உணர்வுகளும் உள்ளக்குமுறல்களும் அதிகமாக இருந்த நேரமது, நாம் வன்னியை விட்டு புறப்பட எடுக்கும் ஆயத்தங்கள் எமக்கு ஒருவித குற்ற உணர்வையும் எமது கையாலாகா த்தனத்தையும் புலப்படுத்தியது. இதே மக்களுக்கு, மக்களுடன் சேர்ந்து பணியாற்றி அவர்களுடனான நல்லுறவு ஒன்றை வளர்த்து, அவர்களுக்கு மனிதாபமான தேவை பாரிய அளவில் தேவைப்படும் நேரத்தில் இம்மக்களை கைவிட்டு பிரிய நேர்கின்றதே என்ற மனஅழுத்தம் என்னை முழுமையாக ஆட்கொண்டது.

எமது வேலைத்திட்டங்களை கைவிட்டுச் செல்வதென்பது தொழில்ரீதியாக மிகவும் கடினமாக இருந்தது. ஆனாலும் எமது உள்ளூர் பணியாளர்களின் உணர்வு களும்,ஏக்கங்களும் எம்மை மிகவும் வருத்தியது.

வன்னியில் இருந்து அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்வதானால் த.வி.புலிகளிடம் அனுமதி பெற்றாக வேண்டும். அதாவது பாஸ் நடைமுறை. எமது உள்ளூர் பணியாளர்கள் ஏதாவது ஒரு காரணத்தால் வன்னியை விட்டு வெளியேற பாஸினை பெற முடியவில்லை. பாஸ் நடைமுறையானது தனி நபர்களுக்கே வழங்கப்படும், குடும்பமாக பாஸ் பெறமுடியாது.

எனவே எமது உள்ளூர் பணியாளர்கள் குண்டு மழைக்குள்குள்ளும், வான்வெளி தாக்குதலிலும் தமது குடும்பத்தாரை தவிக்கவிட்டு எம்மோடு அரசகட்டுப்பாட்டு பகுதிக்கு வந்து தமது வாழ்வாதாரத்தை தேடுவதென்பது நடைமுறைக்கு ஒவ்வாதது, எனவே அவர்கள் தமது தொழிலையும் இழந்து தொடர்ந்தும் வன்னியிலேயே தங்கியிருக்க வேண்டி யுள்ளது. இவர்கள் பலோத்காரமாக புலிகளால் போரில் ஈடுபடுத்தப்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.

உள்ளூர் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கி அவர்களின் மனநிலையை புரிந்து கேள்விகளுக்கு பதிலளிப்பது மிகச் சிரமமாக இருந்தது. சில சந்தர்ப்பங்களில் உணர்வின் உச்சியில் நிற்பதாகவே உணர்ந்து கொண்டேன். வன்னி போர் களமுனை கிளிநொச்சியை நெருங்க நெருங்க பணியாளர் தமது எதிர்கால த்தையிட்டு முடிவை எடுக்கும் தீர்க்கமான கட்டத்திற்கு தள்ளப்பட்டார்கள்.

Thanks:Thinakkural.