வன்னியின் துயரநிலை – இன்னும் என்னசெய்யப் போகிறோம் ? : விஜிதா

வன்னியில் அடை மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் மீளக்குடியேறிய மக்கள் பெரும் அவலநிலையை எதிர்நோக்கத் தொடங்கியுள்ளார்கள். காலம் மாறிப் பெய்ய ஆரம்பித்துள்ள அடை மழை காரணமாக தற்காலிகக் கூடாரங்களின் கூரை விரிப்புகள் ஒழுகுவதனால் ஒதுங்குவதற்குக் கூட மாற்று இடங்களை தேடவேண்டியிருக்கிறது அல்லது கூடாரங்களைப் புனரமைப்புச் செய்யவேண்டியிருக்கிறது எனத்தெரிவிக்கப்படுகிறது.

வன்னயில் அகதிகள் குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக அனர்த்த முகாமைத்துவம் தேவைப்படும் என தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளரும், தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் முக்கியதஸதருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்திருக்கிறார். இதனை கிளிநொச்சியில் நடைபெற்ற தமிழக் கட்சிகளின் அரங்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

ஓமந்தை, புளியங்குளம், மாங்குளம், கனகாரயன் குளம் மற்றும் மன்னார் மாவட்டத்தில் மாந்தைப்பகுதியிலும் அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களே இவ்வாறு மழையில் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மீள்குடியேற்றப் பணிகள் அரசின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அரசு சாரா அமைப்புக்கள் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீள்குடியேற்றம் துரிதப்படுத்த வேண்டும் என பலராலும் பலமுறையும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வந்த நிலையிலும் மீள்குடியேற்றம் மந்த நிலையிலேயே மேற்கொள்ளப்பட்டது.

வன்னிப் பகுதியில் பாடசாலைகள் கட்டடங்கள் இன்றியும் தளபாடங்கள் இன்றியும் இயங்கிவருகின்றன, மாணவர்கள் மரநிழல்களில் நிலத்தில் அமர்ந்திருந்தே கல்வி கற்கின்றார்கள். ஆசிரியர்கள் எந்த வசதியும் இன்றி அர்ப்பணிப்புடன் கல்வி கற்பித்து வருகின்றார்கள், அரசாங்கம் உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்து வருகின்ற போதும் அவை முழுமையாக இல்லை. எனவே யாழ்ப்பாணக் கல்விச்சமூகம் உதவ முன்வரவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். மத்தியில் கூட்டாட்சி, வட கிழக்கில் சுயாட்சி எனும் அரசியல் கோசத்துடன் அரசியல் செய்து இன்று அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கத்துடன் சேர்த்தியங்கும் அரசியல்வாதிகள் இறுதியில் மக்களிடம் கோரிக்கை விடுக்கும் நிலைக்குச் சென்றிருக்கிறார்கள்.

அதே வேளை வன்னியில் மீள்குடியேற்றப் பகுதியில் கசிப்பு, சட்ட விரோத மதுபாவனை உற்பத்தியும் விநியோகமும் அதிகரித்தள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்னறனர். வன்னியில் சட்ட ரீதியான மது விற்பனை நிலையங்கள் இதுவரை திறக்கப்படவில்லை என்பதுடன் மீள்குடியேறிய மக்கள் தொழில் வாய்ப்பின்றியும் இருக்கின்றமையால் கசிப்பு, சட்ட விரோத மதுபாவனை உற்பத்தியும் விநியோகமும் அதிகரித்தள்ளதாகக் கருதப்படுகிறது.

மன்னாரில் கடந்த மாதம் 24 ஆம் திகதி காணமல் போன தாயும் அவருடைய 5 வயது மகனும் வீடு திரும்பியிருக்கிறார்கள். மன்னார் நகரில் வைத்து அடையாளம் காட்டிக்கொள்ளாத சிலரால் வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு, சிறிய வீடொன்றில் பூட்டி வைத்து, இறந்து போன கணவரைப் பற்றி விசாரணை நடாத்தியதாக தாயார் கூறியிருக்கிறார். மறுநாள் நள்ளிரவில் வவுனியா குறுமன் காட்டுப் பகுதியில் தங்களை இறக்கி விட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இலங்கை அரசும் அதன் வியாபார அரசியல் கூட்டடாளிகளும் வன்னி மக்கள் குறித்துத் துயரடைவதில்லை. திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு ஒரு புறத்தில் நடைபெறும் அதே வேளை அதனை மறைப்பதற்கான பிர்ச்சார நடவடிக்கைகள் இன்னொரு புறத்தில் நடைபெறுகின்றன.

குளாவடி உருத்திரபுரம் பத்தாம் வாய்க்காலில் இராணுவம் கடந்தவாரம் இரண்டு  வாகனங்களில் இறக்கியிருந்தனர். யாரும் அவர்களை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.

பெரும்பான்மை ஊடகங்கள் அனைத்தும் அரச சார்புப் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றன. அரச துணைக் குழுக்களோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ இது குறித்து இலங்கை அரசிற்கோ அதன் இந்திய எஜமானர்களுக்கோ எந்த அழுத்தங்களையும் வழங்கத் தயாரில்லை. அதேவேளை, புலம் பெயர் நாடுகளில் புலிகளைச் சார்ந்த அமைப்புக்கள் இது குறித்த எந்த அக்கறையும் கொள்ளவோ தாம் வாழும் நாடுகளில் அரசுகளுக்கு எந்த அழுத்தங்களையும் பிரயோகிப்பதாகத் தெரியவில்லை.

இலங்கையில் ஒடுக்குமுறைக்கு மத்தியிலும் சில அச்சு ஊடகங்கள் மக்களின் அவலங்கள் குறித்து சில செய்திகளை வெளியிடுகின்றன என்பதைக் குறிப்பிட்டாகவேண்டும்.

சர்வதேச மனிதாபிமான அமைப்புக்கள் என்று மார்தட்டிக்கொள்ளும் தன்னார்வ நிறுவனங்களுக்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பதும், அவர்களை உடனடி நிவாரணத்திற்கு வலியுறுத்துவதும் தற்காலிகமான நடவடிக்கைகளாக அமையலாம்.

தவிர உலகம் முழுவதுமுள்ள ஜனநாயக மனிதாபிமான சக்திகள் மத்தியில் வன்னியின் தொடரும் அவலம் தீவிர பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். திட்டமிட்டு அழிவுக்கு உள்ளாக்கப்படும் தமிழ்ப்பேசும் மக்களை ஆபத்திலிருந்து தக்கவைப்பது இன்றைய தலையாயக் கடமை. அதற்கான தர்மீகப் பொறுப்பு எம் ஒவ்வொருவரிடமும் உள்ளது.

இனப்படுகொலையையும் இனச் சுத்திகரிப்பையும் தமது நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டிருக்கும் இலங்கை அரசு, அதன் துணைக்குழுக்கள், முகவர்கள் ஆகியோர் மீதான குறைந்தபட்ச நம்பிக்கையும் அற்றுப் போய்விட்ட நிலையில் அதற்கு எதிரான ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரளவேண்டும்.

One thought on “வன்னியின் துயரநிலை – இன்னும் என்னசெய்யப் போகிறோம் ? : விஜிதா”

  1. தலைவர் வந்து பேசுவார் என்றூ இன்னும் தலைகழன்றவர்கள் பேச்சு மாறாமல் இருக்கும்போது நமது மக்களீன் வாழ்க்கை மாற்றத்திற்கு எதுவுமே செய்ய முடியாது.

Comments are closed.