வன்னியில் ஏற்பட்ட பாரிய இழப்புகள் குறித்து ஆராய இராணுவத் தளபதியால் விசாரணைக் குழு நியமனம்

08.09.2008.

வன்னிக் கள நிலைவரம் மேலும் மோசமாகப்போவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக “லக்பிம’ ஆங்கில செய்தித்தாளின் பாதுகாப்பு ஆய்வாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

இராணுவத்தினர் நாளொன்றுக்கு 10 விடுதலைப் புலிகளை கொல்வதாக கூறுகின்றபோதும் கடந்த வாரம் வன்னியில் படையினர் மீது நடத்திய தாக்குதல்; அவர்கள் இன்னும் பலமாக இருக்கின்றார்கள் என்பதை உணர்த்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று 57 1ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த நான்காவது சிங்கப் படையணி வன்னேரிக்குளத்தில் உள்ள விடுதலைப் புலிகள் முன்னரங்க நிலைகளைத் தாக்கியது. சிறியரக ஆயுதங்களைக் கொண்டே இந்தத்தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் மூலம் சுமார் 600 மீற்றர் பிரதேசத்துக்குள் படையினர் முன்னேறினர்.

லெப்டினன்ட்கள் மங்கல ராஜித மற்றும் சமந்த திராணகம ஆகியோர், படையினரின் சார்லி அணிக்கப்டன் மங்கல ஜெயசூரிய தலைமையிலான டெல்டா அணி ஆகியன விடுதலைப் புலிகளின் நிலைகளை உடைத்துக்கொண்டு முன்னேறின.

இந்தநிலையில் அன்று பகல்வேளையில் விடுதலைப் புலிகள் தமது தீவிர எதிர்த் தாக்குதலை ஆரம்பித்தனர். மூன்று திசைகளில் இருந்து இந்தத் தாக்குதலை அவர்கள் படையினர் மீது தொடுத்தனர். இதன் காரணமாக 4ஆவது சிங்கப் படைபிரிவின் சில குழுக்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல் பிரிந்து போக வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களைச் சுற்றி நின்று விடுதலைப் புலிகள் தாக்கிப் பாரிய சேதத்தை ஏற்படுத்தினர்.

இதன்போது சார்லி அணிக்குத் தலைமை தாங்கிச் சென்ற லெப்டினன்ட் திராணகம கொல்லப்பட்டார். இவர் கடந்த மாதம் போர் முனையில் காயமடைந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் களமுனைக்குத் திரும்பியிருந்தார்.

இதேவேளை, இந்த மோதலின்போது இரண்டு தரப்பிலும் பாரிய உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. படையினரில் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துமுள்ளனர்.

இந்த நிலையில், இந்த மோதலில் படையினருக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழு ஒன்றை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா அமைத்துள்ளார். 58 ஆவது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் சாவின்ட்ர சில்வாவின் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நிலைமை இவ்வாறிருக்க படையினர் பூநகரியையும் கிளிநொச்சியையும் கைப்பற்ற அடுத்தடுத்த வாரங்களில் எடுக்கப்போகும் முயற்சிகளின் போது, விடுதலைப் புலிகளின் பாரிய எதிர்ப்புகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.