வன்னியில் இடம்பெயர்ந்த அகதிகளை தங்கவைப்பதில் பாரிய நெருக்கடி.

31.08.2008
பருவகால மழை ஆரம்பித்திருப்பதும் எதிர்வரும் 4 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவிருப்பதும் வன்னியில் இடம்பெயர்ந்த அகதிகளை தங்கவைப்பதில் பாரிய நெருக்கடி நிலையை தோற்றுவித்திருப்பதாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்கள் கவலை தெரிவித்ததுடன் அகதிகளை தங்கவைக்க தற்காலிக கூடாரங்களை வழங்குமாறு ஐ.நா. முகவரமைப்புகளிடமும் அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெயர்ந்திருப்போரின் அவலநிலை குறித்து மேலதிக அரச அதிபர் கந்தசாமி பார்த்திபன் தெரிவித்திருப்பதாவது;

முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். உலர் உணவு விநியோகங்களை ஓரளவு சிக்கலின்றி மேற்கொண்டு வருகின்றோம். ஆனால், தற்போது இடம்பெயர்ந்தவர்களுக்கு தற்காலிக கூடார வசதிகளை ஏற்படுத்த வேண்டிய தேவை அதிகரித்துள்ளது.

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று மழை காலம் ஆரம்பித்திருப்பதாகும். மற்றையது எதிர்வரும் 4 ஆம் திகதி பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக ஆரம்பிக்கவுள்ளதால் அங்கு தங்கியுள்ளவர்களுக்கு மாற்றிடங்களை ஏற்படுத்த வேண்டியவையுமாகும்.

இதேவேளை, இடம்பெயர்ந்த இடங்களிலுள்ள பாடசாலைகளும் முல்லைத்தீவில் இயங்குகின்றன. ஒரு பாடசாலையில் நான்கிற்கும் மேற்பட்ட பாடசாலைகள் இயங்குவதால் மேலும் கூடாரங்களை அமைத்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

தற்போது இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு தற்காலிக கூடாரங்களை ஐ.நா. முகவரமைப்புகளும் அரசசார்பற்ற நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டும் மேலும் இந்த உதவிகளை வழங்க அழைப்புவிடுத்துள்ளோம்.

இதேவேளை, இடம்பெயர்ந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக புத்தகங்கள் மற்றும் பாடசாலைகளுக்கான நிர்வாக உபகரணங்களை வழங்கி உதவுமாறும் கோரியுள்ளோம் என்றார்.

கிளிநொச்சி அரச அதிபர்

கிளிநொச்சி மாவட்ட நிலைமை குறித்து அரச அதிபர் என்.வேதநாயகம் கருத்துத் தெரிவிக்கையில்;

கிளிநொச்சி மாவட்டத்துக்குள் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களுக்கான உலர் உணவு நிவாரணங்களை நாம் வழங்கி வருகின்றோம். எனினும், அரிசியைத் தவிர உலருணவுப் பொருட்களின் கையிருப்பு குறைவாகவுள்ளதால் அவற்றை குறைந்த அளவிலேயே வழங்கி வருகின்றோம்.

மேலும், இடப்பெயர்வு ஏற்படின் சிக்கல்கள் அதிகரிக்கும். நாம் மேலதிகமாக கோரிய வைத்தியசாலைக்கு தேவையான எரிபொருளுக்கு ஆணையாளரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மழை காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் தற்காலிக தங்குமிடங்களை ஏற்பாடு செய்ய வேண்டிய தேவைப்பாடு அதிகரித்துள்ளது. இதற்கு உதவுமாறு ஐ.நா. உட்பட அரசசார்பற்ற நிறுவனங்களிடம் கோரியுள்ளேன்.

இது இவ்வாறிருக்க கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கியுள்ளன. பாடசாலை எதிர்வரும் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதால் இவர்களுக்கு மாற்றிட வசதிகளை ஏற்படுத்த வேண்டிய தேவைப்பாடு எழுந்துள்ளது.

இதனை கருத்திற்கொண்டு நாம் செயற்படுகின்ற நிலையில் ஐ.நா. முகவரமைப்பு மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் இடம்பெயர்ந்தவர்கள் தங்குவதற்கான மாற்றிடங்களை ஏற்பாடு செய்யமுடியுமென நம்புகின்றேன் என்றார்.