வன்னிப் பிரதேசத்திலுள்ள மக்களை இலங்கை அரசாங்கம் நன்றாகக் கவனிக்கிறது :கருணா.

16.10.2008.

 வன்னிப் பிரதேசத்திலுள்ள மக்களை இலங்கை அரசாங்கம் நன்றாகக் கவனிக்கிறதெனவும், அவர்களுக்கான உணவுப் பொருள்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்றுவரும் யுத்தம் மற்றும் அங்கு யுத்தநிறுத்தத்தை கொண்டுவருவது தொடர்பாக தமிழக் கட்சிகள் மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தத்தைக் கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வெளியிலிருந்து விடுவிக்கப்படும் அழுத்தம் காரணமாக, விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை அரசாங்கம் நிறுத்தமாட்டாதெனவும் கூறினார்.
 
இந்தியாவில் நடைபெறவுள்ள தேர்தலில் அரசியல் இலாபங்களைப் பெற்றுக்கொள்வதற்காக அங்குள்ள தமிழ்க் கட்சிகள் நாடகமாடுவதாகவும் கருணா தெரிவித்தார்.
 
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் முன்னாள் இந்தியப் பிரதமரை கொலை செய்ததாகவும், தமிழகக் கட்சிகள் அதனைப் பற்றிப் பேசுவதில்லையெனவும் குறிப்பிட்ட கருணா, தேர்தல் நடைபெற்று முடிந்தவுடன் இலங்கைத் தமிழர் தொடர்பில் தமிழகக் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகள் கைவிடப்பட்டுவிடுமெனவும் கூறினார்.
 
பாதுகாப்புப் படையினர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றியீட்டிவருவதாகவும், கிளிநொச்சியைக் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான போர் தொடர்ந்து இடம்பெறுவதுடன், யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் வரை போர் தொடர்ந்து இடம்பெறுமெனவும் கருணா குறிப்பிட்டார்.
 
தற்போதைய போர் நடவடிக்கையில் இராணுவத்தை முக்கிய இடத்தை நெருங்கியுள்ளதுடன், அவர்கள் பாதிவழியில் போரை நிறுத்தமாட்டார்களெனவும் தெரிவித்திருந்த கருணா, தொடர்ந்து இடம்பெற்றுக்கொண்டிருக்கும் யுத்தம் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் கடுமையான தீர்மானத்தை எடுத்ததாகவும் கூறினார்.