வன்னிப் படுகொலை விசாரிக்க மூவர் குழுவை நியமித்தது ஐ.நா.

தமிழ் மக்கள் மீது பேரினவாத இலங்கை அரசு நடத்திய இறுதித்தாக்குதலின் போது ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக சர்வதேச அளவிலும் ஆசியாவிலும் மனித உரிமை ஆர்வலர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளையோ குரல்களையோ வல்லாதிக்க நாடுகள் கண்டு கொள்ள வில்லை என்பதோடு இலங்கையை சர்வதேச நெருக்குவாரங்களில் இருந்து இந்தியாவும் சீனாவுமே பாதுக்காத்து வந்தது. இனக்கொலை தொடர்பாக ஐநாவின் மயான அமைதி குறித்து உலகெங்கிலும் பல குற்றச்சாட்டுகள் எழ நீண்ட மௌனத்தின் பின்னர் இப்போது போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க ஐநா மூவர் குழுவை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தக்

குழுவில் மொத்தம் மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள்முன்னாள் இந்தோனேசிய அரசு வழக்கறிஞர் மர்சுகி தருஸ்மேன், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் யாஸ்மின் சூகா, அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ரட்னர் ஆகியோர். கடந்த வாரம் .நா. அரசியல் விவகாரப் பிரிவு இணைச் செயலாளர் லின் பாஸ்கோ இலங்கைக்குச் சென்றார். அப்போது அதிபர் ராஜபக்சேவை சந்தித்தார். பின்னர் போர்நடந்த பகுதிகளையும் பார்வையிட்டு விட்டுத் திரும்பினர். இந்தநிலையில் போர்க்குற்ற விசாரணைக் குழுவை .நா. அமைத்துள்ளது. ஆனால் சர்வதேச அளவில் இலங்கை தொடர்பாக ஐநா மீது எழுந்துள்ள அதிருப்திகளைக் களையும் நோக்கில் ஒரு கண் துடைப்புக்காகவும் இக்குழு அமைக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. ஆக இதை சாத்தியமாக்கும் வகையில் புலத்து மக்கள் மிகப்பெரிய மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுத்து ஐநா போன்ற நிறுவனங்களுக்கு மேலதிக நெருக்கடிகளை உருவாக்கவும் செய்யலாம். இந்நிலையில் ஐநாவின் மூவர் குழு பற்றி கருத்துத் தெரிவித்துள்ள ஊடகத்துறை அமைச்சர் கெகலிய ரம்புகவெல்ல “ இது தேவையில்லாதது, ஏற்றுக் கொள்ளமுடியாதது. இலங்கை போன்ற சுதந்திரமான, இறையாண்மை மிக்க நாடு இதை ஏற்றுக் கொள்ளாது என்றார்.

3 thoughts on “வன்னிப் படுகொலை விசாரிக்க மூவர் குழுவை நியமித்தது ஐ.நா.”

 1. நியாயங்களைச் சொல்வது சரி. நம் தகவல்களின் செம்மை தவறும் போது நம் நியாயங்கள் பலவீனமடைகின்றன. நம் நம்பகத்தன்மை கெடுகிறது. நாம், நமக்குளே புனைவுகளைப் பேசுவோராவோம்.
  போர் முடிய முன்னரே வான் புகைப்படங்களிற் தெரிந்த புதைகுழிகளின் எண்ணிக்கையை வைத்து லண்டன் டைமஸ் 20,000 என மதிப்பிட்டது. (ஆனால் ஐ.நா. 10,000 அளவில் என்றது. அது மறுக்கப்பட்டது.)
  30,000 என்ற மதிப்பீடு பரவலாக (இலங்கைப் பேரினவதிகளும் அரசும் தவிர) ஏற்கப்பட்ட நிலையில் ஒரு அவுஸ்திரேலிய, முன்னாள் ஐ.நா. ஊழியர் 40,000 ஆவது இருக்கும் என்றார்.
  இப்போது 50,000 + என்கிறீர்கள். தகவலுக்கான ஆதாரங்களையும் சொல்லாவிட்டால் எண்கள் குருட்டு ஊகங்களாகித் தமிழின் வயது போல 10,000க் கணக்கில் கூடிக் கொண்டே போகும். (ஒன்றைக் குறைத்தாலும் தமிழ்த் துரோகிப் பட்டம் கிடைக்கும்).
  என்னளவில் 10,000 என்பது கூட மானுடம் ஏற்க இயலாத பெருந் தொகை. நாம் தருகிற தகவல்கட்கான ஆதாரங்களையும் சொல்வது அவற்றை வலுப்படுத்தும். என்பதாலே அவற்றையும் இங்கே சொன்னால் உதவும்.

  இலங்கைக்கு எதிரான மனித உரிமைக் குற்றச்சாட்டிற்குத் தடையாக இருந்தவை இந்தியாவும் சீனாவும் மட்டுமே என்றால் அதை எளிமையாக விளக்கி விடலாம்.
  ரஷ்யா எதிர்த்தது. இஸ்ரேல் தன் சொந்தக் காரணங்கட்காக எதிர்த்தது. அமெரிக்க மிரட்டலுக்கு உட்பட்ட அனைத்து நாடுகளும் எதிர்த்தன.
  சர்வதேச அரசியல் பற்றி நமக்குக் கூடிய தெளிவு தேவை என்றே தெரிகிறது. நம் மனதில் உள்ள சில படிமங்கட்கேற்பத் தகவல்களை வடிகட்டல் ஆபத்தானது.

  ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கான ஜி.எஸ்.பி.+ ஐ நிறுத்தும் என்று பூச்சண்டி காட்டியது. இப்போது இலங்கை நழுவுவதற்கு வழி காட்டுகிறது.
  ஐ.நாவின் அக்கறை அமெரிக்காவின் நோக்கங்களிலிருந்து பிரிக்க இயலாதது.
  இப்போது இந்தியவின் பிடி இறுகும் நிலையில் அமெரிக்கா தன் ஆதிக்கத்தை மீட்டெடுக்க “மனித உரிமை” “போர்க் குற்றங்கள்” எனும் மிரட்டல்களைப் பாவிக்கிறது.
  இலங்கை வழிக்கு வந்ததும் அவை பழங்கதையாகிவிடும்.

  தமிழர் இன்னமும் தவறன இடங்களிலேயே நட்புச் சக்திகளைத் தேடுகின்றனர்.

 2. தமிழீழ விடுதலைப்புலிகளை உலகில் 32 நாடுகள் வரையில் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளன. தமிழன் தன் இருப்பை உறுதிப்படுத்துவதற்கு எந்த முயற்சிகளை மேற்கொண்டாலும் அதை புலிகளின் பயங்கரவாதமாகவே இந்நாடுகளுக்கு இலங்கை, இந்திய அரசுகள் படம் காட்டுகின்றன. இந்தநிலையில் பயங்கரவாதிகள் என்ற போர்வையை விலக்காது, வன்னிப் படுகொலைகளை விசாரிக்க ஐ.நா குழுவை நியமிப்பதானது, வெறும் கண்துடைப்பாகவே முடியும்.

  1. வன்னிப் படுகொலைகள் புலிகளைக் கொன்றதைப் பற்றியனவல்ல. இது தனியே புலிகளைப் பற்றிய பிரச்சனையும் அல்ல. அவர்களது போர்க் குற்றங்களும் கண்டிக்கத் தக்கனவே. (புலிகளின் “பயங்கரவாத” அடையாளம் நீக்கப் பட்டாலும் அது கடந்த காலத்துக்குச் செல்லாது).
   ஆயுதம் ஏந்தாத பொது மக்கள் பாதுகாப்புப் பிரதேசம் என்று சொல்லப்பட்ட ஒரு சிறு நிலப்ப்பரப்பில் திட்டமிட்ட முறையில் பொதுக் கட்டிடங்கள் மீதும் மனைகள் மீதுமான தக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப் பட்டுள்ளனர். எண்ணிக்கை பற்றிய விவாதங்கள் எவ்வாறாயினும், இந்த இன ஒழிப்பு நவீன வரலாற்றில் மிக மோசமான இனக் கொலைகளுள் அடங்கும்.
   அரசாங்கம் எவ்விதத்திலும் நியாயப் படுத்த முடியாத மனிதப் படுகொலையை ஒப்பேற்றி உள்ளது.
   அது விசாரிக்கப் படாமலே போகலாம்.
   விசாரிக்கும் நோக்கங்கள் பற்றிய பிரமைகள் இல்லாமலே, விசாரணைக்கான நெருக்குவாரம் பயனுள்ளது.

Comments are closed.