வன்னிப் படுகொலைகளின் தொடர்ச்சி – ‘Operation Green Hunt’ : சபா நாவலன்

பிரஞ்சு நாட்டின் கொல்லைப் புறத்தில், மார்சையிலிருந்து எதிரொலி கேட்கும் தொலைவில் அல்ஜீரியா அமைந்திருக்கிறது. பிரஞ்சு அரசால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட G.I.A என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு ஒரு புறத்திலும், அல்ஜீரிய அரசு மறுபுறத்திலுமாக மக்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட 90 களின் ஆரம்பம் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் தமது முற்றத்திலேயே கொன்று போட்டது.

அரச எதிர்ப்பாளர்கள், இடதுசாரிகள், ஜனநாயகவாதிகள், அறிவுசீவிகள் என்று ஆயிரக்கணக்கில் அரசாலும், அரசிற்கு எதிரான அடைப்படைவாதிகளாலும் கொன்று வீசப்பட்டனர். தமது தேசத்தின் எல்லை தாண்டி பிரான்சில் தஞ்சமடைவதெல்லாம் அவர்களவில் சின்னவேலைதான். ஆனால் இரண்டு பாசிசத்தையும் எதிர்த்துச் செத்துப் போனவர்களும், சிதைக்கப்பட்டவர்களுமே அதிகம்.

யாழ்ப்பாணத்தின் அரைவாசிப் பகுதி ஐரோப்பாவில் தஞ்சமடைய இலங்கை பேரினவாத அரசின் கொலைக்கரங்களின் கோரத்தின் மத்தியிலும் உழைப்பையும், மண்ணையும், கொல்ல்லும் விமானங்களைத் தாண்டிய விண்ணையும் தம்மையும் நம்பி வாழ்ந்தவர்கள் தான் வன்னிமக்கள்.

வன்னி மண்ணிலிருந்து புலம் பெயர்ந்தவர்களை விரல்விட்டு எண்ணலாம். இந்த வன்னி மண்ணைச் சிதைத்து சின்னாபின்னமாக்கி, அதே மண்ணை மக்களின் சவக்காடாக மாற்றியது இலங்கை அரச பாசிசம். ராகபக்ச, சரத் பொன்சேகா போன்ற  சோவனிஸ்டுக்கள் தலைமையேற்று நடத்திய கொலைக் வெறியாட்டத்தில் சாரிசாரியாகப் பலியாகிப் போன ஆயிரமாயிரம் குழந்தைகள், முதியோர், பெண்கள் அன்னிய தேசத்தில் அடைக்கலம் புகுந்து வாழ்வது குறித்து தவறுதலாகக் கூடச் சிந்திததில்லை. இந்தியப் பழங்குடி மக்களுக்கு அவர்களின் மண்ணில் இருக்கு அதே நம்பிக்கை தான் வன்னி மக்களுக்கும் இருந்தது.

நிதி வழங்கும் நாடுகளேல்லாம் மேசையில் இருத்தி மிரட்டுகிற ஒரு குட்டித் தீவு தான் இலங்கை. இன்று நாங்கள் தான் அப்பாவி மக்களை எப்படிக் கொலைசெய்வது என உலகிற்கு அறிமுகப்படுத்தினோம் என மார்தட்டிக் கொள்கிறது இலங்கை அரச பாசிசம். கோரமான இந்த கூச்சலின் பின்னணியில் இந்திய அரசும், அதன் அதிகாரமும் மையமும் தான் செயற்பட்டிருக்கிறது என்பது இன்று மறுபடி புள்ளிவிபரங்களூடாக நிறுவப்பட வேண்டிய உண்மையல்ல.

இந்திய அரசால் திட்டமிடப்பட்டு, கிளிநொச்சியில் ஆரம்பித்து முள்ளிவாய்க்கால் மூலைவரை பிணங்களின் மேல் துரத்திவரப்பட்டு முடித்துவைக்கப்பட்ட இந்தக் கோரம் இந்தியாவிற்குப் புதிதல்ல. சொந்த மண்ணிலேயே இரண்டு லட்சம் விவசாயிகள் இரண்டு வருட எல்லைக்குள் தற்கொலை செய்து செத்துப் போனபோது இந்தியா உலகின் வல்லரசாக வளர்ச்சியடைகிறது என்று பெருமை பேசிக்கொண்டது தாம் இந்திய ஆளும் வர்க்கம். சொந்த மண்ணில் அவர்கள் நிகழ்த்திய படுகொலைகள தான் இந்தத் தற்கொலைகள்.

வன்னிப் படுகொலைகளின் இரத்தம் உறைந்து போகுமுன்னர் நடைபெற்ற பாதுகாப்புப் படைகளின் மாநாட்டில் இரண்டு முக்கிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஒன்று புலம் பெயர் நாடுகளில் புலிகளின் பண மூலங்கள் இன்னும் அழிக்கப்படவில்லை என்பது இந்தியப் பாதுகாப்பு ஆலோசகரர் நாராயணன் கூறியது. மற்றது மாவோயிஸ்டுகள் உள்நாட்டுப் பாதுகாப்பின் பிரதான அச்சுறுத்தல் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியது. சில நாட்களிலேயே லால்காரில் 1000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை மாவோயிஸ்டுக்கல் ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி அங்கு அரசின் நிழல் கூடப்படாமல் வாழ்ந்து வந்த பழங்குடி மக்கள் மீது இந்திய பெரும் பரிவரங்களுடன் இராணுவம் தாக்குதல் நடத்தியது.

ஒப்பரேசன் கிரீன் ஹன்ட் என அழைக்கப்பட்ட அப்பாவிப் பழங்குடியினர் மீதான இந்திய அரசின் தாக்குதல் மாவோயிஸ்டுக்களைத் தவிர தமக்கு ஆதரவாக யாருமே இல்லை என்று பழங்குடியினர் கருதும் நிலையை உருவாக்கியிருக்கிறது.

பழங்குடி மக்களையும் மலைவாழ் மக்களையும் அவர்கள் வாழும் இடங்களிலிருந்து இராணுவ பலம் கொண்டு எந்த நட்ட ஈடுமின்றி விரட்டியடித்துவிட்டு அங்குள்ள வளங்களை பல்தேசிய கோப்ரேட் கொம்பனிகளுக்கு தாரைவார்த்து கொடுப்பது மட்டும் தான் இந்திய அரசின் ஒரே நோக்கம். இதனை மாவோயிஸ்டுக்களை ஒழித்துக் கட்டுவது என்ற தலையங்கத்தில் பிரச்சாரப்படுத்தி வருகிறார் உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம்.

நவீன கொலைக் கருவிகள், அமரிக்க உளவுச் செய்மதிகள், போர் விமானங்கள், ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர் என வன்னியின் நினைவு படுத்துகின்ற அதே முன் நகர்வுகள் சட்டிஸ்கார், ஜார்கண்ட், ஒரிசா மாநிலங்களிலும் மகாராட்டிரம், ம.பி., ஆந்திரா போன்ற மாநிலங்களில் மக்கள் மீது மேலும் தாக்குதல் நடத்த இந்திய அதிகார வர்க்கம் தயாராகி வருகிறது.

இந்தியா காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலையடைந்த பின்னர் இந்தப் பகுதிகளில் எல்லாம் அரச நிர்வாகத்தின் நிழல் கூடப் பட்டதில்லை. இன்று அங்குள்ள கனிமங்களும் மினரல்களும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. இதற்காக ஐந்த மக்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள். கடந்த 4 ஆண்டுகளில் 700 கிராமங்களை எரித்து 3 லட்சம் பழங்குடி மக்களை விரட்டியிருக்கிறது. 50,000 பழங்குடி மக்கள் கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். வன்னிப் படுகொலையின் மாதிரிதான் இது. இதை அவர்களே ஒத்துக்கொள்கிறார்கள். “இலங்கை இராணுவத்தின் இறுதிப்போர் தான் எங்களுக்கு வழிகாட்டி” என்கிறார் சட்டிஸ்கர் மாநில டி.ஜி..பி விசுவரஞ்சன்.

அரசால் புறக்கணிக்கப்பட்ட இந்தப் பிரதேசங்களிலெல்லம் மக்களோடு மக்களாக வாழ்ந்தவர்கள் தான் மவோயிஸ்டுக்கள். இன்று அந்த மக்கள் படுகொலை செய்யப்படும் போதும் அவர்களுக்கு மாவோயிஸ்டுக்கள் தான் கேடயமாக முன்நிற்கிறார்கள்.
இந்திய சனத் தொகையின் 20 வீதமளவில் உள்ள இந்த மக்களின் பிணங்களின் மேல் உலக முதலாளித்துவம் தனது சாம்ராஜ்யத்தை நிறுவிக்கொள்ள முயல்கிறது.
தண்டகாரண்யாவின் காடுகளிலும், மலைகளிலும் அற்புதமான அறிய கனி வளங்கள் புதைந்து கிடக்கின்றன. உயர்தரமான இரும்புத்தாது, செம்பு, தங்கம், வைரம், அலுமினியத்தின் மூலப்பொருளான பாக்சைட், சிமெண்ட் உற்பத்திக்கு தேவையான சுண்ணாம்பு கற்கள், நிலக்கரி, பளிங்கு, கிரானைட், சிலிக்கா, குவார்ட்சைட் போன்ற இருபத்தெட்டு வகை கனி வளங்களும், காட்டு வளங்களும், நீர் வளமும் நிறைந்திருக்கின்றன. பன்னாட்டு கம்பெனிகளும், இந்தியத்தரகு முதலாளிகளும் விருப்பம் போல இந்தப் புதையலை அள்ளிச் செல்ல முடியாமல் குறுக்கே நிற்கிறார்கள மாவோயிஸ்டு கொரில்லாக்கள். இந்திய அரசின் கொலை வெறிக்கு காரணம் இது தான்.

இலங்கை அரசின் இனப்படுகொலையின் போது இந்திய அரசின் பக்கம் சார்ந்து நின்ற சி.பி(எம்) இன்று பழங்குடி மக்களைத் துவம்சம் செய்ய இந்திய அரசிற்குத் துணை போகிறது.

இலங்கையில் நடந்ததைப் போலவே நிலைமையை நேரில் கண்டறிய யாருக்கும் அனுமதியில்லை. மனித உரிமை அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. கூட்டுப்படை ரோந்து செல்லும் வேளையில் யாரையாவது சந்தேகப்பட்டால் சுட்டுத்தள்ள உரிமையுண்டு! நூற்றுக்கணக்கான அப்பாவிகள் தெருவோரங்களில் அனாதைகள் போல கொன்று போடப்பட்டுள்ளார்கள்.

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டுள்ள லக்சுமி மிட்டால் நிறுவனம் 24 மில்லியன் தொன் உற்பத்தித் திறனுள்ள இரும்பு ஆலைகளை நிறுவுவதற்காக பழங்குடிமக்களை விரட்டியடிக்கவும், அழிக்கவும் திட்டமிட்டுச் செயலாற்றிய போது மாவோயிஸ்டுக்களுடனான மக்கள் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது.

ஆனால் இந்தியப் பிரதமர் இலங்கையில் நடந்து கொண்டதைப் போலவே மிக உறுதியாக இருக்கிறார். உலகம் முழுவதும் சென்று பன்னாட்டுக் கொம்பனிகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்கிறார். பழங்குடி மக்களுக்கு நட்ட ஈடோ, மானியமோ வழங்க அவர் தயாரில்லை. சொந்த நாட்டினுள் அவர்களைக் கொன்று போட்டு இன்னொரு இனப்படுகொலைக்கும் தயாராகவுள்ளார். இலங்கையைப் போல் பயங்கரவாதத்தின் மீதான இறுதிப் போர் என்ற தலையங்கத்தில் “ஒப்பரேஷன் கிரீன் ஹன்ட்” தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத் தயாராகிவருகிறது.

வன்னியில் நிகழ்ந்தது போலக் கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்படுவார்கள் என்ற அச்சம் அந்தக் கொலைய நிகழ்த்திய இந்திய அரசின் எல்லைக்குள் வாழுகின்ற மக்கள் மனிதத்தை நேசிக்கும் அனைவரின் மத்தியிலும் நிலவுகின்றது.

வன்னிப் படுகொலையின் போதும், அதன் பின்னான இலங்கை அரசின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் போதும் ஈழத் தமிழர்களின் பக்கம் நின்று சரணடைவுகளுக்கு அப்பால் போராடிய அதே மனிதர்கள் தான் பழங்குடி மக்களின் படுகொலைகளையும் எதிர்த்து போர்க்கொடி உயர்த்துகிறார்கள்.

வன்னி மக்கள் கொல்லப்பட்ட போது புலம் பெயர் நாடுகளில் லட்சம் லட்சமாக தமிழர்கள் நிகழ்த்திய போராட்டங்கள் வீரம் செறிந்தவை. உணர்வு பூர்வமானவை. இவர்கள் மறுபடி வரவேண்டும்! எமக்காகக் குரல் கொடுத்த இந்திய ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தெருக்களில் இறங்கிப் போராட வேண்டும். பழங்குடி மக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் தர்மீகப் பொறுப்பு கொலையின் கோரத்தைக் கண்டு அதிர்ந்துபோயிருக்கும் நம் அனைவருக்கும் உண்டு.

 

தொடர்புடைய பதிவுகள்:

இலங்கை ஒரு பரிசோதனைக்கூடம்?  -April 2009

இனப்படுகொலை நிகழ்த்திய இந்தியா! – சர்வதேச அரசியற் பின்புலம்.

புதிய உலக ஒழுங்கு விதி – சாம்பல் மேடுகளிலிருந்து..

One thought on “வன்னிப் படுகொலைகளின் தொடர்ச்சி – ‘Operation Green Hunt’ : சபா நாவலன்”

  1. you do your job well ,and my support is to you ,,,chidambaram is vost,,,,,,pls save our people in jarkand

Comments are closed.