வட கிழக்கு இணைந்த தனிப் பிரதேசம் என்பதெல்லம் இனி இல்லை : மகிந்த ராஜபக்ச

mahintha100வடக்குகிழக்கு இணைப்பு என்ற விவகாரம் காலாவதியான விடயம். அது குறித்துப் பேசுவதற்கே இனி இடமில்லை.” இப்படித் திட்டவட்டமாகக் கூறிவிட்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
நேற்றுக் காலை அலரி மாளிகையில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் ஆசிரியர்கள், வெளியீட்டாளர்கள் ஆகியோரைச் சந்தித்த பின்னர், “உதயன்”, “சுடர்ஒளி’ நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் மற்றும் ஆசிரியருடன் உரையாடிய போதே அவர் இவ்விடயத்தைத் தெளிவுபடக் கூறினார்.

வடக்கு கிழக்குத் தமிழர்கள் தங்களது ஜனாதிபதியைத் தாங்களும் சேர்ந்து தெரிவுசெய்வதற்கான வாய்ப்பை அளிப்பதற்காகவே தாம் ஜனாதிபதித் தேர்தலை முற்கூட்டி நடத்துகின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“உதயன்”, “சுடர் ஒளி” பத்திரிகைகளின் நிர்வாக இயக்குநர் மற்றும் ஆசிரியருடனான உரையாடலின் போது ஜனாதிபதி கூறிய முக்கிய அம்சங்கள் வருமாறு:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் நான் பேச்சு நடத்தவேண்டும் என்பதை ஏற்கிறேன். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். அவர்களோடு பூர்வாங்கத் தொடர்பாடல்களை நான் ஆரம்பித்துள்ளேன். குறைந்த பட்சம் வடக்கு கிழக்கு இணைப்புக்கான உறுதி மொழியையாவது வழங்கும்படியான உங்களின் கருத்து ஏற்கமுடியாதது.

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது பற்றிய பேச்சுக்கே இனி இடமில்லை. அது கேள்விக்கு அப்பாற்பட்டது. காலாவதியான விவகாரம். புலிகளின் அரசியலுடன் அதுவும் செத்துவிட்டது. புலிகளின் அந்த அரசியலை மீண்டும் தோண்டி எடுத்துக்கொண்டு வராதீர்கள்.

கிழக்கில் இன்று பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். அப்படியிருக்க அவர்களின் விருப்பை மீறி நாம் வடக்கு கிழக்கை இணைத்து, அவர்களுக்கு அநீதி இழைக்க முடியாது. நான் கிழக்கு மாகாணசபைத் தேர்தலின்போது ஒரு வாக்குறுதியளித்தேன். அதன்படி, தமிழர் ஒருவரை மாகாண முதலமைச்சராக்கினேன். அதனால் நான் எதிர்கொண்ட எதிர்ப்புகள் சொல்லி மாளாதவை. முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பிக்கள், மாகாணசபை உறுப்பினர்கள் என்று ஒரு கூட்டமே பொங்கி எழுந்தது. எனினும், எனது முடிவில் உறுதியாக இருந்து அதனைச் செய்தேன். அப்படி எப்போதும் செயற்பட முடியாது.

ஒரு பிரதேசத்துக்கு ஒருவரும் தனியுரிமை கோர முடியாது. இன்று கொழும்பில் சிங்களவர்கள் சிறுபான்மையினர். அவர்கள் இங்கு (கொழும்பில்) இருபத்தியேழு வீதத்தினராகக் குறைந்துவிட்டனர். அதற்காக அவர்கள் இன்று ஊர்வலம் நடத்தவில்லை. போராட்டம் செய்யவில்லை. எல்லா இடத்திலும் எல்லோரும் கலந்து வாழ அனுமதிப்பதே சரியானது; முறையானது.

ஆகவே, காலாவதியாகிப்போன வடக்கு கிழக்கு இணைப்பை விடுத்து வேறு விடயங்கள் பற்றிப் பேசலாம். இப்படி ஜனாதிபதி குறிப்பிட்டார்.