வடமாகாண முதலைமச்சர் விக்னேஸ்வரனின் எல்லை மீறும் வன்முறை!

vikneswaran--பேரினவாத ஒடுக்குமுறை இராணுவ வன்முறையாகத் தோற்றம்பெற்ற போது அதற்கு எதிராகத் தமிழ்ப் பேசும் மக்கள் தற்காப்பு யுத்தத்தை முன்னெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அப்போராட்டம் ஒரு மக்கள் கூட்டத்தின் அடிப்படை ஜனனாயகமாகக் கருதப்படும் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம். அப்போராட்டத்தை தமிழரசுக் கட்சி வாக்குப் பொறுக்கும் நலன்களுக்காகப் பயன்படுத்தியமையால் வெற்று இராணுவ வாதமாகச் சிதைந்துபோனது. மக்களின் தற்காப்புப் போராட்டத்தை வன்முறை என இலங்கை அரசு மட்டுமல்ல வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கூறியுள்ளார்.

இதுவரைகால மக்களின் இழப்பையும் போராளிகளின் தியாகங்களையும் வன்முறை எனக் கொச்சைப்படுத்தும் சீ.வி.விக்னேஸ்வரனின் தமிழ்ச் சமூகத்தின் மீதான வன்முறை அருவருப்பானது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும் வட மாகாணசபை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (02.10.2014 அன்று) வியாழக்கிழமை வட மாகாண முதலமைச்சர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
அச்சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் கோரிக்கைக்குப்பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு விக்கி தெரிவித்தார்.

“கடந்த மாகாணசபைத் தேர்தலின்போது, ‘முதலமைச்சர் வேட்பாளராக நான் நிற்க வேண்டுமென்றால் கூட்டமைப்பில் இருக்கின்ற அனைத்துக் கட்சிகளும் என்னை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே நிற்பேன்’ என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்த விடயத்தை அவருக்கு ஞாபகப்படுத்தி, நீங்கள் கூட்டமைப்பினுடைய ஒரு பிரதிநிதியாகத்தான் கடந்த தேர்தலில் பங்குபற்றியிருந்தீர்கள்,

ஆகவே நீங்கள் கூட்டமைப்புக்குத்தான் உரியவர், எனவே தனியொரு கட்சியைச் சார்ந்தவராக பிரதிபலிக்கக்காமல் பொது நிலைப்பாட்டைத்தான் நீங்கள் எடுக்கவேண்டும்” என்று முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேட்டுக் கொண்டார்.
இதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதிலளிக்கையில் –

“நான் இதைக் கூறுவதையிட்டு நீங்கள் ஆத்திரப்படக் கூடாது. நான் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ போன்ற ஆயுதமேந்திய வன்முறைக் கட்சிகளுடன் சேர்ந்திருக்க முடியாது. ஆகவேதான் நான் தமிழரசுக் கட்சியைச் சார்ந்திருக்கின்றேன்” – என்று கூறினார்.

ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட், ரெலோ போன்ற விக்னேஸ்வரன் குறிப்பிடும் கட்சிகள் மக்களின் போராட்டத்தை என்றும் தலைமையேற்று நடத்தியவை அல்ல. தேசியப் பிழைப்பிற்காக அதிகாரத்துடன் கூட்டுவைத்துக்கொள்ளும் இக்கட்சிகளின் கடந்த காலம் கறைபடிந்தவை. இவர்களின் இருண்ட வரலாற்றை முன்வைத்து முழுமையான போராட்டத்தையும் தியாகத்தையும் கொச்சப்படுத்தும் விக்னேஸ்வரன் நீண்டகால அழிவிற்குத் திட்டமிடுகிறார்.

தமிழ்ப் பேசும் மக்கள் இலங்ககைப் பேரினவாத அரசின் ஆயுதங்களிலிருந்து தற்காப்பதற்காக நடத்திய போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விக்னேஸ்வரனின் வன்முறை இலங்கை அரசின் வன்முறைக்கு ஒப்பானது.

2 thoughts on “வடமாகாண முதலைமச்சர் விக்னேஸ்வரனின் எல்லை மீறும் வன்முறை!”

  1. ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட், ரெலோ போன்ற விக்னேஸ்வரன் குறிப்பிடும் கட்சிகள் மக்களின் போராட்டத்தை என்றும் தலைமையேற்று நடத்தியவை அல்ல. தேசியப் பிழைப்பிற்காக அதிகாரத்துடன் கூட்டுவைத்துக்கொள்ளும் இக்கட்சிகளின் கடந்த காலம் கறைபடிந்தவை. இவர்களின் இருண்ட வரலாற்றை முன்வைத்து முழுமையான போராட்டத்தையும் தியாகத்தையும் கொச்சப்படுத்து வதாக கருத முடியாது  குறித்த கட்சிகள வெறும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் தமது சு யத்தை தமிழ் மக்கள் அறியவைத்தன  1983 இல் இருந்து 2009 வரை ஒரு அர்பணிப்புடனான போராட்டத்தை நடத்திய அமைப்பின் தியாகத்தை இந்த சந்தர்பவாத கட்சிகளின் அடாவடியுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது அறிவீனமே 

  2. மேற்குறித்த கட்டுரையாளரே ஈ.ம.பு.மு இந்திய இராணுவக்காலத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் மீது வன்முறையில் ஈடுபட்டதனை ஏற்றுக்கொள்கிறார். பின்பு விக்கி த.தே.கூட்டமைப்பில் இருப்பதாயின் ஏதாவது ஒரு அங்கத்துவக்கட்சியில் அங்கத்தவராக இருக்கவேண்டும், அதில் அவரது தெரிவிற்கான காரணத்தினை கூறியுள்ளார்.
    இதில் மொத்த தியாகமும் எங்கு கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது? இதில் விக்கியின் வன்முறை என்ன.?இக் கட்டுரையின் தலைப்பு எங்கே கட்டுரையுடன் பொருந்துகிறது???

Comments are closed.