வடபகுதியை புனரமைக்க இந்தியா உதவி : ஒப்பந்தம் கையெழுத்து.

 

போரால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடபகுதியைப் புனரமைப்பதற்கு இந்தியா உதவவுள்ளது.இதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுமிடையே கையெழுத்தாகி உள்ளது.

இலங்கையின் வடக்குப் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள கட்டுமானப் பணிகளில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.பொது மற்றும் தனியார் கட்டுமானங்கள் இதன் கீழ் புனரமைக்கப்படும்.

புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு இரண்டையும் உள்ளடக்கியதாக இந்தியாவின் உதவிகள் அமைந்திருக்கும் என்று இலங்கையின் கட்டுமான மற்றும் பொறியியல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்னிலையில் கடந்த புதன்கிழமை இது தொடர்பான ஒப்பந்தம் அமைச்சகத்தின் கட்டுமானப் பிரிவிற்கும்,இந்தியாவின் கட்டுமான தொழில்துறை அபிவிருத்திச் சபைக்கும் இடையில் கையெழுத்தானது.

டெல்லியை தளமாகக் கொண்டு இயங்கும் தேசிய கட்டடங்கள் மற்றும் கட்டுமான நிறுவனம், இலங்கையின் வடக்கில் மேற்கொள்ளப்பட உள்ள புனரமைப்புப் பணிகளுக்கு வேண்டிய ஒத்தாசைகளை வழங்கும்.

வடக்கில் புனர்வாழ்வுப் பணிகளுக்கு நட்பு ரீதியில் உதவ இந்தியா முன்வந்திருப்பதை இலங்கை அரசும் மக்களும் வரவேற்கிறார்கள் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.