வடக்கில் பல பகுதிகளில் மோதல்

முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மணலாறு போன்ற பகுதிகளில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று முன்தினம் முழுவதும் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இம்மோதல்களின் போது படைத்தரப்பைச் சேர்ந்த 08 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 23 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அத்துடன் இரு தரப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களின் போது 23 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் 46 பேர் படுகாயமடைந்ததாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

இது குறித்து தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்ததாவது நேற்று முன்தினம் முழுவதும் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வடக்கின் பல்வேறு இடங்களில் மோதல்கள் இடம்பெற்றன. இம்மோதல்களின் போது படையினர் மேற்கொண்ட தாக்குதல்களினால் விடுதலைப் புலிகளுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டன. முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மணலாறு போன்ற பகுதிகளில் இரு தரப்பினர்களுக்கும் இடையில் நேற்று முன்தினம் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

முல்லைத்தீவுபகுதியில் இடம்பெற்ற மோதல்களின் போது இராணுவ வீரர்கள் இருவரும் 4 விடுதலைப் புலி உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். வவுனியா பகுதியில் இட்ம்பெற்ற மோதல்களின் போது 7 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்., அத்துடன் மணலாறு பகுதிகளில் இரு தரப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களின் போது 6 படையினரும் 12 விடுதலைப் புலி உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். மோதல்களை அடுத்து படையினரால் அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான ஆயுதங்கள் பலவும் மீட்கப்பட்டுள்ளன