வடக்கிலிருந்து புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களை மீள்குடியேற்ற மறுக்கும் அரசு

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அரசு அக்கறை காட்டவில்லை என விசனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளக்குடியேற்றும் விடயத்தில் அரசாங்கமும் சர்வதேச சமூகமும் காட்டும் அக்கறை போதாது என சுதந்திரப் பிரஜைகள் முன்னணியின் பிரதான இணைப்பாளரும் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளருமான பர்ஸானா ஹனிபா கொழும்பில் ஆணைக்குழு அமர்வில் கலந்து கொண்டு சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த வருடம் டிசம்பர் மாதத்துடன் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் அனைத்தும் முடிவுக்குக் கொண்டு வரப்படவுள்ளதாகவும் அதற்கமைய நாடு முழுவதிலும் இயங்கிவரும் மீள்குடியேற்ற செயலகங்களை மூடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். அவ்வாறானால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் குடியேற்றத்தை யார் கவனிப்பது என யாழ். மாநகர சபை உறுப்பினர் மௌலவி சுபியான் ஆணைக்குழுவிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். கொழும்பில் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையிலேயே சுபியான் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறார். ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் சுபியான், புத்தளம் முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களில் 5 பேரைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு மாதாந்தம் 1250 ரூபா உலருணவுக்காக வழங்கப்படுகிறது: இதற்கமைய ஒருவருக்கு ஒரு நாளைக்கு 8 ரூபா மாத்திரம் வழங்கப்படுகிறது. வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள இக்காலப் பகுதியில் இந்தத் தொகை எதற்குப் போதுமானது? என்ற கேள்வியையும் எழுப்பியருக்கிறார். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீள் குடியேற்றுவதற்கு அக்கறை காட்டாத அரசாங்கம் தற்போது அவர்களை காடுகளுக்குள் செல்லுமாறு நிர்ப்பந்திக்கின்றது என முஸ்லிம் காங்கிரஸ் விசனம் தெரிவித்திருக்கிறது. இருவாரங்களுக்குள் செல்ல வேண்டும், இல்லையேல் புத்தளமே நிரந்தர இடம் எனக்கூறப்படுவதும் தேர்தலை நோக்கக் கொண்ட சூழ்ச்சியெனவும் முஸ்லிம் காங்கிரஸ் விசனம் தெரிவித்திருக்கிறது. ஆனால், யுத்தத்தால் இடம் பெயர்ந்த மக்களை உரிய காலத்தில் அவர்களுடைய சொந்த இடங்களில் இலங்கை அரசாங்கம் மீளக்குடியமர்த்தியுள்ளது. குறுகிய காலத்தில் இந்த மக்களை மீள்குடியமர்த்தியது இலங்கையே. அதை உலக சாதனை என்றே சொல்ல வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களின் மீது  சொந்த அரசு  கட்டவிழ்த்துவிட்டுள்ள யுத்தம்  உலக சாதானை என மனிதாபிமானிகள் தெரிவிக்கின்றனர்.