வடக்கின் வசந்தம்? -கிழக்கின் உதயம்?:வடபுலத்தோன்.

rangan10இவ்விரண்டு அழகான பெயர்களும் மகிந்த சிந்தனை அரசாங்கத்தால் புனையப்பட்ட பெயர்களாகும். இராணுவ நடவடிக்கையின் கடுமையான யுத்த முனைப்புக் காட்டி விடுவிக்கப்பட்ட இவ்விரு பிரதேசங்களும் தமிழ், முஸ்லிம் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களாகும். இத்தகைய இரு பிரதேசங்களிலும் யுத்தத்திற்கு பின்பான அபிவிருத்தியெனக் காட்டுவதற்கே வடக்கே வசந்தமும் கிழக்கே உதயமும் என்ற பிரசாரம் அரசாங்க ஊடகங்களிற் பரப்பட்டு வருகிறது. இதன் மூலம் வடக்கும் கிழக்கும் தேசிய இனப் பிரச்சினைக்கு உட்பட்ட பிரதேசங்கள் என்பது மறைக்கப் படுகிறது. அதன் மூலம் தேசிய இனப் பிரச்சினை என்பது இராணுவத் தீர்வின் மூலம் வந்துவிட்டதாகவே காட்டப்படுகிறது.

வடக்கு இப்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டது என்றும் அதனாலேயே அங்கு இரண்டு தேர்தல்கள் நடாத்தப் பட்டுள்ளன என்றுங் கூறிக் கொள்ளப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நல்லூர்த் திருவிழாவையும் சன்னிதி முருகன் ஆலய உற்சவங்களையும் காட்டி மக்கள் சுதந்திரமாகவும் சந்தோசமாகவும் திரண்டு இருப்பதாக காட்டி நிற்கிறார்கள். அதே வேளை முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் 3 இலட்சம் வரையான மக்கள் தடுத்து வைத்து அவலங்களுக்கு உள்ளாக்கப்படுவது பெருமளவுக்கு மறைக்கப் படுகிறது. இந்த அவலங்களுக்கு உள்ளான மக்களின் நிலை பற்றிய அக்கறைகள் குறைந்து பழங்கதையாகி வருகிறது. அங்கு ஊடகங்கள் தொடக்கம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை செல்ல முடியாதவாறான தடை இறுக்கமாகவே உள்ளது. முகாங்களில் ஒரு சில இடங்களை மட்டும் திரும்பத் திரும்பத் தொலைக்காட்சிகளில் காட்டி அவ்வாறே அனைத்து முகாங்களும் இருப்பதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. அவ்வாறு சகல முகாம் மக்களும் சகல வசதிகளோடும் இருப்பின் அவர்களைச் சென்று பார்க்கவோ பேசவோ ஏன் ஊடகங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்? எதிர்க் கட்சியினரை தாராளமாக அனுமதிக்கலாம் அல்லவா!

வவுனியா இன்று அகதி முகாங்களால் நிரம்பி வழியும் நகரமாகக் காட்சி தருகிறது. இம் மூன்று இலட்சம் மக்களின் பேரால் மேல் மட்டங்களில் இருந்து கீழ் மட்டங்கள் வரை யாவும் வியாபாரம் ஆக்கப்பட்டு யாவும் மறைக்கப்பட்டு வருகின்றன. பெரும் வியாபார நிறுவனம் தொடக்கம் வீதி வியாபாரம் வரை ஓகோ என்று நடைபெற்று வருகிறது. முகாங்களில் இருக்கும் மக்களுக்கு வழங்கப்படும் உணவிலிருந்து உடுபுடவை பெறுவது வரை சகலதிலும் தரகுப் பணமும் இலாபப் பணமும் கறக்கப்படுகின்றன. இருப்பினும் உணவு உடை கல்வி சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் யாவற்றினும் ஊடாக முகாம்களில் இருந்து லாபம் பெறவே சகலரும் முயல்கின்றனர். அரசாங்க அதிகாரிகள் தொடக்கம் தனியார்கள் வரை, ‘இதன் மூலம் எவ்வளவு கிடைக்கும்” என்ற எதிர்பார்ப்புடனேயே அகதி முகாங்களுக்கு உள்ளும் வெளியிலும் விடயங்கள் இடம்பெறுகின்றன. மீள்குடியேற்றம் பிற்போடப்படும் ஒவ்வொரு நாளும் இப் பணம் கொத்திச் செல்லும் வல்லூறுகளுக்கே வாய்ப்பாகும்.

வன்னி மக்களின் அவல நீடிக்கும் அதே வேளை குடாநாட்டு மக்களின் நிலை திறந்த வெளிச் சிறைச்சாலை போன்றதேயாகும். ஜனநாயகம் சுதந்திரம் யாவும் கட்டுப்படுத்தப் பட்டுள்ளன. உணவிற்கும் வீட்டினுள் தாழ்ந்த குரலில் பேச மட்டுமே அங்கு சுதந்திரம் இருக்கிறது. விரும்பினால் தேவாரமும் திருவாசகமுமோ அன்றிக் கர்த்தரை வேண்டும் ஆராதனைகளையோ மட்டும் சத்தமிட்டு வெளிப்படுத்தலாம். அதனால் தான் திருவிழாக்களில் பெருந் தொகையிற் கலந்து கொண்டு சற்றுச் சத்தத்துடன் வாய்விட்டுப் பேசுகிறார்கள். வாய் திறந்து அரோகரா என்றும் ஆண்டவரே என்றும் கூறுவதன் மூலம் ஏதோ ஒருவகையில் நிம்மதி கொள்கிறார்கள். ஏனையவற்றுக்கு வாய்ப்பூட்டுத்தான். என்று மாறும் இந்த நிலை என்ற ஏக்கமே மக்கள் மத்தியில் காணப்படுகிறது. பத்திரிகைகளும் பத்திரிகையாளர்களும் பல தடவைகள் தாக்கப்பட்டும் எரிக்கப்பட்டும் கொல்லப்பட்டும் கடத்தப்பட்டும் போனதாற், பத்திரிகைகள் சுய தணிக்கை செய்வதைவிட வேறு வழியில்லை என்ற நிலையிலேயே வெளிவருகின்றன.நிற்க. கிழக்கின் உதயத்தின் கீழ் வீதிகள் பாலங்கள் கட்டடங்கள் ஆங்காங்கே நிர்மாணிக்கப் படுவது ஏதோ உண்மைதான். அவற்றால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் மறுக்கக் கூடாது. ஆனால் அங்கு அபிவிருத்தி என்பது எந்தளவுக்கு மக்களுக்கானதாகவும் மக்கள் பங்குபற்றுவதாகும் இருக்கிறது என்பதே முக்கியமானதாகும். கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு திருகோணமலை, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்கள் உள்ளடங்குகின்றன. அங்கு மாகாண சபையும் மாநகர சபைகளும் நகர சபைகளும் பிரதேச சபைகளும் இயங்குகின்றன. அவை யாவும் அதிகாரத்தின் அடையாளங்களாக இருக்கின்றனவே தவிர மக்களின் அபிவிருத்திக்கு எவ்வாறு உதவி ஒத்துழைப்பாக உள்ளன என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது.

இவ்வாறு மக்களின் வாழ்வும் சுபீட்சமும் எதிர்காலமும் பல்வேறு கேள்விகளுடன் இருந்தும் வரும் அதே வேளை, உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டுக் கழுகுகளின் கண்களின் பார்வை கிழக்கே பதிந்து வருகிறது. குறிப்பாக விவசாயம் உல்லாசப் பயணத்துறை ஆகிய இரண்டுக்குமான நிலங்களைப் பெற்றுக் கொள்ள உள்நாட்டு வெளிநாட்டு கம்பனிகள் முந்தியடித்து நிற்கின்றன. கிழக்கு மாகாணத்தில் 54,551 ஹெக்ற்றயர் நிலம் மத்திய அரசின் கீழ் உள்ளது. அதே போன்று மாகாண சபையின் கீழ் 76,666 ஹெக்ற்றயர் நிலம் உள்ளது. இவ் இருவகை மொத்த நிலத்தில் 620.07 ஹெக்ற்றயர் தனியார் வர்த்தக நடவடிக்கைகளுக்குக் கீழ் உள்ளன. 148.7 ஹெக்ற்றயர் நிலம் தனியார் நிறுவனங்களுக்கு உள்ளன. இவற்றில் நீர், நில வளம் மிக்க நிலங்கள் பெரியளவிலான விவசாய முயற்சிகளுக்கு வழங்கப்படவுள்ளன. கொழும்பைத் தளமாக கொண்ட ஒரு கம்பனி அம்பாறை மாவட்டத்தில் 400 ஏக்கர் நிலத்தைச் சோளப் பயிர்ச்செய்கைக்குத் தரும்படி கேட்டுள்ளது. இதுபோன்று மற்றொரு கம்பனி வாழைப்பழச் செய்கைக்கு 400 ஏக்கர் தரும்படி மனுச்செய்துள்ளது. அதே வேளை, திருகோணமலைக்கு வடக்கே குச்சவெளிப் பகுதியில் உல்லாசப் பயணத்துறைக்காகச் சில கம்பனிகளும் தனிநபர்களுக்குமாக 34 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவை மக்களுக்குரிய அபிவிருத்திகளுக்கல்ல.

நிலம் நீர் கடற்கரைப் பகுதிகளில் மூலதனமிட்டு சுரண்டிச் செல்லுவதற்கேயாகும். இவற்றுக்கு அப்பால் இந்தியாவின் அனல் மின்நிலையம் சம்பூரில் அமைய உள்ளமை ஏற்கனவே தெரிந்ததாகும்.

gnam10இவற்றின் மத்தியில் கிழக்கின் உதயமானது திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கான உள்ளக முயற்சிகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றன. அதனை ஊக்குவிப்பதில் ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி. ஆகியவற்றின் கீழ் அமைப்புக்கள் கச்சிதமாகச் செயலாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தீகவாவி ஒரு புனிதப் பிரதேசம் என்ற பிரகடனத்தின் பெயரில் அப் பிரதேசத்திற் திட்டமிட்டதும் அத்துமீறியதுமான சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்றமை நினைவுக்குரியதாகும். இப்போது முஸ்லிம், தமிழ் மக்களது பாரம்பரியக் காணிகள் அத்துமீறி அபகரிக்கப்படுவதாகப் புகார்கள் அம்பாறை மாவட்டத்திலிருந்து வந்து கொண்டே இருக்கின்றன. அதே போன்று திருகோணமலை மாவட்டத்திலும் இடம்பெறுகின்றது. இவ்விரு மாவட்டங்களிலும் அரச அதிபர்களாக உள்ளவர்கள் சிங்கள உயர் அதிகாரிகளாகவே உள்ளனர். அதே போன்று கிழக்கின் ஆளுனரும் முன்னால் படை அதிகாரியே. அண்மையில் மாகாண சபை விடயத்தில் ஆளுனர் வரம்பு மீறிச் செயற்படுகிறார் என்று குற்றஞ் சாட்டப்படுகிறது.

எவ்வளவுக்கு சமாதான இன ஐக்கியம் என்று விளம்பரம் செய்யப் பட்டாலும், வடக்குக்-கிழக்கில் பேரினவாத உள்நோக்கங்களோடு தான் யாவும் முன்னெடுக்கப் படுகின்றன. எவ்வளவுக்கு மறைத்தாலும் அதன் உள்ளடக்கம் தவிர்க்க இயலாது வெளிவரவே செய்கிறது. இதனை நான் குறுகிய இனவாத அடிப்படையிற் கூறவில்லை. இடம்பெறும் பேரினவாத நடைமுறைகளையும் அவற்றின் உள்நோக்கங்களையும் வெளிப்படுத்துவது அவசியம். ஏனெனில் அத்தகைய நடவடிக்கைகளே இன ஐக்கியத்தைச் சீர்குலைத்து ஒடுக்குமுறையை நிலைநாட்டி வருவனவாகும். இவை சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களைப் பிரித்துக் குரோதங்களாக வளரவைத்து இறுதியில் மோத வைப்பனவாகும்.

ஆகவே வடக்கின் வசந்தமும் கிழக்கின் உதயமும் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பி நிற்கின்றன. வடக்குக் கிழக்கிற்கான உரிய அரசியல் தீர்வு அரசியல் அமைப்பு ரீதியில் உறுதிப்படுத்துவதே அங்கு சமாதானம், இயல்பு வாழ்க்கை, ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமை என்பவற்றுக்கான அடிப்படை உத்தரவாதமாக அமைய முடியும்.

 

3 thoughts on “வடக்கின் வசந்தம்? -கிழக்கின் உதயம்?:வடபுலத்தோன்.”

 1. மகிந்த அரசை கட்டுரை தோலுரித்து காட்டியுள்ளது. அதே நேரம் இக் கட்டுரையோடு பிரசுரிக்கப்பட்டடுள்ள படங்களும் அரசை அண்டிப்பிழைக்கும் வியாபாரிகளையும் தோலுரித்து காட்டிவிட்டது. டக்லஸ் தேவானந்தா அருகில் அமர்ந்திருக்கும் பேர்வழியை எங்கையோ பார்த்த ஞாபகம் எனக்கு. உடனடியாக இப் பேர்வழியை அடையாளம் காணமுடியவில்லை. பிறகு என் நண்பரிடம் காட்டியபோதுதான் தெரிந்தது இந்தப்பேர்வழியை. இவர்தான் ரங்கன் தேவராஜன் என்ற லண்டன்காரர். அகிலன் கதிர்காமர் நிர்மலா ராகவன் சிவலிங்கம் அண்ணாச்சி எல்லாம் சேர்ந்து கட்டிய ஜனநாயக கொம்பனியான இலங்கை ஜனநாயக ஒன்றியத்தின் ( எஸ்.எல்.டி.எவ்) முக்கிய உறுப்பினரும் இந்தக் கொம்பனியின் உத்தியோக பூர்வ செய்தி தொடர்பாளருமாவார். இவ்வளவு விரைவாக அம்பலத்திற்கு வருவார்களென்று யார்தான் எதிர்பார்த்தது. இவர் இப்போது யாழ்ப்பாணத்தில் டக்லஸ்சுக்கு பின்னால் ஆலோசகராக சேவகம் செய்துகொண்டு திரியிறாராம்.

 2. மூர்த்தி கீலே உள்ள படத்தில் இன்னொரு மகிந்தா எடுபிடி / முன்னாள் கருணா எடுபிடி / இன்னாள் பிள்ளயைhன் எடுபிடி ஆள்காடடி அரசியல் செய்யும் ஞானம் என்ற சின்ன மாஸ்டர் பிள்ளயைhனொடு நீலக் காட்சட்டையோடு குந்தியிருப்பதை காணவில்லையா? பாருங்கள். இவரைப் பற்றி இராயாகரன் எழுதியுள்ளதை கீலே படியுங்கள்.

  “மகிந்தாவுக்கு நன்றி” தெரிவிக்கும் பாசிச அரசியல்

  இது பெண்ணியமாகவும் வேஷம் போடுகின்றது. தலித்திய வேஷமும் போடுகின்றது. ஜனநாயக வேஷமும் போடுகின்றது. இப்படி எல்லா வேஷத்தையும் போட்டுஇ மகிந்த குடும்ப சர்வாதிகாரம் இலங்கையில் நடத்தியஇ நடத்துகின்ற படுகொலை பாசிச ஆட்சியை பாதுகாத்து அதைப் போற்றுகின்றனர். இதை செத்துப் போன புலியின் பெயரில் நியாயப்படுத்துகின்றனர். அதாவது புலிகளின் பெயரில்தான்இ மக்களுக்கு எதிராக தாங்கள் சோரம் போகும் அரசியலுக்குரிய நியாயத்தைக் கற்பிக்கின்றனர். இவர்களின் அரசியல் அளவுகோல்இ புலியெதிர்ப்புத்தான்.

  அண்மையில் புகலிட சிந்தனை மையம் சுவிஸ்சில் நடத்திய கூட்டத்தில் கருத்துரைத்த ஒருவர்இ புலிகளின் பெயரில் தமிழர்களை கொன்று அவர்களை அடக்கியொடுக்கியதற்கு நன்றி தெரிவித்தார். இதற்கு அங்கிருத்த மகிந்த எடுபிடிகள் கைதட்டி ஆரவாரமாய் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

  குறித்த கருத்தைக் கூறியவர் ஒரு பெண். இவர் பிரான்சில் வெளியாகிய முன்னாள் மற்றும் பின்னாள் எக்ஸ்சில் ஆசிரியர்களில் ஓருவர். தன்னை பெண்ணிலைவாதியாக காட்டிக்கொண்டவர். இன்று பெண்கள் சந்திப்பு வரை சென்று மகிந்தாவுக்காக குலைக்கின்றார். இவர் ஞானம் என்று அறியப்பட்டவரும்இ ஸ்ராலின் என்ற பெயரில் எழுதுபவரின் மனைவியாவார்.

  அவரின் மனைவி என்ற தகுதிஇ மகிந்தாவின் பாசிசத்தை விதந்துரைக்க வைக்கின்றது. இவர் கணவர் மகிந்த முன்வைத்த ‘கிழக்கு உதயத்தில்” பிரதிநிதியான கொலைகாரப் பிள்ளையான் மற்றும் கருணாவின் அரசியல் ஆலோசகர். இன்று பிள்ளையானின் துதிபாடி. இவர் குடும்பமே இன்று தமிழர்களைக் கொன்ற மகிந்தாவின் பெருமைகளைக் பேசுவதால்இ மக்களுக்கு எதிரான சதிகளை செய்ய அடிக்கடி இலங்கை சென்று வருபவர்கள். மகிந்தாவின் பிளவுவாத அரசியலுக்கு ஏற்பஇ வடக்கு மக்களுக்கு எதிராக கிழக்கு மக்களை அணிதிரளக் கோரியவர்கள்.

  இப்படி பேரினவாத அரசை ஆளும் மகிந்தா குடும்பத்தின் பாசிச சர்வாதிகாரத்தை போற்றுவதால்இ மனைவியான விஜியும் அரச எடுபிடியாகி மகிந்தப் பாட்டுப்பாடுகின்றார்.

  “மகிந்தாவுக்கு நன்றி” என்று கூறிய அவர்இ புலிகளை மகிந்த அழித்ததால் இன்று புலிகளால் மக்கள் கொல்லப்படுவதில்லை என்கின்றார். இதனால் நன்றி என்கின்றார்.

  மகிந்த அரசு எத்தனை ஆயிரம் பெண்களை விதவையாக்கியது? எத்தனை ஆயிரம் பெண்களை சிறை வைத்துள்ளது. எத்தனை பெண்களை வதை முகாமில் வைத்து வதைக்கின்றது. பல பத்தாயிரம் பெண்களை உளவியல் ரீதியாக கொன்று வருகின்றது. இப்படி பெண்களுக்கு எதிரான “மகிந்தவுக்கு நன்றி” கூறி மகிந்த எடுபிடியாக மாறி பெண்ணியம் பேசுகின்றார்.

  இந்த மகிந்த அரசு தமிழ் மக்களை திறந்த வெளிச்சிறையில் அடைத்து வைத்து வதைப்பதையும்இ படுகொலைகள் செய்வதையும் ஆதரிகின்ற இந்தக் கும்பல்தான்இ புலத்தில் உள்ள மகிந்த எடுபிடிகள்.

  மகிந்த அரசு ஊடகவியலையே கருவறுத்து போடும் பாசிச ஆட்டத்தைஇ இந்தக் கூலிக் கும்பல் ஆதரிக்கின்றது.

  கடந்தகால யுத்தத்தில் ஒரு இலட்சம் முதல் 2.5 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். இதில் குறைச்தபட்சம் 80 சதவீதத்துக்கு அதிகமான மக்களை கொன்றதுஇ பேரினவாத அரசுதான்.

  அதன் இன்றைய ஏகப் பிரதிநிதிதான் இந்த மகிந்த கும்பல். அதற்கு “நன்றி” தெரிவித்து மகிழ்பவர்களுக்குஇ மகிந்த கும்பலோ எலும்பைப் போடும். இந்த மகிந்த எடுபிடிகளை இட்டுஇ எச்சரிக்கையாக இருப்பது அவசியம். “மகிந்தாவிற்கு நன்றி” சொல்லி நிற்பவர்கள்இ ஆள் காட்டிகளாகஇ மக்களுடன் நிற்பவர்களை கருவறுப்பவராக மாறி குழிபறிக்கும் மகிந்த அரசியலையே தங்கள் சொந்த அரசியலாக ஆணையில் வைத்துள்ளனர். இதற்கு புலியெதிர்ப்பு என்பது அளவுகோலாகின்றது.

  பெண்ணியம்இ இலக்கியம் …. என்று மகிந்த எடுபிடிகளுடன் இன்று சேர்ந்து செய்யக் கூடிய எந்த அரசியலும்இ எதிர்காலத்தில் ஆபத்தானவை. இன்று இதை புரிந்து கொள்வது அவசியம். இதை அரசியல் அடிப்படையில் அணுகிஇ மக்களுக்கு எதிரான இந்த எதிர்ப்புரட்சிகர கும்பலை இனம் காட்டி அம்பலப்படுத்துவதே முதன்மையான மைய அரசியலாகும்.

  .

  இன்று மகிந்த எடுபிடிகள்இ பெண்ணியம் தலித்தியம் முதல் மார்க்சியம் வரை பேசித்தான்இ மகிந்த அரசியலை ஆதரிக்கின்றனர். இந்த அரசியல் சூக்குமத்தை நாம் இன்று வேரறுக்க வேண்டும்.

  பி.இரயாகரன்
  21.10.2009

 3. ‘Nagenagira Navothaya” (Dawn of East:):
  Negombo fishermen with large trawlers. Local fishemen are without a catch. New Buddhist temples with lots of monks imported, Pasikuda is full of people from the South. Sex Tourism emerging (Sri Lanka is the second largest in sex tourism behind Honk Kong)

  ‘Uthuru Mithuru’ Buddhist Perahera procession in Jaffna with Douglas in clean white suit, New buddhist temples inaugurated by Namal, Son of the King

Comments are closed.