லைக்காவுடன் சந்திப்பு-மக்களே விழித்தெழுங்கள்! :செங்கோடன்

lycameetingடாட்டா, லைக்கா, லிபரா, வேதாந்தா மற்றும் பல பல்தேசிய நிறுவணங்கள் மிஞ்சியிருக்கும் உயிர்களை உறிஞ்சியெடுக்க இலங்கை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளன. பல் தேசிய நிறுவணங்களின் குறுகிய லாப நலன்களுக்காக இயங்கும் அரசுகள் ஒன்றினைந்தே எமது மக்களை வேட்டையாடினர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இலங்கை அரச பயங்கரவாதத்தை பலப்படுத்தும் பல்தேசிய நிறுவனங்களின் சதியை முறியடித்து எமது விடுதலையை வென்றெடுப்போம் வாரீர்!!!

நடந்த படுகொலையை விசாரிக்க மறுக்கும் ஐநா -இந்திய மற்றும் மேற்குலக பல்தேசிய நிறுவனங்களின் நலன்களை அடைவதற்கு ஆயுதமாகத்தான் போர்க்குற்ற விசாரணையைப் பயன்படுத்துகிறது.
பல்தேசிய நிறுவனங்கள் மக்களை இலங்கை அரசின் இராணுவ அதிகாரத்தின் பிடியில் வைத்துகொண்டு சகல வளங்களையும் சூறையாடுகின்றன.

தமிழ் மக்களின் உரிமைகளை இலங்கை அரசு தர மறுக்கிறது என சாட்டுக் கூறும் இந்திய மேற்குலக அரசுகள் பல்தேசிய நிறுவனங்களிற்கான ஒப்பந்தங்களை மட்டும் எப்படி இலங்கை அரசுடன் கைச்சாத்திடுகிறது?

பல்தேசிய நிறுவனங்கள் இந்திய சினிமாத்துறையை பயன்படுத்தி தமிழின படுகொலையை மறைக்க முற்படுவதோடு எமது ஈழத்து கலை கலாச்சார விழுமியங்களை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றன.

பல்தேசிய நிறுவனங்கள் இலங்கை அரச தீவிரவாதத்துடன் இணைந்து இலவச கல்வியை சீரழித்து அதனை தனியார்மயப்படுத்தி இலாபம் ஈட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருவதை நீங்கள் அவதானிக்கலாம்.

பல்தேசிய நிறுவனங்கள் சிலபிரதேசங்களில் சூழல் மாசடைவதையும் பொருட்படுத்தாது இலங்கை அரச தீவிரவாதத்தின் உதவியுடன் சூழல் மாசடைவதை எதிர்க்கும் மக்களைக் கொன்று தமது உற்பத்திகளை மேற்கொண்டு வருகின்றன.

பல்தேசிய நிறுவனங்களின் பலத்த ஆதரவோடு தற்போது இருக்கும் ஆட்சியில் பௌத்த தீவிரவாதம் மிக வேகமாக வளர்க்கப்பட்டு சிறுபான்மையினரை அடக்க பயன்படுத்தப்படுகிறது.
இவற்றை எதிர்த்து நாம் போராடாமல் விட்டோமானால் தொடர்ந்தும் நாம் பல அழிவுகளைச் சந்திக்க வேண்டியேற்படும்.

போராடாமல் உரிமைகள் கிடைக்காது – விடுதலை கிடைக்காது.
இணைந்து போராடுவோம் அனைவரும் வாரீர்

லைக்காவுடன் சந்திப்பு
கடந்த காலங்களில் லைக்கா குழுமத்தின் மீது “ராஜபக்சவின் பங்காளி” என்று கூறும் அளவிற்கு புலம்பெயர் தமிழர்களினால் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது. இதனை லைக்கா குழுமத்திற்காக பேசிய அதிகாரி ஒருவர் ஊடகங்களில் மறுத்திருந்தார். ஆனால் பல சர்வதேச செய்தி நிறுவனங்கள் சமூக ஆர்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் ஆகியன லைக்காவுக்கும் இலங்கை ராஜபக்ச அரசுக்குமான நெருக்கமான உறவை பலத்த ஆதாரங்களுடன் வெளியே கொண்டுவந்து அவர்களின் இலங்கை அரசுக்கு ஆதரவான சுயரூபத்தை மக்களுக்கு காட்டியிருக்கின்றனர்.

புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் லைக்கா நிறுவனத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில் தமிழ் மக்களை தம்; பக்கம் சாய்க்கும் ஒரு தவிர்க்க முடியாத தேவை இவர்களிற்கு ஏற்பட்டிருக்கிறது. ராஜபக்சவின் மைத்துனரின் கட்டுபாட்டில் இருக்கும் சிறீலங்கன் எயார்லைன்சின் பங்குகளை வாங்கி அதனை லைக்கா fபிலை என்று தமது பெயரில் இயக்கி வருகிறார்கள். இலங்கையின் தொலைத்தொடர்பு அமைச்சுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இவற்றை வெற்றிகரமாக நடத்தி லாபத்தை திரட்டுவதானால் சுற்றுலா செல்லும் தமிழ்மக்களின் ஆதரவைத் திரட்டவேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் ராஜபக்ச அரசுடன் இவர்கள் ஏற்படுத்தியிருக்கும் நெருங்கிய தொடர்பினால் இழந்த நற்பெயரை மீளப்பெறுவது என்பது இவர்களுக்கு கடினமானது. இதனால் லைக்கா குழுவினர் இளையவர்களை தம்வசப்படுத்துவதன் மூலம் மீண்டும் தமிழ்மக்களை தம்பக்கம் சாயப்பதற்கு முயற்சிக்கின்றனர். அதேவேளை இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலை (அதாவது இனப்படுகொலைக்கு வெள்ளையடித்தல், ஈழத்தமிழர்கள் என்ற அடையாளத்தையும் அவர்களின் ஈழ கோரிக்கையையும் மறக்கடித்தல் ) முன்னெடுத்து செல்வதற்கான ஒரு வழியினை தேர்ந்தெடுத்துள்ளனர் லைக்கா நிறுவனத்தினர். அதற்காக தற்போது இளையவர்கள் பலர் மிகவும் ஆர்வமாக இயங்கிவரும் கலைத்துறையின் பக்கமும் – விளையாட்டின் பக்கமும் இவர்களின் பார்வை திரும்பியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக ஈழக்கலைஞர்களையும் அவர்களின் படைப்பையும் ஊக்குவிக்குப்பதற்கு புலம்பெயர் ஈழ இளைஞர்களினால் நடத்தப்பட்ட ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியை (சாதனைத் தமிழா) அவர்களின் வலையில் வீழ்த்தும் முயற்சி நடந்தது. இது அந்த நிகழ்சியை ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்களின் தவறல்ல. ஈழக்கலைஞர்களின் படைப்புக்களிற்கும் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளிற்கும் அங்கீகாரம் அளித்து அவர்களை ஊக்குவித்து வளரவைப்பதாக சொல்லி பல வியாபார நிறுவனங்கள் தமது விளம்பரத்தை முன்னெடுப்பது பொதுவாக நடந்துவரும் ஒன்றே. சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள் ஏதோ ஒரு வகையில் தாம் தொடங்கியதை செய்து முடித்தே ஆகவேண்டும் என்ற நிலமையில் சில மோசமான வியாபாரிகள் வலையிலும் தெரியாது விழுந்து விடுகிறார்கள். எமது மக்கள் இந்தியக் குப்பைக் கலைகளுக்கு வழங்கும் ஆதரவின் ஒரு பங்கினையாவது ஈழக் கலைஞர்களுக்கு வழங்கியிருந்தால் இவ்வாறான வலைக்குள் விளையாட்டு கழகங்களோ கலைஞர்களோ விழவேண்டிய நிலமை வந்திருக்காது. இதனைப் புலம்பெயர் ஈழதமிழ்மக்கள் நன்றாக விளங்கிகொள்ளல் வேண்டும்.

ஆக இந்த சாதனைத்தமிழா விழாவிற்கு லைக்கா குழுமத்தினர் ஆதரவு வழங்குவதை அறிந்த சமூக ஆர்வலர்கள், ஈழகலைஞர்கள், எழுத்தாளர்கள், இளைஞர்கள் தாம் ஒன்றிணைந்து அந்நிகழ்விற்கு பலத்த எதிர்ப்பினை தெரிவித்தனர். முதலில் எதிர்ப்பினை பொருட்படுத்தாத ஏற்பாட்டு குழுவினர் மக்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அணுசரணையாளர்கள் பட்டியலில் இருந்து லைக்கா நிறுவனத்தினை நீக்கியிருந்தனர். (இலங்கை அடையாளத்தை திணிக்கும் வகையில் பரதநாட்டியம் கிரிக்கட் போன்ற பல நிகழ்ச்சிகளை லைக்கா நடத்த தொடங்கியிருக்கிறது) இதனை சாதனைத்தமிழா ஏற்பாட்டுக் குழுவினரிடம் இவ்வாறு லைக்காவை முதலில் எதிர்க்கத் தொடங்கியது யார் என கேட்டு அறிந்து சிலர் மூலம் வன்முறையின் மூலம் அடக்கலாமா என சிந்தித்தனர். தூஷன வார்த்தைகளால் திட்டி தீர்த்து எதிர்ப்பாளர்களை பண்புகள் சரியில்லாதவர்கள் என பொய் பரப்பிப் பார்த்தனர்.

இதைத் தொடர்ந்து லைக்கா குழுமத்தின் விளம்பரங்களை தயார் செய்து கொடுக்கும் ஒருவர் தமக்கு எம்மைத் தெரியும் எனக்கூற அவர் மூலம் எம்மை ஒரு கலந்துரையாடலுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. உரையாடல் மூலம் பேசித் தீர்க்க முடியும் என எமக்கு நம்பிக்கையிருக்கா விட்டாலும் பேசிப்பார்ப்பதற்கு சம்மதித்தோம்.

அந்தக் கலந்துரையாடல் 12-June-2014 திகதி அன்று லண்டனில் உள்ள லைக்கா நிறுவனத்தின் சந்திப்பு அறையில் நடைபெற்றது. அங்கு நடந்தவற்றை மக்களுக்கு அப்படியே தெரிவிக்கும் கடமை இருப்பதால் அவற்றை நாம் உங்களிற்கு தருகிறோம். அன்றைய கலந்துரையாடலிற்கு நாங்கள் ஒருமணி நேரம் தாமதமாகவே சென்றிருந்தோம். இந்தச் சந்திப்பில் சதா, சந்தோஷ் செங்கோடன், சேனன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

லைக்கா தரப்பில் பிரேம் மற்றும் அவர்களது முக்கிய ஆலோசகர் ஒருவரும் உரையாடலுக்கு வந்திருந்தனர். லைக்காவின் முதலாளி அல்லிராஜா சுபாஷ்கரன் வந்திருந்த போதும் அவர் நேரடியாக எம்மை சந்திக்காமல் தனது அறைக்குள் சென்றிருந்தார். அனேகமாக அவர் எமது அறையில் இருந்த கண்காணிப்பு கமரா மூலம் அனைத்தையும் பார்த்துக் கேட்டுகொண்டிருந்திருப்பார் என நம்புகிறோம். ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்தபின் தொடர்ந்த கலந்துரையாடலில் லைக்கா நிறுவனம் தாம் தமிழ் மக்களின் நல்லென்னத்துக்காக இயங்குவதாக ஒரு போடு போட்டனர்.

தமது நோக்கம் மக்களுக்கு உதவுவதே என்பதுபோல் அவர்கள் வாதிட்டனர். அதற்கு சான்றாக இலங்கையில் தாம் ஆரம்பித்திருக்கும் “சமூக நலன்” நடவடிக்கைகள் பற்றிய ஒளிப்படமொன்றையும் எமக்கு காட்ட முயற்சித்தனர். அந்தப் படத்தை முழுமையாக பார்க்க நமக்கு நேரமில்லை என்று நாம் தடுத்த போதும் ஒரு சில பகுதிகள் எமக்கு காட்டப்பட்டது. லைக்காவின் பெயிரில் அவர்களது பெரிய விளம்பர அட்டைகளோடு எடுக்கப்பட்ட படங்கள் எமக்கு காட்டப்பட்டது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 670 மாணவர்களுக்கு தாம் கல்வி உதவி செய்வதாகவும் 290 விதவைகளுக்கு மறு வாழ்விற்கான உதவி செய்வதாகவும் அவர்கள் கூறினர். பிரித்தானிய ஆசிய ட்ரஸ்ட் என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் பள்ளிக்கூடங்களை திருத்தி அமைப்பதற்கான நிதி உதவி மற்றும் யுத்தத்தால் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முதியவர்களுக்கான உதவி ஆகிய உதவிகளைச் செய்துவருவதாக கூறினர். இந்தத் தொண்டு நிறுவனம் இலங்கையில் “நல்லிணக்கத்தை” ஏற்படுத்துவதற்காக இயங்குவதாக சொல்வது இங்கு குறிப்பிடத்தக்கது. நல்லிணக்கம் என்ற போர்வையில் மக்கள் பிரச்சினைகளை தொண்டு நிறுவனங்களிடம் தள்ளிவிட்டு அரசு வேடிக்கை பார்த்திருப்பது தெரிந்ததே. இது தவிர மேலும் எட்டு நிறுவனங்கள் தொண்டு ஒழுங்காக நடக்கிறதா என கவனித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். இந்த விபரங்களை நிறுத்தி உரையாட வந்தவற்றை உரையாட நாம் முயன்றபோதும் தாம் செய்யும் வேலைகளை நாம் பார்க்கவேண்டும் என எமக்கு மேலும் தகவல்கள் வற்புறுத்தித் தரப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட பெண்களிற்கு 2000 தையல் இயந்திரங்களை வழங்குவதாகவும் -பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு 1000 சைக்கிள் ஒரு மில்லியன் பென்சில் ஒரு மில்லியன் பேனை வழங்க இருப்பதாகவும் கூறினர். 100 கிணறுகள் வெட்ட இருப்பதாகவும் மற்றம் அரசியல் கைதிகளுக்கு உதவி வழங்க இருப்பதாகவும் கூறினர்.

நீங்கள் தொண்டுகள் செய்வதானால் அதை வரவேற்கிறோம். நாம் அது பற்றி பேசவரவில்லை என்பதை நாம் கூறினோம். தவிர மேற்சொன்ன விபரங்களைத் தனிப்பட்ட முறையில் நாம் அறிந்து உறுதிப்படுத்திக்கொள்ள முடியாது. ஆகையால் அவர்கள் சொல்வதை அப்படியே கேட்க வேண்டியதுதான். இப்படியான உதவிகளை தாம் செய்து வருவதாக கூறிய லைக்கா குழுமத்தினர் தம்மீது சில ஊடகங்களும் செயல்பாட்டாளர்களும் அபாண்டமான பழி சுமத்துவதாக தெரிவித்தனர்.

இது பழி சுமத்தும் வேலை இல்லை என்றும் எவ்வாறு அவர்களது தொடர்புகள் வெளிவந்திருக்கின்றன என்பதையும் நாம் சுட்டிக்காட்டினோம். அவர்கள் எவ்வாறு இலங்கை இராணுவத்துடன் இலங்கைக்குள் சுற்றித்திரிந்தார்கள் என்பதை சுட்டிக் காட்டினோம். தாம் மக்களிற்கு உதவி செய்வதற்காகவே சென்றதாகவும் தம்முடன் வந்த தம் நிறுவன உறுப்பினர்கள் 50 பேருக்கு கிட்ட இருந்ததால் குறுகிய நேரத்தில் சுற்றி பார்ப்பதற்கு வேறுவழியில்லாமல் விமானப்படையின் ஹெலிஹொப்டர்களை பயன்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தனர். (சென்றவர்கள்; லைக்கா நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் என அவர்கள் கூறியபோதும் அது பிரித்தானியாவில் இருந்து சென்ற முதலீட்டாளர்களாக இருப்பார்களோ என்ற சந்தேகம் எழுகின்றது. அங்கு துரித கதியில் மக்களிடம் இருந்து காணிகள் பறிக்கப்பட்டு தனியார் நிறுவனங்களிற்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இவர்களிற்காகவே வடக்கு கிழக்கில் இராணுவம் நிறுத்தப்பட்டு பலவந்தமாக பறிக்கப்படுகின்றதோ என்ற பலத்த சந்தேகங்களும் எமக்கு உண்டு.) தாம் யுத்தம் நிறைவடைந்ததில் இருந்து அங்கு பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவிகளை வழங்க முயற்சித்ததாகவும் ஆனால் ராஜபக்ச அரசாங்கத்தின் தடைகளினால் அது முடியாமல் போக அவர்களுடன் சேர்ந்து இயங்கவேண்டிய நிலமை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. ( ஆனால் லைக்காவும் ராஜபக்ச அரசும் 2007 இல் இருந்தே நெருங்கி செயற்படுகின்றன.) அதனைவிட ராஜபக்ச அனுமதியின்றி அங்கு தொண்டு நிறுவனங்களை ஒருபோதும் நடத்த முடியாது என்ற காரணத்தினால் ராஜபக்ச சகோதர்ர்களுடன் நெருங்கிபழகவேண்டி வந்தது என்றும் காரணம் கூறப்பட்டது.

அதனை தொடர்ந்து நாம் லைக்கா நிறுவனத்தினரின் நடவடிக்கைகள் இலங்கை அரசின் இனப்படுகொலையை வெள்ளையடிக்கும் முயற்சிக்கு எப்படி துணைபோகின்றது என்பதனை சுட்டிகாட்டி அதனை நிறுத்துமாறு சொன்னோம்;. லைக்கா நிறுவனம் இலங்கைக்குள் மூலதனமிடுகிறதா இல்லையா என்ற நேரடிக் கேள்விக்கு எமக்கு நேரடிப் பதில் கிடைக்கவில்லை. நீங்கள் தொண்டு நோக்கில் செய்யும் செயல்களுக்கு நாம் எதிரியல்ல. மாறாக லாப நோக்கில் மக்களின் உரிமைகளை பின்தள்ளும் உங்கள் முயற்சியை நாம் எதிர்க்கிறோம். கொலை கார அரசை நீங்கள் பலப்படுத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம். நாம் இந்த படுகொலை அரசுக்கெதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். இத்தருனத்தில் அப்படுகொலை அரசைப் பலப்படுத்தும் அனைத்தையும் நாம் எதிர்ப்போம். அதுவும் தமிழ் வியாபாரிகள் என்று கூறிக்கொண்டு தமிழ் பேசும் மக்களிடம் இருந்து லாபத்தை திரட்டிக்கொண்டு அவர்கள் நலன்களுக்கெதிராக இயங்குவதை நாம் மேலும் வன்மையாக கண்டிக்கிறோம் எனச் சொன்னோம்.

லைக்கா குழுமத்திற்காக கதைக்க வந்தவர்களின் தொணி மாறத்தொடங்கியது. தாம் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல எல்லா ஆசிய மக்கள் மத்தியிலும் வியாபாரம் செய்வதாகவும் தமிழர் ஆதரவு இன்றிக்கூட தமக்கு லாபம் வரும் என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டினர். நாம் அதை ஏற்றுக்கொண்டோம். ஆம் நீங்கள் பல்வேறு வழிகளில் லாபம் பெருக்குகிறீர்கள். அதை நாம் தடுத்து நிறுத்த முடியாதுதான். ஆனால் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உங்கள் பலத்தை உடைக்க எம்மால் முடியும். ஏனெனில் தற்போதய இலங்கைப் படுகொலை அரசை மக்கள் மனதார வெறுக்கிறார்கள். இந்த உணர்வு ஓங்கியிருக்கும் மக்கள் மத்தியில் இந்த அரசுக்கு வக்காளத்து வாங்கும் யாரையும் எம்மால் முறியடிக்க முடியும். உங்களுக்கு எங்கள் சமாதானம் வேண்டுமானால் உடனடியாக இலங்கை அரசுடன் அனைத்து தொடர்புகளையும் துண்டியுங்கள் -அதன்பிறகு மிகுதியைப் பேசலாம் எனச் சொன்னோம்.

வேறு வழியின்றி தாம் அது பற்றிப் பரிசீலிப்பதாக கூறினர். ஆனால் எல்லாவற்றிற்கும் மண்டையை மண்டையை ஆட்டிய லைக்கா குழுமம் தொடர்ந்தும் தனது லாபத்திற்காக உரிமைகளை உடைக்கும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறது.

மேற்சொன்ன சம்பவத்தை தொடர்ந்து எம்மை பணத்தின் மூலம் மடக்கும் முயற்சி ஒன்றும் நடந்தது. நாம் இன அழிப்பிற் கெதிரான கடும் கோபம் கொண்ட கலைஞர்கள். நாம் எமது சம காலத்தில் கொத்து கொத்தாக சனங்கள் சாகடிக்கப்பட்டதை தடுக்க முடியாமல் தவித்தவர்கள். நாம் உயிருள்ளவரை இதற்கெதிரான குரலை உயர்த்த உறுதி கொண்டிருப்பவர்கள். எங்களைப் பணம் கொண்டு வாங்கலாம் என நினைத்த லைக்காவின் மந்த புத்தியை எண்ணி எமக்கு சிரிப்புத்தான் வந்தது.

தாம் எமது கோரிக்கையை பரிசீலிப்பதாக சொன்ன லைக்கா அதை தற்போது முற்றாக நிராகரித்த நடவடிக்கைகளையே முன்னெடுத்து வருகிறது. பணத்தை வைத்து எம்மை உடைக்கவும் ஏதோ ஒரு வழியில் எமது போராட்டத்தை முடக்கவும் அவர்கள் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

எங்கெங்கு எதிர்ப்பிருக்கிறது என்பது லைக்கா குழுமத்திற்கு தெரியும். அவர்கள் ஒன்றையும் தெரியாமற் செய்யவில்லை. பணத்திமிருடன் அவர்கள்தான் எம்மீது ஒரு யுத்தத்தை கட்டவிழ்த்திருக்கிறார்கள். ஈழத்தமிழர்களை ஆக்கிரமிக்க கோடம்பாக்கத்து குப்பைக் கலைக்கு பணம் வீசவும் அவர்கள் தயாராக இருப்பதைத்தான் கத்தி படம் சுட்டிக் காட்டுகிறது. ராஜபக்ச அரசின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையாக இதை மக்கள் பார்க்க வேண்டும். லைக்கா முதலான பல்நாட்டு நிறுவணங்களின் லாபப் பேராசையை பாவித்து ராஜபக்ச குடும்பம் உங்கள் வீடுகளின் தொலைக் காட்சிகளுக்குள் புகுந்துகொள்ள முயற்சிக்கிறது. தமிழ் பேசும் மக்களின் ஆதரவை திரட்ட முடியாத இயலாமையை லைக்கா முலம் நிவர்த்திக்கப் பார்க்கிறது இலங்கை அரசு. இதை வேறு பக்கம் திருப்பி எதிர்ப்பவர்களை உடைக்கும் முயற்சியும் நடக்கிறது.

லைக்கா மற்றும் இந்திய சினிமாவை எதிர்த்தும் எமது கலைகளிற்கான அடையாளம் கோரியும் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் பின்னர் சிக்கலான நிலமையை உணர்ந்த முருகதாஸ் பிரச்சனையை வேறு ஒரு பக்கம் திருப்புகிறார்கள். ஆனால் இந்த போக்குகளாலும் கத்தி படத்தின் தொடர் நிகழ்வுகளாலும் நாம் ஆடிப் போய்விடப் போவதில்லை. அவர்களின் பணபலத்தால் எம்மை நசுக்கி விட முடியாது.
லைக்கா மட்டும் அல்ல – ராஜபக்ச நடத்தும் இலங்கை அரச தீவிரவாத்த்தை தாங்கும் அனைத்து பல்தேசிய நிறுவனங்களிற்கு எதிராகவும் போராட்டங்களை நடத்த நாம் தீர்மானித்துள்ளோம். ஆகவே எமது மக்கள் குழம்பாது ராஜபக்ச பங்காளி லைக்காவினை புறக்கணிப்பதோடு மட்டும் இல்லாமல் எமது சமூகத்தை முன்னேற்றும் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிNறோம்.

கோடம் பாக்கத்து குப்பைகள் தரும் அற்ப சந்தோசத்துக்கா உரிமைகளை விட்டுக்கொடுக்காதீர்கள் – ஏமாற்றப்பட்டு விடாதீர்கள்.

6 thoughts on “லைக்காவுடன் சந்திப்பு-மக்களே விழித்தெழுங்கள்! :செங்கோடன்”

 1. http://www.corporatewatch.org/news/2013/nov/12/tory-donor-lycamobile-linked-sri-lankan-presidents-family-businesses

  Lycafly, Lycamobile and Lycatel did not respond to Corporate Watch’s requests for comment.

  There were 7 months to answer the allegations of stealing $100 million with Rajapaksa family by June 2014.

  This allegation has been alive from 2007 in Sundayleadr newspaper.
  This allegation is more serious than all the other allegations dded together.

  1. மேலுள்ள இணைப்பில் 2007ல் ராஜபக்ச குடும்பத்துடன் சேர்ந்து 100 மில்லியன் டொலர் களவு பற்றிய பாரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு தமது அபிப்பிராயங்களுக்காக லைக்காவுக்கு அவகாசம் வழங்கப்பட்டும் ஒளித்திருந்துவிட்டு 7மாதங்களாகியும் அம்முக்கிய குற்றச்சாட்டும் அக்குற்றச்சாட்டு பற்றிய எவ்வித பதிலும் இல்லாமலிருந்தது வேடிக்கையானது.

   “ராஜபக்ச குடும்பத்துடன் சேர்ந்து 100 மில்லியன் டொலர் களவு” என்ற பாரிய குற்றச்சாட்டு சிரிலங்காவிலிருந்தே சன்டேலீடர் பத்திரிக்கையால் 2007 இலிருந்து முன்வைக்கப்பட்டது.
   சன்டேலீடர் பத்திரிக்கையின் ஆசிரியன் லசந்த விக்கிரமதுங்கவை கோத்தபயா போட்டுத்தள்ளி பின்னர் மற்றைய பத்திரிக்கைய ஆசிரியர்களை நாட்டைவிட்டே ஓடச் செய்து கடைசியில் ராஜபக்ச குடும்பமே சன்டேலீடர் பத்திரிக்கையை விலைக்கே வாங்கி விட்டுத்தான் இக்குற்றச்சாட்டு ஒளிக்கப்பட்டது.

   இப்போ தமிழ் ஆர்வலர்கள் என்று சொல்லி ஓடித்திரியும் மாங்காய் மடையரால் “2007ல்” “ராஜபக்ச குடும்பத்துடன் சேர்ந்து 100 மில்லியன் டொலர் களவு” ஏனோ தவறவிடப்பட்டுக் கொண்டே வருகிறது.

   1. மன்னிக்கவும்.
    “சன்டேலீடர் பத்திரிக்கையை விலைக்கே வாங்கி விட்டுத்தான் இக்குற்றச்சாட்டு ஒழிக்கப்பட்டது”

    1. ஏன்பா உமக்கு லிபராவோட இம்புட்டு கோவம் ? எதோ ராசபக்சவுக்கு லிபராதான் களவெடுக்க சொல்லிக்குடுத்தமாதிரியில்ல இருக்கு உம்மோட கதை.

 2. இத்தகைய  பணமுதலைகளை (நேர்வழியிலா அல்லது  குறுக்கு வழியிலா
  அவர்கள் முதலைகள் என்பது  அவர்களிற்கேதான் தெரியும்) சந்தித்து
  நியாயம் கேட்பது, சிங்கத்திடம் போய் ஆடுகள்  எங்கள் உயிர்களை கொல்லாதே  என்பதுபோல்தான்.

  சிங்கத்தின் இனமே   பல உயிர்களை பலி கொண்ட படியால்தான்
  இன்றும்  வாழ்கின்றது.  ஏதோ ஒரு வழியில்  சர்வதேசங்களில்  ஆதிகம்
  செலுத்தும் வல்லரசுகளின்  கூலிகளாக  இருப்பவையே  தமிழர்களின்
  நலன்களைப்  புறக்கணித்து  தமிழர்களின்  எதிரிக்ளோடு  தமது பாதுக்கப்பிற்கும்    வளர்ச்சிக்கும் செயற்படும்நிறுவனங்கள்.

  எந்த அம்பு எதிரியை  நோக்கி  பாய்ந்ததோ அதே அம்புகள்  தமிழரின்
  எதிர்களால்  தமிழரை  நோக்கி  திருப்பி விடப்ப்ட்டுள்ளது. இதில்  தமிழர்
  நிறுவங்களின்  உருமையாளர்களாக   ஒருவர்  இருவர்  முகங்களே
  தெரிகின்றன.   இவர்களின் பின்னால்  நூற்ருக்கண்க்கானோர்  தமிரிற்கு
  எதிராக  பாயும் அம்புபோல்  இலங்கை  இந்தியா உட்பட பல சர்வதேச
  அர்சுகளால் மாற்ரப்பட்டுள்ளார்கள்.

 3. லைக்கா லிபரா போன்ற நிறுவனங்களைப்பற்றி இந்த பண பறிக்கும் ஓனாய் தமிழ் மக்களின் உணவர்களிள் காசுபாக்கும் இரட்டை நாக்குகாரன் . நம் இலங்கை நிறுவணர்களின் பணத்தில் வாழ்வது அப்படியே தெரிகிறது ஒரு காலத்தில் எம்ஜீஆர் விஜயகாந்தும் இதையே செய்தார்கள் இது அரசியளிள் சகஜமப்பா என்று விட்டு விட்டாள் அனைத்தும் விடியோவை பார்வையிடவும்?????????? [youtube http://www.youtube.com/watch?v=o3oWumq7o3I&w=560&h=315%5D http://youtu.be/o3oWumq7o3I

Comments are closed.