லைக்காவின் கத்திக்கு எதிராகச் சென்னையில் போராட்டம் (காணொளி)

lycaprotestலைக்கா நிறுவனத்தின் கத்தி படத்தி பாடல்கள் வெளியீட்டு நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. தமிழகத்தைச் சேர்ந்த சில கட்சிகள் இப்போராட்டத்தில் பங்கெடுத்தன. தமிழர்களால் நடத்தப்படும் பல்தேசிய கோப்ரட் வியாபார நிறுவனம் மகிந்த ராஜபக்ச அரசுடனும், பிரித்தானியாவில் டேவிட் கமரனின் பழமைவாதக் கட்சியுடனும் நெருங்கிய உறவைப் பேணிவரும் அரசியலில் ஈடுபட்டுள்ளது. பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கே உரித்தான இந்த அரசியல் தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கும் பயன்படுகிறது என்பதை இனியொரு பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தது.

லைக்காவிற்கு எதிரான சென்னையில் இன்று நடைபெற்ற போராட்டம் பல்தேசிய நிறுவனங்களுக்கு எதிரான பொதுவான போராட்டமாக இல்லாமல் வெறும் இனவாதப் போராட்டமாக நடைபெற்றது எனினும் மக்களின் ஒருபகுதியினர் தமது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள் என்றளவில் முக்கியத்துவமானது. போராட்டத்தைத் தடைசெய்ய தமிழகக் காவல்துறை 500 பேரைக் கைது செய்துள்ளது.

பிரான்சில் ஆரம்பிக்கப்பட்ட லைக்கா சகோதரர்களின் வியாபாரம் பலரின் அழிவுகளிலிருந்தும், புலம்பெயர் தமிழர்களின் மீதான சுரண்டலிலிருந்தும் பல்தேசிய நிறுவனமாக உருவானது. தனது இலாப வெறியின் காரணமாக இலங்கை கிரிமினல் அரசுடனும் ராஜபக்ச அரசுடனும் இணைந்து ஸ்கைனெட்வேர்க் என்ற நிறுவனத்தை தோற்றுவித்து நூறுமில்லியன் டொலர்கள் இலங்கை மக்களின் வரிப்பணத்தைச் சுருட்டியது.
பொதுநலவாய மாநாட்டின் கோல்டன் ஸ்பொன்சராக லைக்கா தோற்றமெடுத்தது. ஏதோ ஒரு வகையில் சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தும் பிரித்தானிய தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர் சங்கங்களின் குத்தாட்ட நிகழ்வுகளுக்குப் பணம் வழங்கி லைக்கா அவர்களை மாற்றியது.

ஆதவன் தொலைக்காட்சி என்ற தமிழ்த் தொலைக்காட்சியைப் புலம்பெயர் நாடுகளில் லைக்கா ஆரம்பித்துள்ளது. புலம்பெயர் நாடுகளிலிருந்து வெளிவரும் அச்சு மற்றும் இணைய ஊடகங்கள் லைக்காவின் விளம்பரத்தால் வாங்கப்பட்டன.

இவ்வாறு தமிழ் அரசியலில் நேரடியாகத்தலையிட்ட லைக்கா நிறுவனத்தின் இன்றைய தயாரிப்பு கத்தி திரைப்படம்.

கத்தி படத்தை லைகாவுடன் இணைந்து தயாரித்த கருணாகரமூர்த்தி ஏற்கனவே புலம்பெயர் நாடுகளில் ஐங்கரன் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர். தென்னிந்திய சினிமாக் குப்பைகளை புலம்பெயர் நாடுகளுக்கு தருவித்து அரசியல் அகதிகளை கலாச்சார அகதிகளாக்க தனது பங்களிப்பைக் கருணாகரமூர்த்தி வழங்கினார்.

லைக்கா முதலாளியும் ஐங்கரன் முதலாளியும் இலங்கை சென்று இனக்கொலை இராணுவத்துடன் கைகுலுக்கும் காட்சிகள் வெளியாகியிருந்தன.
லைக்கா தொடர்பான போதுமான தகவல்கள் இணையங்களில் கிடைக்கும் போது புனையப்பட்ட பொய்யான தகவல்களை மையமாக வைத்து லைக்கவிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த நிலையில் லைக்கவிற்கு எதிரான போராட்டங்கள் பல்தேசிய நிறுவனங்கள் தொடர்பாகவும், தென்னிந்திய சினிமாச் சீரழிவு தொடர்பாகவும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமானால் அதுவே போராட்டத்தின் வெற்றியாக அமையும்.