லண்டனிலும் தமிழ் நாட்டிலும் இலங்கை அரசிற்கு எதிரான போராட்டங்கள்!

இலங்கை அரசு தனது இனச் சுத்திகரிபை அதிகரித்து வரும் நிலையில் அதன் ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்கள் அற்றுப் போன வெறுமை நிலையே காணப்படுகிறது. அதே வேளை இலங்கை அரசின் அரசியல் அடியாட்களாகத் தொழிற்படும் பல தமிழர்கள் இலங்கை இந்தியா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் இலங்கை அரசின் கொடூரங்களுக்கு எதிராகப் பேசுவதே தவறானது என்ற கருத்தை ஏற்படுத்த திட்டமிட்ட வகையில் செயலாற்றி வருகின்றனர். ஒரு புறத்தில் வடகிழக்கை சிங்கள பௌத்த இராணுவ மயப்படுத்தக் கூடிய வகையிலான சூழலை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கமாக அமைய, மறு புறத்தில் இவர்களின் வியாபார நலன்களும் திருப்திசெய்யப்படுகின்றது. குறுந் தேசிய நலன்களைக் கடந்து இலங்கை அரசிற்கு எதிரான போராட்டங்கள் சாத்தியமான அனைத்து வகைகளிலும் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த வகையில் புதிய திசைகள் என்ற பிரித்தானியப் புலம்பெயர் தமிழர்களின் அமைப்பு 21.08.2010 அன்று லண்டனில் போராட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இலங்கை அரச அடக்குமுறைகளை எதிர்த்து பிரித்தானிய முற்போக்கு அமைப்புக்களுடன் இணைந்து நடத்தப்படவிருக்கும் இந்த ஆர்ப்பாட்ட நிகழ்விற்கு பல பிரித்தானிய அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்துள்ளன என புதிய திசைகளைச் சேர்ந்த பாலன் தெரிவித்தார். பிரித்தானிய வெள்ளையின மக்கள் மத்தியிலும் ஏனைய போராட்ட சக்திகள் மத்தியிலும் பிரச்சாரமாக மேற்கொள்ளப்படவிருக்கும் இந்தப் ஆர்பாட்டமும் அது குறித்த நிகழ்வுகளுக்கும் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருந்து புதிய திசைகள் ஆதரவை வேண்டி நிற்பதாகதாக அவர் மேலும் தெரிவித்தார். தமிழ் நாட்டில் முத்துக்குமார் மரண ஊர்வலம் உட்பட பல ஈழ ஆதரவுப் போராட்டங்களை முன்னின்று நடத்திய மக்கள் கலை இலக்கியக் கழகம் (ம.க.இ.க) மற்றும் அதன் தோழமை அமைப்புக்களும் இதே நாளில் போராட்டங்களைப் தமிழ் நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்பாடு செய்துள்ளது. இலங்கை அரச அடக்குமுறைக்கு எதிரான முழக்கங்களுடன் தமிழ் நாடு முழுவதும் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் தமிழ்ப் பேசும் மக்களின் நண்பர்கள் யார் என அடையாளம் காட்டுவதாக அமைகிறது.

5 thoughts on “லண்டனிலும் தமிழ் நாட்டிலும் இலங்கை அரசிற்கு எதிரான போராட்டங்கள்!”

 1. வாழ்த்துக்கள் தோழர்களே!
  மக்கள் கலை இலக்கிய கழகம் வாழ்க .

 2. //பல ஈழ ஆதரவுப் போராட்டங்களை முன்னின்று நடத்திய மக்கள் கலை இலக்கியக் கழகம் (ம.க.இ.க) மற்றும் அதன் தோழமை அமைப்புக்களும்//

  உங்கள் ஈழம் எது என்று எனக்குத் தெரியாது. அவர்கள் ஈழம் எது என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

  //இலங்கை அரசு தனது இனச் சுத்திகரிபை அதிகரித்து வரும் நிலையில் அதன் ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்கள் அற்றுப் போன வெறுமை நிலையே காணப்படுகிறது.//

  இவர்களைப் பொருத்தவரையில் இனப்பகையெல்லாம் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறி வர்க்க முரண்பாடு முன்னுக்கு வந்ததாக கூறிக்கொள்ளும் ஆதிபகவன். இது உங்கள் நோக்கத்திற்கு எதிராகவே தெரிகிறது. உங்களுக்கும் ஒரே கருத்துநிலையில்தான் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். வெறுமை நிலைக்கு வர காத்துக்கிடந்து அப்படி வந்ததற்கு 3 புத்தகங்கள் ஆராய்ச்சி செய்து எழுதியவர்கள். இனி தனி ஈழம் சாத்தியமில்லை. பாசிசத்தின் நிழலில் இனவெறிக்கு ஆட்பட்டு இறையாகிப்போன மக்கள் திருந்தி ஒன்று சேர்ந்து வந்து சுயநிர்ண்ய உரிமைக்கு பாடுபடும் வரையில் அவர்களுக்காக காத்துக்கிடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். அவர்களை வழி மொழிபவர்களா நீங்கள்? ஈழத்திற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதையாவது தெரிந்துக்கொண்டிருந்தால் நாளை உங்களை ஏமாளி என்று சொல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. ஈழமக்கள் எப்பொழுதுமே தனி நாட்டு  உரிமை கோரக்கூடாதாம். அவர்கள் மனம் திருந்தி இன ஒடுக்குமுறையை கைவிட்டு, அல்லது ஆதரிப்பதை கைவிட்டு வரும் வரையில் இன சுத்திகரிப்பு நடந்தாலும் பொறுமை காத்து சுயநிர்ண்ய உரிமைக்காக போராடவேண்டுமாம். 

  இவர்களிடம் போய் //இலங்கை அரசு தனது இனச் சுத்திகரிபை அதிகரித்து வரும் நிலையில் // என்று கோரிக்கை வைத்து எழுதியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஒரு வேளை இவர்களின் ஜோதியில் ஐக்கியமாகி இனைந்துவிட்டவர்களில் நீங்களும் உண்டோ. போராடிக் கொண்டிருக்கும் வரை போராளிகளை எதிர்ப்பீர்கள். அவர்கள் அடக்கப்பட்டவுடன் வெறுமைநிலையில் புலம்புவீர்கள். 

  மீண்டும் மீண்டும் மக்களை முட்டாளாக்குவதற்கு கூட்டணி சேர்க்காதீர்கள். இவ்வளவு இன சுத்திகரிப்பு நடப்பதும், இன்னும் மிக வலுவாக அதிகரித்திருப்பதும் நடந்துக்கொண்டு இருக்கும் போது இப்போதாவது தனி ஈழம்தான் தீர்வு என்று வெளிப்படையாக அறிவிக்க பேய் மனம் இறங்கிவரட்டும். அதை மறுத்து அங்கு ஏதோ பெரும்பான்மையான மக்கள் ஜனநாயகத்தை வரவேற்பதாக நினைத்துக்கொண்டு சுயநிர்ணய உரிமை பேசாதீர்கள். இன்றா இல்லை நாளையா என்பதல்ல. இந்த அமைப்பு முறை நீடிக்கும் வரையில் தனி ஈழம் ஒன்றே தீர்வு. கானல் நீரை குடிக்க நினைக்க உங்களின் அறியாமையை அறிவாக எண்ணவேண்டாம். பரிதாபத்தை தேடும் நேரமல்ல. சரியான திசைவழியை காட்டி மக்களை நம்பிக்கை கொள்ளவைக்க வேண்டிய நேரம் இது. 

  இதில் ஏதோ நீங்கள் போராடுவது போல் ஆரம்பித்து மீண்டும் சுயநிர்ண்ய உரிமை என்று வேதாந்தம் பேசினால் ஈழ மக்கள் அல்ல, வெளிநாடுகளில் வாழும் அந்த மக்கள் கூட மன்னிக்க மாட்டார்கள். தனி ஈழத்திற்காக போராடுபவர்களையெல்லாம் குறுந்தேசியவெறி கொண்டவர்கள், சிங்கள சராசரி மக்களுக்கு எதிரானவர்கள் என்பது போல் சித்தரிப்பவர்களுக்கு வக்காலத்து வாங்கும் போதே தெரிகிறது நீங்கள் யார் என்பது. அவர்களுடைய பத்திரிக்கையில் இந்தியாவின் ஆதிக்கத்தை எதிர்ப்பதும், சீனாவின் ஆதிக்கத்தை இரண்டாம் நிலைப் படுத்துவதும் செய்துகொண்டிருக்கிறார்கள். 

  கடைசியாக, இன விடுதலைப் பற்றிய எந்தப் பார்வையும் இல்லாத, அதற்காக போராடுபவர்களை ஆதரிக்கத் தெரியாத, இன்று வரை தனி ஈழத்தை ஆதரிக்கவில்லை என்று வெளியில் சொல்ல தைரியமில்லாதவர்களை எப்படி //இலங்கை அரச அடக்குமுறைக்கு எதிரான முழக்கங்களுடன்// உறுதியுடன் போராடுவார்கள் என்று தெரியவில்லை. 

  //குறுந் தேசிய நலன்களைக் கடந்து இலங்கை அரசிற்கு எதிரான போராட்டங்கள் சாத்தியமான அனைத்து வகைகளிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.//

  இதை தெளிவாக பின்னூட்டத்திலாவது தைரியமாக விளக்கவேண்டும். வெறுமென மனிதாபிமானம் பேசுவது நலன்பயக்காது. அரசியல் உரிமை எந்த அரசியல் உரிமையை வென்றெடுக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துக. 1+1=1 அல்லது 1+1=2 ? தெளிவு செய்க. 

  1. லண்டனிலும் இராசதுரை முருகானந்தன் எனும் அன்பர் தமிழரை தமிழர் போராட்டங்களீல் மிரட்டிக் கொண்டிருந்தார்,சிவ பூசையில் கரடி போல இவர் கூத்துக்கள் அனேகர் அறீந்ததே., தலைவர் சரணடைந்தார் என்றதும் இப்போது இவர் போன இடமே தெரியவில்லை.

   1. தயவு செய்து விளக்கப்படுத்தவும். விளக்கமாக எழுதவும். தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.

 3. ‘சைட் டிஸ்’ போராட்டம்……

  இலங்கையில் மக்கள் ஏன் போராடவில்லை என்பது இவர்களுக்கு ஒரு கேள்வியே இல்லை!

  இன்று இலங்கையில் நடத்தப்பட்டு வரும் மாற்றங்களை இவர்களால், ”இனச்சுத்திகரிப்புக்கு” வெளியே விளக்க முடியவில்லை!

  கவனியுங்கள்…

  ”இலங்கை அரசு தனது இனச் சுத்திகரிபை அதிகரித்து வரும் நிலையில் அதன் ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்கள் அற்றுப் போன வெறுமை நிலையே காணப்படுகிறது”

  அதனால்…

  நாம் எவ்வாறு போராடவேண்டும்….???

  .இது என்ன கேள்வியே…

  ”பழைய குருடி கதவைத் திறவடி” இதுதான் எங்கள் போராட்டம்!!

  ரூபன்
  090810

Comments are closed.