இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் பற்றிய எனது கணிப்பீடு : பி.ஏ.காதர்

பி.ஏ.காதர் – 1994 ஜனாதிபதி தேர்தலின் போது சந்திரிகா குமாரதுங்கவின் தேர்தல் அமைப்புக்குழுவில் முழு மலையகத்திற்குமான ஒரே ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டவர். இலங்கை அரசியல் யாப்பு பற்றியும் தேர்தல் சீர்திருத்தம் பற்றியும் தனது பல்வேறு ஆய்வுகட்டுரைகளை பல்வேறு கருத்தரங்குகளில் சமர்ப்பித்தவர். இத்துறையில் சிறப்பு தகைமை கொண்ட இலங்கையின் அனைத்து புத்திஜீவிகளோடும் தொடர்பு வைத்திருந்தவர். சந்திரிகாவினால் அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவு குழுவின் முன்னிலையில் மலையக மக்கள் முன்னணியின் சார்பில் பிரேரணைகளை முன்வைத்து வாதாடிய அனுபவமும் இவருக்குண்டு. ஒருதடவை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானால் ஹோட்டல் கலதாரியில் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கைக்கான புதிய தேர்தல்முறை தொடர்பான கருத்தரங்கிற்கு இவர் சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்டார். அங்கு இவர் சென்ற போது ‘இந்த கூட்டத்தின்போது இந்த கதிரையில் அமரும் தகுதி இவருக்குத்தான் உண்டு’ என்று கூறி தான் அமர்ந்திருந்த கதிரையிலிருந்து எழுந்து அதில் இவரை அமரசெய்துவிட்டு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் முன்னால் சென்றமர்ந்து இவரது கருத்தை செவிமடுத்தாராம்.

 2010 ஜனாதிபதி தேர்தல் முடிந்தோய்ந்துவிட்டது. மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இப்போது அது பற்றிய பிரேத பரிசோதனையில் சிலரும் அதன் தாக்கம் தமிழ் மக்களை மீது எவ்வாறிருக்கும் என்ற அக்கறையில் சிலரும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். நான் இந்த தேர்தல் முடிவை இலங்கையின் தேர்தல்முறை எவ்வாறு அதிகாரத்திலிருக்கும் ஜனதிபதிக்கு சாதகமாக இருக்கிறது என்ற கண்ணோட்டத்திலிருந்து ஆராய விழைகிறேன். அத்துடன் இத்தேர்தல் முடிவினை நிர்ணயித்த காரணிகளைகளைப் பற்றியும் எனது கருத்தையும் முன்வைக்க முனைகிறேன்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் ஜனநாயகரீதியில் நடைப்பெற்றது இதுதான் இலங்கை மக்களின் தீர்ப்பு என எவராவது கூறினால் அது அப்பட்டமான பொய்யாகத்தான் இருக்கமுடியும். உண்மை என்னவென்றால் 1994 ஜனாதிபதி தேர்தலைத்தவிர (இது ஒரு விதிவிலக்கு) இலங்கையில் நடைபெற்ற எந்த ஒரு ஜனாதிபதி தேர்தலும் நேர்மையானமுறையில் நடைபெறவில்லை அத்தேர்தல்களில் வெற்றிபெற்றவர்களிடமிருந்து வெற்றிகள் அபகரிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் இரண்டு தேர்தல்களில் வெற்றி அபகரிக்கப்பட வில்லை கொள்ளையடிக்கப்பட்டன. ஒன்று 1988 ஜனாதிபதி தேர்தலில் ஆர் பிரேமதாசவின் வெற்றி. இரண்டாவது 2010 ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவின் வெற்றி. இத்தடவை நடைபெற்ற தேர்தலில் இடம்பெற்ற அதிகாரதுஷ்பிரயோகமும் ஊழலும் முன்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்கள் அனைத்தையும் கூட்டினால் கூட அதிகம் என்ற அளவுக்கு அப்பட்டமாக இருந்தது. தேர்தல் ஆணையாளரின் கட்டளைகளை மாத்திரமல்ல உச்ச நீதிமன்றின் தீர்ப்பைக் கூட அலட்சியம் செய்யும் அளவுக்கு அதிகாரதுஷ்பிரயோகம் இடம்பெற்றது.

அரச வளங்களும் திணைக்களங்களும் தொடர்பு சாதனங்களும் முன்னர் ஒருபோதும் இந்தளவுக்கு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதில்லை. வெற்றி தோல்வி எதுவானாலும் எதிர்கொள்வது என்ற மனநிலைக்கு பதிலாக எப்படியாவது வெற்றி பெற்றே தீருவது என்ற முடிவிலிருந்து கொண்டு சகல முறைக்கேடுகளும் அச்சுறுத்தல்களும் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன.

‘எனக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு என்னால் ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்ற முடியாது. மற்றபடி அனைத்தையும் செய்யமுடியும்’ என்று அப்போது ஜேஆர் கூறிய வாசகங்கள் அவரது யாப்பைப் பற்றி மிகச் சரியாகவே சித்தரிக்கின்றன். இத்தேர்தலானது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் தோல்வியையும் வெற்றியாக மாற்றமுடியும் என்பதை நிருபித்துள்ளது. இன்றுள்ள இலங்கையின் தேர்தல் முறையில் ஆட்சியிலிருக்கும் ஜனாதிபதி ஒருவரை தேர்தலால் பதவியிறக்க முடியாது என்பது மீண்டும் ஒருமுறை இத்தேர்தலில் நிருபிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஆறு ஜனாதிபதி தேர்தல்கள் இலங்கையில் – 1982 1988 1994 1999 2005 2010 ஆகிய ஆண்டுகளில் நடைப்பெற்றுள்ளன. இதில் ஒரே ஒருதடவை மாத்திரந்தான் 1994 ல் எதிரணி வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார். வேடிக்கை என்னவென்றால் அத்தடவை ஜனாதிபதியாக இருந்தவர் போட்டியிடவில்லை. அத்துடன் அரசதிகாரத்தை முழுமையாக பிரயோகிக்கக் கூடிய அனுபவம் வாய்ந்த அபேட்சகர் எவரும் ஆளும் கட்சி சார்பில் போட்டியிடவில்லை.

இலங்கை ஜனாதிபதி ஆட்சி முறையின் தோற்றத்தையும் இதவரை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களையும் மேலோட்டமாக பார்ப்பது இங்கு பொருத்தமாக இருக்கும்.

இலங்கையின நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையின் தோற்றம்:

1977 ஜுலை பாராளுமன்ற தேர்தலில் ஜேஆர் ஜயவர்தன தலைமையிலான ஐதேகட்சி அப்போது ஆட்சியிலிருந்த சிறிமா பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்தைத் தோற்கடித்து ஐந்தில் நான்கு பெரும்பான்மையுடன் அதிகாரத்திற்கு வந்தது. ஜேஆர் பிரதமரானார். தனக்கு பாராளுமன்றத்திலுள்ள அதீத பெரும்பான்மை பலத்தையும் எதிரணியினர் பலவீனப்பட்டிருந்த நிலைமையினையும் பயன் படுத்தி தனது புதிய அரசியலமைப்பை (constitution) 1978ல் அறிமுகப்படுத்தினார். உலகில் வேறெந்த நாட்டிலும் உள்ள ஜனாதிபதிக்கும் இல்லாதளவு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை அவரது அரசியல் யாப்பு ஏற்படுத்தியது. அதுவரையிருந்த அரசியலமைப்பின் கீழ் 1947 முதல் 1972 வரை ஆளுநர் பதவி நிறைவேற்று அதிகாரமற்ற அரச தலைவர் பதவியாகத் திகழ்ந்தது.

சிறிமா அரசாங்கம் கொண்டவந்த அரசியலமைப்பின் படி 1972 முதல் 1978 வரை ஜனாதிபதி பதவி நிறைவேற்று அதிகாரமற்ற அரச தலைவர் பதவியாகத் திகழ்ந்தது.

இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி 04. 02. 1978:

ஜேஆர் கொண்டுவந்த 1978 அரசியல் யாப்பு மாற்றம் அதுவரை இலங்கையிலிருந்த கொஞ்சநஞ்ச ஜனநாயக உரிமைகளையும் குழிதோண்டி புதைத்துவிட்டு சாசன சர்வாதிகாரத்தை (constitutional dictatorship) ஏற்படுத்தியது.

1978 பெப்ரவரி 4ந் திகதி – சுதந்திர தினத்தன்று – தான் கொண்டுவந்த அரசியலமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி பதவிக்கு ஜேஆர் தன்னைத்தானே நியமித்துக் கொண்டார்.

இவ்வாறு இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியாக வந்தவர் முறைப்படி தெரிவு செய்யப்பட்டவரல்ல அதிகாராத்தை துஷ்பிரயோகம் செய்து ஆட்சிக்கு வந்தவராவர். ஜனாதிபதியாக தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொண்ட ஜேஆர் தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி செய்த முதலாவது வேலை தனக்கு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியாக வரக்கூடிய சிறிமா பண்டாரநாயக்கவின் சிவில் உரிமையைப் பறித்து அவரை அடுத்த தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட முடியாமல் செய்ததுதான்.

முதலாவது ஜனாதிபதி தேர்தல் 20.10.1982

ஓட்டப்போட்டியில் தனக்கு சவாலாக வரக்கூடியவனின் காலை உடைத்து ஓடமுடியாமல் செய்துவிட்டு தனது வெற்றியை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டவனை கெட்டிக்காரன் என்பதா? அயோக்கியன் என்பதா? ஜேஆர் தனக்கு சவாலாக வரக்கூடிய சிறிமாவை போட்டியிட முடியாமல் செய்துவிட்டு எதிரணியை பிளவுபடுத்திவிட்டு தனது முழு அதிகாரத்தை பிரயோகித்தும் கூட 52.91 வீத வாக்குகளை மாத்திரமே பெற்று தனது ஜனாதிபதி பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது.

அவரை எதிர்த்து எச்.எஸ்.ஆர்.பி. கொப்பேகடுவ (2548438 வாக்குகள்)றோகண விஜய வீர (2,73,428 வாக்குகள்) ஜிஜி பொன்னம்பலம் (1,73,934 வாக்குகள்) கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா (58531வாக்குகள்) வாசுதேவநாணயக்கார (17005 வாக்குகள்) போட்டியிட்டதால் எதிர்கட்சி வாக்குகள் பிரிந்தன. அத்துடன் சுக சார்பில் போட்டியிட்ட கொப்பேகடுவைக்கு தமிழ் வாக்குகள் கிடைக்கவில்லை. அத்துடன் சுக யின் அநுர பண்டாரநாயக்க பிரிவு அவருக்கு எதிராக செயற்பட்டது. இத்தகைய காரணங்களால் மாத்திரமே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

ஓருவிடயத்தை இங்கு கூறவேண்டும். இத்தேர்தலில் கள்ளவோட்டு அச்சுறுத்தல் லஞ்சம் ஆகியன பிரதான காரணிகளாக இருந்து இத்தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கவில்லை. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பலம் வாய்ந்த எதிரணி வேட்பாளர் ஒருவர் தலையெடுக்காமல் செய்வதே இத்தேர்தலில் ஜேஆரின் தந்திரோபாயமாக இருந்தது.

இத்தேர்தல் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்தது. அடுத்த தேர்தலில் சிறிமா போட்டியிட்டால் இத்தந்திரோபாயத்தால் மாத்திரம் வெற்றி பெற முடியாது என்பதை ஆளுங்கட்சியைச் சேர்ந்த தேர்தல் விற்பன்னர்கள் உணர்ந்து மாற்று வழியைக் கண்டுபிடித்தனர். அவர்களில் பிரதானமானவர்கள் ஆர் பிரேமதாச காமினி திசாநாயக்க லலித் அத்துலத் முதலி ஆகியோராவர். இவர்களுக்கு சில விரிவுரையாளர்கள் ஆய்வுகள் நடத்தி ஆலோசனை வழங்கினர்(விற்றனர்).

இவர்கள் மூவரதும் தேர்தல் தந்திரோபாயங்களில் சிற்சில வித்தியாசங்கள் இருந்தாலும் அவற்றின் பொதுவான தன்மையை பின்வருமாறு வரையறுக்கலாம்:

I. தேர்தல்களத்தை இனங் கண்டு மூன்றாக வகுப்பது: ஒன்று பலமான பகுதிகள் (அதாவது தமது கட்சிக்கு பெரும்பான்மையோர் வாக்குகளிக்கக் கூடிய பகுதிகள்) இங்கு எதிரணியினர் காலூண்றாமல் கவனித்துக் கொள்வது. அங்குள்ள எதிரணியினரை அச்சுறுத்தி வாக்குச்சுவடிகளுக்கு செல்லவிடாமல் செய்து விட்டு அவாகளது வாக்குகளை தாம் பறித்தெடுத்து அல்லது விலை கொடுத்து வாங்கி வாக்கு நிலைய பொறுப்பதிகாரியையும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் – அச்சுறுத்தியோ லஞ்சம் கொடுத்தோ கையில் போட்டுக் கொண்டு கள்ள வோட்டு போடுவது. இரண்டாவதாக சமபலமுள்ள பகுதிகள் (அதாவது தமக்கும் எதிரணிக்கும் கிட்டத்தட்ட சமமாக ஆதரவுள்ள பகுதிகள்) இங்கு தமது ஆதரவாளர்கள் எதிர்கட்சிக்கு சென்றுவிடாமல் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதேசமயம் எதிரணிக்கு ஆதரவானவர்களை விலை கொடுத்து வாங்குவது. அல்லது இடத்திற்கேற்ப ஆளுக்கேற்ப அணுகுமுறையை மாற்றிக் கொண்டு அங்கு பெரும்பான்மை வாக்கு விழுவதை உறுதிபடுத்துவது. மூன்றாவதாக பலவீனமான பகுதிகள் (அதாவது எதிரணியின் கோட்டை) இங்கு அதிகம் நேரத்தையும் சக்தியையும் செலவளிக்காமல் அதேசமயம இங்குள்ள செல்வாக்கான நபர்களை விலைக்கு வாங்கி அவர்கள் மூலம் கிடைக்கக் கூடிய வாக்குகளை அதிகரிப்பது.

II. பிரச்சாரத்தின் போது இடத்திற்கேற்ப (சில பகுதிகளில் சாதியை வைத்து வாக்குபெறலாம் சில இடங்களில் அமைப்பாளர்களுக்கிடையிலான தனிப்பட்ட பகையை) முரண்பாடுகளை பயன்படுத்திக் கொள்வது. பிரச்சாரத்தின் கடைசி நாளன்று ஏதாவதொரு அதிர்ச்சியான அல்லது ஆத்திரமூட்டும் உண்மை போன்ற பொய்யை கட்டவிழ்த்து விடுவது. விகிதாச்சார வாக்கு முறையிலுள்ள சிக்கல்களைப் பயன்படுத்தி எதிரணியிலுள்ள அப்பாவி வாக்காளரின் வாக்குகள் செல்லுபடியற்றதாக ஆக்குவதற்கான உத்திகளைக் கடைசி நேரத்தில் கையாளுவது. (உதாரணமாக ‘உங்களுக்கு இரண்டு வாக்குகள் இருக்கின்றன அதில் முதலாவது வாக்கை உங்கள் அபிமான கட்சிக்கு கொடுங்கள். இரண்டாவது வாக்கை எங்களுக்குப் போடுங்கள்’ எனக் கூறி நம்ப வைப்பது.)

III. லும்பன்களையும் பாதாள கோஷ்டிகளையும் ஒட்டுப்படைகளையும் இராணுவத்திலிருந்து ஓடியவர்களையும் கையில் வைத்திருப்பது. இவர்களைக் கொண்டு எதிர்க்கட்சி அமைப்பாளர்களை அச்சுறுத்தி அவர்களை இயங்காமற் செய்வது.

IV. கள்ளவோட்டு போடுவதில் கவனமான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது. ஆரம்பத்தில் சில வாக்கு நிலையங்களிலே பதிவுசெய்யப்பட்ட வாக்குகளை விட பெட்டியில் நிரப்பப்பட்ட வாக்குகள் அதிகமாக இருந்ததால் அவை நிராகரிக்கப்பட்டன. இப்போது கள்ளவோட்டு போடும் கலை விஞ்ஞானபூர்வமாக பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக ஒரு ஜனாதிபதி தேர்தலில் ஆளுங்கட்சியின் நிச்சயமான வெற்றிக்கு 10 வீதமான கள்ள வாக்குகள் போதும். இறுதியாக நடைப்பெற்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சக்கு அதிக பட்சம் இருபது லட்சம் (14மூ) கள்ளவாக்குகள் போதும். இதனை ஒரு மாவட்டத்தில் மாத்திரம் போடமுடியாது. அதனை மிக லாவகமாக செய்யமுடியும். அதற்கொரு முறையிருக்கிறது. இலங்கை முழுவதிலும் 11இ098 வாக்குச்சுவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் ஒவ்வொரு வாக்கு சுவடியிலும் தலா 100 வாக்குகள் வீதம் கள்ளவாக்குகள் போடப்பட்டால் 11 லட்சம் கள்ள வோட்டுகள் விழும். ஏனைய ஒன்பது லட்சம் கள்ளவோட்டுகளை 3000 சாதகமான (அதாவது எதிரணியினர் செல்ல முடியாத அல்லது ஒதுக்குப்புறமான) வாக்குச் சுவடிகளைத் தேர்ந்தெடுத்து தலா 300 கள்ள வாக்குகள் போட்டால் சுலபமாகப் பெற முடியும். இத்தகைய பலவீனமான வாக்குச்சுவடிகளின் பட்டியல்கள் பிரதான கட்சிகளிடம் இருக்கின்றன. ஆனால் அதனை ஆளுங்கட்சியால் மாத்திரமே பயன்படுத்த முடியும்.

V. பிரமாண்டமான கூட்டங்களை நடத்தியும் பிரமாண்டமான பிரச்சார உத்திகளைப் பயன்படுத்தியும் ஆதரவாளர்களின் மத்தியில் வெற்றி மனோநிலையை உற்சாகமாக வைத்திருப்பது. அதேசமயம் எதிரணியின் பிரச்சாரங்கள் வாக்காளர்களைப் போய்ச்சேராமல் தடுப்பது.

இவ்வுத்திகள் இப்போது இலங்கைத் தேர்தல்களின் அரிச்சுவடிகளாகி விட்டன. ஆனால் இவ்வுத்தியைப்பயன் படுத்துவதற்கு அரச இயந்திரம் தேவை. உதாரணமாக அரச பலம் இல்லாமல் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் வாக்குச்சுவடி பொறுப்பாளர்களையும் ஒட்டுப்படைகளையும் தமது ஏவலாளர்களாக மாற்ற முடியாது.

இரண்டாவது ஜனாதிபதி தேர்தல் 19.12.1988

ஜேவிபியின் இரண்டாவது ஆயுத கிளர்ச்சியும் அதனை நசுக்குவதற்காக அரசு கட்டவிழ்த்து விட்ட வரைமுறையற்ற அடக்குமுறையும் இலங்கையில் இரத்த ஆறை பெருக்கெடுக்க செய்திருந்தவேளையில் ‘பச்சைப் புலிகளால்’ ஜேவிபியினரும் எதிரணியினரும் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருந்த தருணத்தில் இத்தேர்தல் நடைப்பெற்றது. இரண்டுதடவைகள் மாத்திரமே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என்ற அவரது அரசியலமைப்பின் வரையறைக்கமைய ஜேஆரினால் இனி போட்டி போட முடியாது என்ற நிலையில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு காமினி திசாநாயக்கவும் லலித் அத்துலத் முதலியும் பகீரதப்பிரயத்தனம் செய்து கொண்டிருக்கும் போது சாதிவாதம் காரணமாகவும் அவரது வறிய பின்புலம் காரணமாகவும் ஜேஆரும் ஐதே கட்சி பிரதிநிதித்துவப்படுத்திய மேல்வர்க்கமும் பிரேமதாச ஜனாதிபதியாக வருவதை விரும்பாமல் அவருக்கெதிராக சதி செய்து கொண்டிருந்தது. அச்சதிகளை எல்லாம் முறியடித்துக் கொண்டு பிரேமதாச போட்டியிட்டு அப்போது நிலவிய பயங்கரமான சூழலைப் பயன்படுத்தி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிறிமாவை விட வெறும் இரண்டு லட்சத்து எழுபத்தொண்பதாயிரம் (279239) வாக்கு வித்தியாசத்தில் 50.43 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். ஜனாதிபதியாக இன்னும் ஜேஆர் இருந்தபடியால் பிரேமதாசவால் முழு அரச பலத்தையும் பிரயோகிக்க முடியவில்லை. எனினும் நிறைவேற்று அதிகாரம் இல்லாமலே பிரதமர் என்ற முறையில் அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சிறிமாவை வெற்றி கொள்ள முடிந்தது. பிரேமதாச இத்தேர்தலில் வெற்றிபெற்றார் என்பதை விட வெற்றியைக் கொள்ளையடித்தார் எனக் கூறுவதே பொருத்தம்.

முன்றாவது ஜனாதிபதி தேர்தல் 09.11.1994

பிரேமதாசவால் தனது முழு ஜனாதிபதி காலத்தையும் பயன்படுத்த முடியவில்லை. அதற்கிடையில் 1993 மே மாதம் முதலாம் திகதி தற்கொலையாளியின் குண்டுவெடிப்பிற்கு பலியானார். இடைக்கால ஜனாதிபதியாக டி.பி. விஜேதுங்க நியமிக்கப்பட்டார். அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் மீண்டும் ஐதே கட்சிக்குள் இழுபறி நடந்தது. முடிவில் காமினி திசாநாயக்க பெயரை ஐதே கட்சி பிரேரித்தது. தனது பெயரை முன்மொழியாதது டி.பி. விஜேதுங்கவுக்கு மனத்தாபத்தை ஏற்படுத்தியிருந்தது. எனவே சந்திரிகா வெற்றி பெற்றாலும் பரவாயில்லை காமினி தோற்கவேண்டும் என்ற மனநிலையிலிருந்த விஜேதுங்க நீதியான தேர்தலொன்றை நடத்த தயாரானார். இச்சமயத்தில் மிகவும் எதிர்பார்ப்புடன் சந்திரிகா குமாரதுங்க எதிரணிகளை ஒன்று திரட்டி காமினியை எதிர்த்து போட்டியிட்டார். காமினியிடம் பணபலம் அனுபவம் குண்டர்கள் அனைத்தும் இருந்தன. அரச அதிகாரத்தை அவர் விஜேதுங்கவின் ஆதரவு இல்லாமலே பயன்படுத்தக்கூடிய அளவுக்கு அவருக்கு செல்வாக்கும் அங்கீகாரமும் இருந்தது. எனவே கடுமையான போட்டியொன்றை நாடு எதிர்பார்த்தது. ஆனால் 1994 அக்டோபரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது புலிகளால் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் காமினி கொல்லப்பட்டார். அவருக்கு பதிலாக காமினியின் மனைவி சிறிமதி திசாநாயக்க நியமிக்கப்பட்டார். ஆயினும் இவரால் சந்திரிகாவின் பின்னால் திரண்ட மக்கள் எழுச்சிக்கு முகங்கொடுக்க முடியவில்லை. 62.28மூ வீத வாக்குகளைப் பெற்று வரலாறுகாணாத வெற்றியுடன் சந்திரிகா குமாரதுங்க இலங்கையின் முதலாவது பெண் ஜனாதிபதியானார்.

இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் முறைக்கேடற்ற ஒரேயொரு ஜனாதிபதி தேர்தல் இதுவாகும். நேர்மையாக இத்தேர்தல் நடைபெற்றதால்தான் 1977 ல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சிகட்டிலிலிருந்து கீழிறங்க நேர்ந்தது. அதன் பின்னர் நேர்மையான தேர்தல் ஒன்று நடைபெறவு மில்லை ஆட்சிமாற்றம் நடைபெறவுமில்லை.

நான்காவது ஜனாதிபதி தேர்தல் 21.12.1999

தனது புகழ் முற்றாக வீழ்ச்சியடையுமுன்னரே அடுத்த ஜனாதிபதி தேர்தலை நடத்தி தனது வெற்றியை உறுதிபடுத்திக் கொள்ள விரும்பிய சந்திரிகா தனது முதலாவது ஆட்சிகாலம் முடிவடைவதற்கு சுமார் ஒருவருடம் முன்னதாகவே தேர்தலை நடத்தினார். இத்தேர்தலில் அரசின் சகலவளங்களும் துஷ்பிரயோகம் செய்தும் கூட 51.12 வீத வாக்குகளை மாத்திரமே பெற்று மீண்டும் ஜனாதிபதியாக முடிந்தது. இவரை எதிர்த்து போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 42.7மூ வீத வாக்குகளைப்பெற்று தோல்வியடைந்தார். சந்திரிகாவை இத்தேர்தலில் வெல்ல வைத்தது அவரது அரசபலமேயாகும்.

ஐந்தாவது ஜனாதிபதி தேர்தல் 15.11. 2005

அரசியலமைப்பின் படி இரண்டுதடவைகள் ஆட்சியிலிருந்த சந்திரிகாவின் பதவிகாலம் 2005ல் முடிவடைந்தது. ஆனால் அவர் தனது முதலாவது ஆட்சிகாலம் பூர்த்தியாவதற்கு ஒருவருடம் முன்னதாக தேர்தல் நடந்ததை காரணங்காட்டி 2006 ல் அடுத்த ஜனாதிபதி தேர்தலை நடத்த முயன்றார். இதனை ஆட்சேபித்து ஹெலா உரிமய உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றம் 2005ல் தேர்தiலை நடத்துமாறு உத்தரவிட்டது. இதன்படி 2005ல் 6வது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.

சந்திரிகாவின் இரண்டாவது ஆட்சிகாலத்தில் குழப்பங்கள் மலிந்திருந்தன. ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் எத்தகையது என்பதை மீண்டும் நிருபிப்பதைப்போல் இவ்வாட்சிகாலம் இருந்தது. 2000 ஆண்டு அக்டோபர் மாதம் பாராளுமன்றத் தேர்தலில் சிறிதளவு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்த இவரது அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆதரவை விலக்கிக்கொண்டபோது ஆட்டம் கண்டது. ஆட்சியைக்காப்பாற்ற சந்திரிகா ஜேவீபியின் ஆதரவை நாடினார். இதனால் அதிருப்தியடைந்த பலர் ஆளும் கட்சியிலிருந்து எதிர்கட்சிக்கு தாவினர். பாராளுமன்றில் சந்திரிகா பெரும்பான்மையை இழந்தார். எனவே மீண்டும் 2001 டிசெம்பர் 06 ல் பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடந்தது. அதில் ரணில் தலைமையிலான ஐதேகட்சி வெற்றிபெற்று பாராளுமன்றைக் கைப்பற்றியது. நாட்டில் விசித்திரமான நிலை. ஜனாதிபதியாக மக்கள் கூட்டணியைச் சேர்ந்த  சந்திரிகா. பிரதமராக ஐதேகயைச் சேர்ந்த ரணில். இந்த இரட்டையாட்சி – இழுபறி நிலை 2 ஏப்ரல் 2004 வரை நீடித்தது. சந்திரிகாவின் இரண்டாவது ஆட்சிகாலம் மிகவும் ஊழல் மலிந்ததாகக் காணப்பட்டது. எதிர்கட்சி யிலிருந்து ஆளுங்கட்சிக்கும் ஆளுங்கட்சியிலிருந்து எதிர்கட்சிக்கும் எம்பிக்கள் கட்சிதாவுவதில் ஒரு விவஸ்தையே இல்லாமலிருந்தது. அதைவிட தனது நிறைவேற்று அதிகாரத்தைப் தவறான முறையில் பயன்படுத்தி உள்துறை நிதி ஊடகம் ஆகிய மூன்று முக்கிய அமைச்சுகளை தனது கைகளில் எடுத்துக்கொண்டார். இதனால் ஏற்பட்ட கொந்தளிப்பான நிலைமையில் தனது ஜனாதிபதி அதிகாரத்தைக் கொண்டு ரணில் அரசாங்கத்தை கவிழ்த்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி (United People’s Freedom Alliance)என்ற பெயரில் பல கட்சிகளின் கதம்பக் கூட்டொன்றை அமைத்து மீண்டும் பாராளுமன்றத்தைக் கைப்பற்றினார். இந்த கைங்கரியத்தை லாவகமாகக் கையாள்வதற்குரிய திறமை அவரது கட்சியில் ஒரே ஒருவருக்கு மாத்திரந்தான் இருந்தது. அது சந்திரிகாவின் முன்னைநாள் எதிரியான மகிந்த ராஜபக்ச.

பேர்சி மகிந்த ராஜபக்ச: Percy Mahendra Rajapaksa:

இவர் அரசியல் பாரம்பரியம் கொண்ட ஒரு குடும்பத்தில் ஹம்பாந்தொட்ட மாவட்டத்திலே பிறந்தவர். இவர்1970 ல் தனது 24 வயதில் பெலியத்த தொகுதியில் வெற்றிபெற்று பாராளுமன்றம் பிரவேசித்தார். அப்போது அவர்தான் பாராளுமன்றத்திலிருந்த மிகவும் வயது குறைந்த எம்பி. 77ல் சட்டத்தரணியானார். அதேயாண்டு பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தார். 1983 வன்செயலின்போது தென்பகுதியில் தமிழருக்கெதிராக காடையர்களுக்கு துணையிருந்தார் என்ற பழி இவர்மீது இருந்தது. அதைத் தொடர்ந்து சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் வைக்கப்பட்டிருந்தார். விடுதலையாகி மீண்டும் 1989 ல் புதிய விகிதாச்சார முறையின் கீழ் நடத்தப்பட்ட தேர்தலில் ஹம்பாந்தொட்ட மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று பாராளுமன்றம் திரும்பினார்.

சந்திரிகா அரசாங்கத்தில் ஆரம்பத்தில் இவர் விரும்பத்தகாத விருந்தாளியாகவே நடத்தப்பட்டார். அதற்கு ஒருகாரணம் அப்போது ஐதே கட்சியில் இருந்த சந்திரிகாவின் சகோதரன் அனுர பண்டாரநாயக்கவுடன் இவருக்கிருந்து நட்பாகும். இவ்விருவரும் அப்போது நல்ல நண்பர்கள். ஆனால் சந்திரிகாவும் அனுரவும் அப்போது கீரியும் பாம்பும்போலிந்தனர். எனவே மகிந்தவை சந்தேகக்கண் கொண்டு பார்த்து சந்திரிகா ஓரங்கட்டி வந்தார். சந்திரிகா இவரை ‘ராய்ட்டர்’ என்றுதான் அப்போது வர்ணித்தார். இதன் பொருள் அரசாங்கத்தின் அந்தரங்கங்களை இரகசியமாக ஐதே கட்சிக்கு அனுரவூடாக வழங்குபவர் என்பதாகும்.

ஆனால் உண்மையில் 1977 ன் பின்னர் இவர் சுதந்திர கட்சியின் வளர்ச்சிக்கு சந்திரிகாவைவிட அதிகம் பாடுபட்டவர். 1977ன் பின்னர் ஜேஆர் ஆட்சியில் சுகவின் பெயரைச் சொல்லிக்கொண்டு துணிந்து கட்சி வேலை செய்வதற்கு மற்றவர்கள் தயாராக இல்லாத சமயத்தில் அந்த கட்சி கொடியைத் தாங்கிப்பிடித்தவர்கள் இருவர். ஒருவர் அலவி மௌலானா மற்றவர் மகிந்த ராஜபக்ச. சந்திரிகா பதவிக்கு வந்ததும் இவரை ஒரங்கட்டுவதற்காக தொழில் அமைச்சை இவருக்கு வழங்கினார். இது ஒரு முக்கியத்துவமற்ற அமைச்சாகவே அதுவரை கருதப்பட்டது. ஆனால் இவர் அவ்அமைச்சைப் பொறுப்பேற்றதும் தொழிலாளர் சாசனம் ஒன்றை முன்மொழிந்து தொழிலாளர்களின் தோழரானார். இது சந்திரிகாவுக்கு பிடிக்கவில்லை. அவரது அந்த அமைச்சை பறித்தெடுத்து விட்டு மீன்பிடி அபிவிருத்தி அமைச்சராக நியமித்தார். அவர் அதனையும் பொறுப்பேற்று மீனவ நண்பரானார். இப்படி வெட்ட வெட்ட தழைக்கும் விருட்சமாக அவர் வளர்ந்தார். எனக்குத் தெரிந்த வரையில் இவர் ஒரு தூரதொலைநோக்குள்ள ஒரு தலைவரல்ல. ஆனால் சிறந்த அமைப்பாளர் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் வல்லவர். 1977ன் பின்னர் இவரே சுக யின் உண்மையான தேசிய அமைப்பாளர். அப்போதைய பலம்வாய்ந்த ஐதே கட்சி அரசு ஆட்சியில் இருக்கும் போதே ஐதே கட்சி தலைவர்களின் தோள்களில் கையைப் போட்டுக்கொண்டு லாவகமாக தனது கட்சியை வளர்த்தவர் இவர். இவருக்கு நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கும் தெரியும்.

சந்திரிகா மீது தற்கொலை தாக்குதல் முயற்சி மேற்கொள்ப்பட்ட பின்னர் அவரது ஆட்சிகாலத்தில் அனுரவும் (பின்னர் இவர் சந்திரிகாவுடன் சமரசம் செய்துகொண்டிருந்தார்) அப்போது பிரதமராக இருந்த ரத்ணசிறி விக்ரமநாயக்கவும் ஏனைய முக்கிய அமைச்சர்களும் வெளியில் நடமாடவே பயந்து கொண்டிருந்தபோது துணிந்து 2004 தேர்தல் பிரச்சாரத்தை தலைமை தாங்கி முன்னின்று நடத்தி ஐதே கட்சியைத் தோற்கடித்து பிரதமரானார். புலிகளின் அச்சுறுத்தலே அன்றும் அவர் பிரதமராக வருவதற்கு உதவியது. அத்தகைய அச்சுறுத்தல் இல்லாதிருந்தால் அவரை சந்திரிகா பிரதமராக்கியிருக்க மாட்டார். இவருக்கு அநேகமாக அனைத்து சுதந்திர கட்சி அமைப்பாளரையும் தனிப்பட்ட முறையில் தெரியும். தேர்தல்களத்தில் எப்படி விளையாடுவது என்பது இவருக்கு கைவந்த கலை இத்துறையில் இவருக்குள்ள அனுபவம் இலங்கையில் வேறு எவருக்கும் கிடையாது.

இருதடவைகள் ஆட்சியிலிருந்த சந்திரிகா மீண்டும் போட்டிபோடமுடியாத நிலையில் அப்போது நிலவிய புலிகளின் அச்சுறுத்தலின் மத்தியில் வேறு எவரும் போட்டியிட துணியாத வேளையில் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளரானார். ஐதே கட்சியை எப்படியும் தோற்கடித்தாக வேண்டுமென்ற வன்மத்தோடிருந்த சந்திரிகா அவரை ஆதரித்தார். அதிகார துஷ்பிரயோகம் ‘இலங்கை தேர்தல் சூத்திரம்’ யாவும் பயன்படுத்தப்பட்டன. எனினும் கூட மகிந்த தோல்வியடையும் நிலை. அதிர்ஷ்டம் அவருக்கு கை கொடுத்தது. அவரது அதிர்ஷ்டம் எப்போதுமே புலிகள்தான். புலிகளின் அச்சுறுத்தலே அவர் பிரதமராவதற்கு காரணமாயிருந்தது. 2005 தேர்தலின்போது ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்று தீர்மானித்து புலிகள் வடக்கில் தமிழ் வாக்குகள் விழாமல் செய்ததால்தான் மகிந்த 4887152 (50.29) வாக்குகள் பெற்று வெறுமனே 180786 (ஒரு லட்சத்து எண்பதாயிரம்) வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஜனாதிபதியானார். எதிரணி வேட்பாளரான ரணில் விக்ரமசிங்க 4706366 (48.43) வாக்குகளைப் பெற்றிருந்தார். இத்தேர்தலிலும் வெற்றி பெற்றது ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரமே.

ஆறாவது ஜனாதிபதி தேர்தல்: 26.01.2010

மீண்டும் ஒருதடவை புலிகளே மகிந்த ராஜபக்ஷவின் அதிர்ஷ்டமாக அமைந்தனர். இத்தடவை வெல்லப்படமுடியாதவர்கள் எனக் கருதப்பட்ட புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கை வரலாற்றில் இவருக்கு முன்னர் இருந்த அனைத்து தலைவர்களுக்கும் கிடைக்காத அளவு மரியாதையும் அபிமானமும் இவருக்கு சிங்கள மக்கள் மத்தியில் அதிகரித்தது. அந்த வெற்றிக்களிப்பில் இலங்கை வரலாறு காணாத அளவுக்கு வன்னியில் தமிழ் மக்கள் பட்ட துயரமும் கண்ணீரும் கூட மறைக்கப்பட்டு விட்டது.

எந்தளவுக்கு தெற்கில் இவரது புகழ் உச்சத்தையடைந்திருந்தது என்பதற்கு ஒரு உதாரணம்: மகிந்த ராஜபக்ஷ மாகாணசபை தேர்தல் பிரச்சாரத்திற்காக வாகனத்தில் சென்று கொண்டிருந்த வேளை அதைக்கண்ட சிங்கள வயோதிப மாது ஒருவர் அவரது வாகனம் சென்ற பாதையை தொட்டு வணங்கி ‘எங்கள் மாகாராஜா நீடூழி வாழ்க!’ என முழக்கமிட்டாராம். அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. தேர்தல் விற்பன்னர் என்ற முறையில் இவர் தனக்கு வாய்த்த இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தார்.

ஒரே சமயத்தில் மாகாணசபை தேர்தல்களை நடத்தாமல் தனித்தனியாக நடத்தி தனக்கு நம்பிக்கையானவர்களை வெல்ல வைப்பதற்கு அம்மாகாணங்களில் முகாமிட்டு அரச வளங்களை தாராளமாக செலவழித்தார். மாகாண சபை தேர்தல் காலங்களிலும் கடைசியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் இவர் சில நகரங்களையும் சில கிராமங்களையும் தேர்ந்தெடுத்து அவற்றிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் விருந்து வழங்கினாராம். இவ்வாறு தேர்தல்களில் சாப்பாட்டுக்கும் சாராயத்திற்கும் இவரால் செலவளிக்கப்பட்ட அரசாங்க பணத்தை சேமித்திருந்தால் முழுநாட்டு மக்களினதும் ஒருவருடம் சாப்பாட்டு செலவை ஈடு செய்திருக்கலாம் என திறைச்சேரியைச் சேர்ந்த ஒருவர் கவலைப்பட்டாராம்.

இவ்வாறு ஒவ்வொரு மாகாணத்திலும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை நிலை நிறுத்திக்கொண்டு அடிமட்டத்தில் வலுவான அத்திவாரத்தை போட்டுக்கொண்டு சுமார் இரண்டு வருடங்கள் முன்னதாகவே ஜனாதிபதி தேர்தலை நடத்தினார். ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றி ஈட்டி சூட்டோடு சூடாக பாராளுமன்ற தேர்தலை நடத்தி சகல வளங்களையும் ‘இலங்கை தேர்தல் சூத்திரத்தையும்’ பயன்படுத்தி எப்படியாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று தொடர்ச்சியாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூடியதான அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்து எப்படியாவது தொடர்ந்து தான் ஜனாதிபதியாக இருந்து கொண்டு தனது குடும்பத்தினருக்கு முக்கிய பதவிகளை வழங்கி தனது குடும்ப சர்வாதிகாரத்தை நிலைநாட்ட நினைத்தார்.

அப்போது புகழேனியின் உச்சியிலிருந்த மகிந்தவுக்கு போட்டியே இருக்கவில்லை. குறைந்தது 73ம சதவீத வாக்குகளைப்பெற்று அமோக வெற்றியீட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மற்றொரு யுத்த வெற்றி கதாநாயகனான சரத் பொன்சேகா தேர்தல் களத்தில் இறங்கிய போது நிலைமை மாறியது. புலிகளை வெற்றி கொண்டதில் மகிந்தவுக்கும் பொன்சேகாவுக்கும் சமபங்கு இருப்பதாக சிங்கள மக்கள் கருதினர்.

சரத் பொன்சேகா தேர்தல் களத்தில் இறங்க முன்னர் மகிந்த ராஜபக்ச 75- 80 வீத வாக்களரின் ஆதரவைப் பெற்ற நிலையிலிருந்தார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவர் என்ற சித்திரம் யுத்த வெற்றியின் வீரமைந்தன் வழிபாடு தென் மாகாண அபிவிருத்தியினால் கிடைத்திருந்த நற்பெயர் ஆகியவற்றோடு எதிர்க்கட்சியினருடனும் சகஜமாக பழகுபவர் என்ற தனிநபர் அங்கீகாரமும் சேர்ந்து எதிரணியினரின் நிலைமை செல்லாக்காசாக்கி யிருந்தது. நாட்டின் ஏனைய பிரச்சினைகள் மறைக்கப்பட்டுப் போயின.

ஆனால் சரத் பொன்சேகா தேர்தல் களத்தில் இறங்கிய போது நிலைமை மகிந்த ராஜபக்ச 45 % பொன்சேகா 55 % என மாறியது. யுத்தத்தின் வெற்றிக்கு மகிந்த ராஜபக்சவால் ஏக உரிமை கொண்டாட முடியவில்லை. ஊழல் குடும்ப ஆதிக்கம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகிய ஏனைய பிரச்சினைகள் முன்னுக்கு வந்தன. பொன்சேகா யுத்த களத்திலிருந்து உயிரை பணயம் வைத்து நாட்டுக்காகப் போராடிய தியாகி எடுத்தகாரியத்தை முடிக்கக் கூடியவர் ஊழலற்றவர் என்ற மக்கள் அபிப்பிராயம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

தனிநபர் அங்கீகாரம் என்ற நிலையிலிருந்து பார்த்தால் ஊழல் குடும்ப ஆதிக்கம் காரணமாக மகிந்த ராஜபக்சவின் ஆதரவு குறைந்து சரத் பொன்சேகாவின் ஆதரவு அதிகரித்தது. பொன்சேகாவின் கூட்டங்களுக்கு வந்த தொகை மகிந்த ராஜபக்சவின் கூட்டங்களுக்கு சோறும் சாராயமும் பணமும் கொடுத்து பஸ்களில் கொண்டுசெல்லப்பட்ட மக்கள் தொகைக்கு ஈடாக இருந்தது அல்லது அதிகமாக இருந்தது. ஒரு நேர்மையான தேர்தல் நடந்திருந்தால் உண்மையில் மகிந்த ராஜபக்ச தோற்றுத்தான் போயிருப்பார். இந்த நிலைமை நிதர்சணமாகத் தெரிந்தது. இதனாற்றான் சந்திரிகா. மாத்தறை மேயர் போன்றோர் பொன்சேகாவை ஆதரிக்கத் தொடங்கினர்.

ஆனால் தேர்தல் முடிவில் வழமைப் போல ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் வெற்றி பெற்றது.

மகிந்த ராஜபக்ச 6015934 (57.88%) வாக்குகளையும் சரத் பொன்சேகா 4இ173இ185 (40.15%) வாக்குகளையும் பெற்றனர். வித்தியாசம் 1842749 (பதினெட்டு லட்சம்) வாக்குகள். Winner Takes All வெற்றிபெற்றவனுக்கே அனைத்தும். எப்படி வெற்றி பெற்றான் என்பதைப்பற்றி அக்கறையில்லை எப்படியாவது வெற்றி பெற்றால் வெற்றி அனைத்தையும் நியாயப்படுத்திவிடும் என்பார்கள் இதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. கணிதமுறைப்படி பார்த்தால் கூட பொன்சேகா இன்னும் 9.5% சதவீதமான அதாவது இன்னும் ஒன்பது லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் பெற்றிருந்தால் வெற்றி பெற்றிருப்பார்.

இந்த ஒன்பதரை லட்சம் வாக்குகளை விட அதிகமாகவே வாக்குகள் இராட்ச அரசபலத்தைக கொண்டு அபகரிக்கப்பட்டன என்பதை புரிந்துகொள்வது கடினமான விடயம் அல்ல. இந்த ஒன்பதரை லட்சம் வாக்குகளை சரத் பொன்சேகாவால் அரசபலம் இல்லாமலே பெற்றிருக்க முடியும். ஆனால் அவரது சேனைகள் அவரது கட்டுப்பாட்டிலில்லை. இரவல் படையை வைத்துக்கொண்டு யுத்தத்திற்குப் போன சேனாதிபதியாக அவரிருந்தார். அவருக்கு தேர்தல் அனுபவம் அறவே கிடையாது. அதைவிட அவருக்கென ஒரு தனியான பலம்வாய்ந்த அமைப்பு இருக்கவில்லை. அத்துடன் அவரை ஆதரித்த ஜேவிபி முழுமூச்சாக செயற்பட்டாலும் அதன் பிரச்சாரம் எடுபடவில்லை. மரபுரீதியாக இடதுசாரி அமைப்பு எதுவும் ஐதேகட்சியுடன் கூட்டு சேருவதில்லை. அது ஒருவகையான அரசியல் சாதிவாதம். எனவே அவர்களது ஆதரவாளர்கள் மத்தியில் கூட ஐதேயுடனான கூட்டுபற்றி அதிருப்தி நிலவியது. சரத் பொன்சேகா அலை அதனை ஓரளவுக்கு ஒட்டுபோட்டு சரிசெய்தாலும் ஜேவிபியால் அதிகளவு வாக்காளர்களை அறுவடை செய்யமுடியவில்லை. மறுபுறத்தில் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க நிறுத்தியதால் ஜதேகட்சிக்குள்ளிருந்த உட்பிளவு மேலும் விரிவடைந்தது. அதன் பல அமைப்பாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடவேயில்லை. சுருங்கச் சொன்னால் தனிநபராக சரத் பொன்வேகாவுக்கு ஏற்பட்டிருந்த மக்கள் அலையை வாக்காக அறுவடைசெய்வதற்கு அமைப்பு பலம் இருக்கவில்லை.

தனக்கென ஒரு வலுவான அமைப்பு இல்லாமல் பிற அமைப்புகளை நம்பி இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது நிருபிக்கப்பட்டது. சரத் பொன்சேகாவின் தோல்விக்கு இரண்டு காரணங்களைத்தான் பிரதானமாகக் கூறமுடியும்: ஒன்று அரசஅதிகாரம் கையிலில்லாமை. மற்றது அவரது தேர்தல் அமைப்பு நிர்வாக பணிகள் அவரது கட்டுப்பாட்டிலில்லாமை.

எனது கவலை சரத் பொன்சேகா தோற்றுவிட்டரே என்பதல்ல. என்னைப் பொருத்தளவில் இருவருமே தொலைநோக்கற்ற இனவாதிகள். இருவருமே சர்வாதிகாரிகள். ஆனால் எனது கவலையெல்லாம் இந்த நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதிமுறைதான். இதனை மாற்றாத வரைக்கும் இலங்கையில்  இனியொரு மாற்றத்தை பாராளுமன்றத்தில் மாத்திரமல்ல நாட்டின் அரசியலிலும் காணமுடியாது.

பெரும்பாலான தமிழ்பேசும் மக்கள் இத்தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்தனர். ஆகவே நான் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றதையிட்டு ஒருவிதத்தில் மகிழச்சியடைகிறேன். எமது தலைவர்களுக்கு இன்னும் ஐதேகட்சியின் மீதுள்ள மாயை போகவில்லை. சிங்கள மக்களை இராட்சகர்களாகக் காட்டி வாக்கு வேட்டையாடிக்கொண்டு ஐதே கட்சியைச் சேர்ந்த சிங்களத்தலைவர்களை இரட்சகர்களாக சித்தரிக்கும் இவர்களது திருவிளையாடல் மீண்டும் தொடங்கியிருக்கிறது. இவர்களை உதாசீனப்படுத்திவிட்டு பலவீனப்பட்டிருக்கும் எமது அரசியல் பலத்தை மீண்டும் கட்டியெழுப்புவது எப்படி? நாட்டின் பொதுவான நீரோட்டத்தில் மீண்டும் ஜனநாயகம் தழைக்கச் செய்வது எவ்வாறு? அதற்காக சிங்களமக்கள் மத்தியில் ஒரு வலுவான ஜனநாயக அமைப்பு உருவாவதற்கு உறுதுணையாக நின்றுகொண்டு எம்மக்களை ஜக்கியப்படுத்தி எமது உரிமையை வென்றெடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டிய நேரமிது.

22 thoughts on “இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் பற்றிய எனது கணிப்பீடு : பி.ஏ.காதர்”

 1. இலங்கை தேர்தல் முறை தொடர்பாக வெளியான முதல் ஆய்வுக்கட்டுரை இது. பல பேர் எழுதியிருக்கிறார்கள். இவ்வளவு எளிதாக, பந்தா எதுவும் இல்லாமல், நுண்ணிய புள்ளி விபரங்களோடு ஒரு அழகான சிறு கதைபோல சொல்லப்படும் இதனை ஈழப் பிரச்சனை பற்றிப் பேசும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டும். காதர் அவர்களுக்கு மிக்க நன்றி!

 2. நன்றாக அலசிஆராய்ந்து எழுதிய பதிவுதான்
  ஆனால் 1 வாக்கு சாவடிக்கு 100 கள்ள வோட்டு
  என்றால் ஓவரு தொகுதிக்கும் இவளவு வோட்டு என்று
  இருக்குமே அதை எப்படி கணக்கில் எடுத்துகொள்வது
  இத்தேர்தலில் கள்ள வோட்டு போடவேல்லை என்பது
  மறுப்பதற்கு இல்லை ஆனால் இருபது லட்சம்
  கள்ள வோட்டில் மகிந்த வெற்றி பொற்றார் என்பது
  கொஞ்சம் ஓவர் சிங்கள மக்கள் மகிந்தவிற்கு வாக்களித்து
  வெற்றி பெற வைத்தார்கள் என்பது தான் ஓரளவிற்கு உண்மை
  அத்துடன் சரத் கூட்டணி மேத்துலகின் அடிவருடி
  பிரசாரம் சிங்கள மக்கள் மாத்தில் எடுபடாமல் போனதும்
  காரணமாக கொள்ளலாம்

 3. லசந்த விக்கிரதுங்க, சண்டே லீடரின் ஆசிரியர் மகிந்தவை பேர்சி என்று தான் அழைப்பாராமே? இருவரும் நண்பர்கள் அவரையே போட்டுத் தள்ளிய படுபாதகன் இந்த மகிந்த என்ற கிரிமினல்.

 4. நூற்றுக்கு நூறு விகிதம் செம அலசல்!அன்றிலிருந்து இன்று வரை இலங்கை அரசியலில் நடந்த சம்பவங்களையெல்லாம்,அக்கு வேறு ,ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்திருக்கிறார் அய்யா காதர் அவர்கள்! தனது ஆசனத்தை விட்டுக் கொடுத்து,பார்வையாளர் வரிசையில் அமர்ந்து காதர் அய்யாவின் கருத்துக்களை செவி மடுத்த ஆறுமுகம் தொண்டமான்,எவ்வாறு தடம் மாறினார் என்பது தான் ஆச்சரியம்!ஆனாலும் ஒரு ஆறுதல்,மகிந்தர் சந்திரிகாவின் வெற்றி விகிதத்தை முறியடிக்கவில்லை!சாதனையாளர்,சந்திரிகா தான்!!எவ்வளவு குழறுபடிகளைச் செய்தும் முடியவில்லையே?இத்தனைக்கும் எதுவித அதிகார துஷ்பிரயோகங்களும் செய்யாமலே படைத்த சாதனை!!!!!!

 5. அனுரா பண்டாரனாயக்க அவரது வாழ்க்கைப் போக்கால் அரசியலில் தமக்கையயே பகைத்துக் கொண்டார்.மகிந்தா தன் தந்தையின் கனவைநிரைவேற்றீநிரைவேற்றூ சனாபதியாக வர முடிந்திருக்கிறது.

 6. நன்றி திரு.காதர் அவர்களே.

 7. It looks like Cader Master is disappointed with rhe facts minorites espesically up country tamils voted for SF, the truth is we voted for him because of UNP, If not for the UNP s willingness to settle stateless issue, we would still be stateles, unable to vote,
  think about people in the IDP camps and North who were prevented from execising their voting, The truth is minorities will vote for any leader irrespective of their party provided that leader is not a racist, remember we voted for Chandrika, she won Nuwara Eliya district, this time around Mahinda won entire south barring Nuwara Eliya, I am told he is angry and disappointed with Indian tamils, he would react in troublesome way possibly dividing and annexing N eliya district with Kandy, and Badulla, he lost in Passara in the Badulla district, where around 35% voters are tamils, they too and people in Kandy will have be ready to face the angry.

  I also wish to remind that Kobbekaduwa won the jaffna district while loosing entire south

 8. மிக சிறந்த தேடல் நன்றி பகிர்வுக்கு இப்பதிவை எனது வலிப்பூவில் பிரசூரிக்க அனுமதி கேக்கிறேன் 

  1. தாராளமாக. உங்கள் ஆர்வத்திற்கு நன்றி.

 9. Well written and emphasizes the need to think out of the box. However, candidates like Dr. Wickramabahu must have beeen supported.

 10. நன்றி, பொதுவான இலங்கை கண்ணோட்டத்தில் எமது அரசியலை சிந்திக்க வேண்டிய சூழல் உள்ளதை உணர்த்தியமைக்கு, உணருங்கள் உற்வுகளே

 11. நண்பர்களே!
  எங்களுடைய விருப்பவெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. நடுநிலையான ஆய்வுகள். இலங்கையில் மூன்றாவது பெரிய கட்சி ஜேவிபி. சந்திரிக தேரத்லில் நின்றபோது ஜேவிபி எங்கே நின்றது என்றதும் மகிந்தா வென்றபோது ஜேpபி எங்கே நின்றது என்பதும் முக்கியம். இதே போல தமிழகூட்டமைப்பும் எங்கே நின்றது என்பதும் முக்கியம்.

 12. “இரு தடவைகள் ஆட்சியிலிருந்த சந்திரிகா மீண்டும் போட்டிபோடமுடியாத நிலையில் அப்போது நிலவிய புலிகளின் அச்சுறுத்தலின் மத்தியில் வேறு எவரும் போட்டியிட துணியாத வேளையில் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளரானார்.”
  இது உண்மையல்ல.

  இரண்டு அரசியற் கட்சிகளிலுமே தலைமைத் தகுதி வாய்ந்த யாருமே இல்லாத அவலம் அன்று நிலவியது. இன்றுந்தான்.
  அனுரவுக்குப் போட்டியிடும் ஆவல் இருந்தாலும் உடலநலக்குறைவு உட்படப் பல வேறு குறைபாடுகள் இருந்தன.
  சந்திரிகாவிற்கு ராஜபக்ஸவை ஜனாதிபதியாக்க விருப்பமிருக்கவில்லை. ஆனால் கட்சி ஏற்கக்கூடிய வேறு தெரிவும் இருக்கவில்லை.

  ராஜபக்ஸவின் ‘சாதனை’ கட்சி அரசியலை ஆழக் குழிதோண்டிப் புதைத்தது தான். அதன் ஒரு அடையாளமே இன்றைய யூ.என்.பி. – ஜே.வி.பி. கூட்டு.
  தனக்கு முந்திய ஒவ்வொரு ஜனாதிபதியும் கையாண்ட ஒவ்வொரு அதிகாரத் துஷ்பிரயோகத்தையும் முன்னோரைவிட அதிகளவில் செய்தவர் ராஜபக்ஸ.
  அவருக்குக கீழ் நடந்த மனிதவுரிமை மீறல்களும் ஊடகச் சுதந்திரச் சிதைவும யூ.என்.பியின் மிக மோசமான ஆண்டுகளை விடச் சில வழிகளில் கொடியவை.
  சமூகத்தில் குற்றச் செயல் அதிகரிப்பும் அடக்குமுறையும் குறுக்குவழியில் குடும்ப அதிகாரமும் ஊழலும் புதிய உச்சங்கள்.

  ஆனால் ராணுவத் தளபதி அவருக்குச் சரியான மாற்றல்ல.
  அவர் வராததையிட்டு யாரும் வருந்த நியாயமும் இல்லை.
  ஏனெனில் அவரிடம் எந்த மாற்றுக் கொள்கையும் இருக்கவுமில்லை அவரை ஆதரித்தோரிடமும் இருக்கவில்லை.

  தமிழ் மக்கள் தெளிவாகவே காட்டியுள்ள புறக்கணிப்பு முக்கியமானது. அதை தளபதிக்கு ஆதரவு என்று விளங்கிக் கொள்வது தவறு.

  இலங்கை எதிர்நோக்குவது கும்பல் ஆட்சி. அது கொடிய அடக்குமுறை ஆட்சியாகவே இருக்க்கும்.
  அதிலிருந்து நாட்டை மீட்கத் தேர்தல் அரசியல் உதவுமா?
  ஐயமே.

  1. உங்களது கருத்துகளை நான் மதிக்கிறேன். ஆனால் அன்று அனுர போட்டியிடாததற்கு அவரது உடல் நலக்குறைவு அல்ல காரணம். அன்றிருந்த அச்சமான நிலைமையே காரணம் ‘வீட்டை விட்டே வெளிய வர பயப்படும் எந்த வேட்பாளராலும் தலைமை கொடுக்க இயலாது.” என பாராளுமனறத்திற்குள்ளும் சு.க. மாநாட்டிலும் அப்போது மகிந்தவுக்கு ஆதரவாக எழுந்த குரல்களை கருத்திற் கொண்டால் இந்த உண்மை புரியும்.
   உங்களின் ஏனைய கருத்துகள் பலவற்றோடு நான் இணக்கம் காண்கிறேன். நன்றி.

  2. காரணம் உடல் நலக்குறைவு மட்டுமென நான் கூறவில்லை. பல நடத்தைக் கோளாறுகளும் காரணமாயிருந்தன.
   2005இல் தென்னிலங்கையில் சிங்கள அரசியல்வாதி யாரும் வெளியே நடமாட முடியாதளவுக்கு மோசமான நிலைமை இருந்ததாகவும் கூற முடியாது. அப்போது விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் எந்தச் சிங்கள அரசியல்வாதியையும் (படையினரைக் கூட) இலக்கு வைக்கவில்லை.
   ராஜபக்சவை 2006 வரை தவிர்க்கலாம் என்பதே சந்திரிகாவின் தவறாகிப் போன கணக்கு. என்றுமே ரத்னசிரி தேசியச் செல்வாக்குள்ள தலைவராக இருக்கவில்லை. ராஜபக்சவுக்குக் கட்சிக்குள் 1991 முதலே செல்வாக்கு இருந்தது.
   சந்திரிகா அவரைத் தவிர்க்கச் செய்த முயற்சிகட்கு ராஜபக்ச அற்பத்தனமான முறையில் பழிவாங்கியது பற்றி இங்கு எல்லாருமே அறிவர்.

 13. சிவா மிக தெளீவான பதிவு வித்தியாசமான சிந்தனை.தெளீவதற்குநிரையநேரம் இருக்கிற்து.

 14. முதலாவது ஜனாதிபதி தேர்தல் 20.10.1982
  “அத்துடன் சுக சார்பில் போட்டியிட்ட கொப்பேகடுவைக்கு தமிழ் வாக்குகள் கிடைக்கவில்லை.” — இதுவும் உண்மையல்ல.
  ஏறத்தாழ முற்றாகத் தமிழரைக் கொண்ட யாழ் மாவட்டத்தில்
  யு.என்.பி. 44780 சு.க. 77300 ஜே.வி.பி. 3098 த. கா. 87263
  இது என்ன கூறுகிறது?

  இரண்டாவது ஜனாதிபதி தேர்தல் 19.12.1988
  யாழ் மாவட்டத்தில் யு.என்.பி. 33650 சு.க. 44197 சி.ல.ம.க. 42198
  அங்கும் வன்னியிலும் புலிகளின் மிரட்டலாலும் மாத்தற + அம்பாந்தோட்டை + மாத்தள + மொனராகல மாவட்டங்களில் ஜே.வி.பி. மிரட்டலாலும் வாக்களிப்பு மிகக் குறைவாகவே இருந்தது.
  சிரிமாவுக்கு அதரவு தரக்கூடியவர்களே ஜே.வி.பி. மிரட்டலால் பின்னின்றிருக்க முடியும். பிரேமதாசஆதரவாளர்கட்கு அரச இயந்திர ஆதரவு இருந்தது.

  நான்காவது ஜனாதிபதி தேர்தல் 21.12.1999
  “சந்திரிகாவை இத் தேர்தலில் வெல்ல வைத்தது அவரது அரசபலமேயாகும்.”
  அது மட்டுமல்ல. விடுதலைப் புலிகளின் கொலை முயற்சியில் கண்ணை இழந்ததும் கணிசமாக உதவியது.

  ஐந்தாவது ஜனாதிபதி தேர்தல் 15.11. 2005
  “2005 தேர்தலின்போது ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்று தீர்மானித்து புலிகள் வடக்கில் தமிழ் வாக்குகள் விழாமல் செய்ததால்” ராஜபக்ஸ வென்றார்.
  அதில் லஞ்சமும் சம்பந்தப்பட்டது குறிப்பிட வேண்டியது.
  விடுதலைப் புலிகள் பகிஷ்கரிக்க வேண்டும் என்று செல்லப் பல வாரங்கள் முன்பே பகிஷ்கரிப்புப் பற்றிப் புதிய ஜனநாயகக் கட்சி பேசியது. புலிகளின் இறுதிநேர மனமாற்றம் அவர்களது தலைமையின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குட்படுத்தியது.

  ஆறாவது ஜனாதிபதி தேர்தல்: 26.01.2010
  “ஆனால் சரத் பொன்சேகா தேர்தல் களத்தில் இறங்கிய போது நிலைமை மகிந்த ராஜபக்ச 45 % பொன்சேகா 55 % என மாறியது”.
  ஆதாரம் என்ன?
  எந்த நிலையிலும் மாநகரங்கட்கு வெளியே தளபதியார் முன்னுக்கு நிற்கவில்லை என்றே காணப்பட்டது.

 15. //It looks like Cader Master is disappointed with rhe facts minorites espesically up country tamils voted for SF, the truth is we voted for him because of UNP, If not for the UNP s willingness to settle stateless issue, we would still be stateles, unable to vote,
  think about people in the IDP camps and North who were prevented from execising their voting, The truth is minorities will vote for any leader irrespective of their party provided that leader is not a racist, remember we voted for Chandrika, she won Nuwara Eliya district, this time around Mahinda won entire south barring Nuwara Eliya, I am told he is angry and disappointed with Indian tamils, he would react in troublesome way possibly dividing and annexing N eliya district with Kandy, and Badulla, he lost in Passara in the Badulla district, where around 35% voters are tamils, they too and people in Kandy will have be ready to face the angry.

  I also wish to remind that Kobbekaduwa won the jaffna district while loosing entire south//

  AGREE ON WHAT ESTATE BOY SAID…100% TRUE…

  THANKS FOR THIS ANALYTICAL POST….ITS VERY VERY UEFUL….ALL THE BEST

  PRIYAMUDAN D

 16. you guys put soap one and another instead dust off your own dirt.cant you think better ways than this.

 17. இங்கு விவாதத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் வார இறுதியில் பதில் வழங்குவதாகக் கட்டுரை ஆசிரியர் தெரிவிக்கிறார்.

 18. நல்ல அரசியல் ஆய்வு. எனது வலைப்பூவிலும் தங்கள் கட்டுரையை மீளப்பதிவு செய்துள்ளேன்.

 19. மிகவும் பெறுமதியான ஆய்வு. எவருக்கும் எளிதில் விளங்கும்படியாக எழுதிச்செல்லும் ஆழம் இக்கருத்துக்கள் பரவலாகச் சென்றடைய உதவக்கூடியது. நன்றி.

Comments are closed.