சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான உதவிகளைத் தொடர்ந்தும் ஐ.நா. வழங்கும்:ராதிகா குமாரசுவாமி.

16.08.2008.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல்கள் தொடர்பான விவகாரங்களின் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசாமி, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருப்பதுடன், சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான உதவிகளைத் தொடர்ந்தும் ஐ.நா. வழங்கும் என உறுதிமொழி வழங்கியுள்ளார்.

சிறுவர் போராளிகள் மற்றும் சிறுவர் போராளிகளை மீண்டும் சமூகத்துடன் இணைக்கும் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் உறுதியளிக்கும் என்பதை வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துக் கூறியதாக ராதிகா குமாரசாமி ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

“இந்த விடயத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல நாங்கள் இணங்கியுள்ளோம். இலங்கை முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் தொடர்ந்தும் உதவிகளை வழங்குவோம்” என்றார் அவர்.

சிறுவர் போராளிகள் விடயம் தொடர்பாக ஐ.நா.விசேட பிரதிநிதி ராதிகா குமாரசாமியுடன் விரிவாகக் கலந்துரையாடியதாகத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம, இலங்கையில் சிறுவர்கள் படையில் இணைத்துக்கொள்ளப்படுவது முற்றாக நீக்கப்பட்டிருப்பதுடன், சிறுவர் போராளிகளை மீண்டும் சமூகத்தில் இணைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்கனவே முன்னெடுத்திருப்பதாகக் கூறினார்.

சிறுவர்களைப் படையில் இணைத்தல் உள்ளிட்ட சிறுவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடந்த ஜுலை மாதம் ராதிகா குமாரசாமி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இலங்கையில் விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய அமைப்புக்கள் சிறுவர்களை படையில் இணைத்தமை தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தன. இலங்கையில் விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் துணை இராணுவக் குழுக்கள் உட்பட உலகின் பல்வேறு அமைப்புக்கள் சிறுவர்களைப் படையில் இணைத்துக்கொள்வதாக ஐ.நாவுக்கான அமெரிக்காவின் பிரதிநிதி சல்மே கலில்டாஸ் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல்கள் தொடர்பான விசேட பிரதிநிதி ராதிகா குமாரசாமி இலங்கை வந்துள்ளமை தொடர்பாகத் தாம் அறிந்துள்ளபோதும், அவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அல்லது முதலமைச்சர் சந்திரகாந்தனைச் சந்திப்பாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லையெனவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பேச்சாளர் ஆசாத் மௌலானா கொழும்பு ஊடகமொன்றிடம் கூறியிருந்தார்.