ரெவாரி ஸ்வீட்டும்- அல்போன்சா மாம்பளமும் பாக்- இந்திய உறவில் புதிய திருப்பம் : கீதாஞ்சலி.

சுதந்திரத்திற்கு முன்னரே ஏற்பட்ட பிளவால் உருவானது பாகிஸ்தான் .பொறுப்பற்ற இந்து முஸ்லீம் தலைவர்களின் சுய நல அரசியலுக்கும் காங்கிரஸ் கட்சியின் துரோகத்தும் பலியாகி வீழ்ந்த பல லட்சம் இஸ்லாமிய இந்து மக்களின் ரத்தத்திலிருந்து உருவானதே பாகிஸ்தான். பொருளாதார ரீதியிலும் பின் தங்கிய மூன்றாம் உலக நாடான பாகிஸ்தானை இந்தியா எப்போதும் நிம்மதியாக இருக்கவிட்டதில்லை. பாகிஸ்தானும் இந்தியாவில் தன் கொலைக்கரங்களை காட்டத் தயங்கியதில்லை.

காஷ்மீர் மக்களின் சுயாட்சியை பிடுங்கி தங்களின் சொந்த அரசியல் நலனுக்காக கபடியாடுவதில் பாகிஸ்தானும், இந்தியாவும் ஒருவருக் கொருவர் சளைத்தவர்களல்ல, இந்த இரு நாடுகளுக்கிடையில் பகையுணர்வுகள் மறைந்து புதிய நட்புகள் உருவாக வேண்டும் என்று நடுநிலையாளர்கள் ஆசைப்பட்டாலும் அமெரிக்காவோ அதன் அடிவருடி நாடாக செயல்படும் இந்தியாவோ, இந்துப் பாசிஸ்டுகளோ அதை ஒரு போதும் விரும்பமாட்டார்கள். முஸ்லீம்களை இந்துக்களின் எதிரிகளாக கட்டமைத்து அதை வைத்தே அரசியல் லாபம் தேடும் இந்து மதவெறியர்கள் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் பாகிஸ்தானையே நிரந்தர எதிரி நாடாக கட்டமைத்து அதில் பதவி லாபம் அடைந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர். பிரிவினையின் போது செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய பணத்தொகையைக் கூட இந்தியா முழுமையாகக் கொடுக்கவில்லை.

இந்த பதவி வெறியர்கள் ஆடிய ஆட்டத்தில் பிளவு பட்டுப் போன இந்த இரண்டு சாமான்ய தேசத்து மக்களின் உணர்வுகளும் ஒன்றாகவே உள்ளன. இந்நிலையில்தான் பாகிஸ்தானுடம் பேச வேண்டிய எத்தனையோ பிரச்சனைகள் இருக்க பாகிஸ்தான் பிரதமர் கீலானியும் இந்தியப் பிரதமர் மன் மோகனும் இரண்டு அதி முக்கியமான ஒரு விஷயம் குறித்துப் பேசியுள்ளனர்.

ரெவாரி ஸ்வீட், அல்போன்சா மாம்பளம்.


கோமாளிகளின் கையில் ஆட்சி சென்றால் என்ன நடக்கும் என்பதை இந்தியாவின் மத்திய ஆட்சியிலும் பல மாநிலங்களிலும் பார்த்துக்கொண்டிருக்கிறோம் . இரண்டாயிரம் கோடிக்கு தனக்குத் தானே சிலை வைத்துக் கொள்கிறவர்கள் ஒரு பக்கம் என்றால் தனக்குத் தானே விருது கொடுத்துக் கொள்வதும், தன்னைத் தானே சிலாகித்துக் கொள்கிறவர்களும் கூட மாநில முதல்வர்களாக இருக்கிறார்கள். நேற்று கூட புதிய சட்டமன்றக் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் வீல்சேரில் சென்று அமர்ந்தபடியே பழைய சட்டமன்றக்கட்டிடத்தைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி. இப்படியான கோமாளிக் கூத்துகள்தான் இந்திய அரசியல் அரங்கில் நடந்தேரி வருகிறது. அந்தவகையிலான கோமாளிக்கூத்து ஒன்றை இந்திய, பாகிஸ்தான் பிரதமர்கள் அரங்கேற்றியிருக்கிறார்கள். கடந்த மாதம் பூட்டான் தலைநகர் திம்புவில் சார்க் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் இந்தியப் பிரதமரும் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸாக் கிலானியும் சந்தித்துப் பேசிக் கொண்டனர் அப்போது அவர்கள் இருவரும் தங்களுக்கு பிடித்த உணவு குறித்து மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்களாம். மன்மோகன் சிங், பாகிஸ்தானில் உள்ள ரெவாரி ஸ்வீட் தனக்கு அதிகம் பிடிக்கும் என்று கிலானியிடம் கூறினாராம். கிலானியோ, இந்தியாவில் பிரபலமான அல்போன்சா மாம்பழத்தை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவேன் என்றாராம். பாகிஸ்தானுக்கு போனவுடன் ரெவாரியை உங்களுக்கு மறக்காமல் அனுப்பி வைக்கிறேன் என்றும் மன்மோகன் சிங்கிடம் கிலானி உறுதி சொன்னாராம். பதிலுக்கு மன்மோகன் சிங்கோ, உங்களுக்கு பிடித்த அல்போன்சா மாம்பழத்தை அனுப்பி வைக்கிறேன் என்று கிலானியிடம் கூறினாராம். இருதலைவர்களும் செய்து கொண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரெவாரி ஸ்வீட்டையும், அல்போன்சா மாமளத்தையும் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்களாம்.

ஸ்வீட் கிடைக்கவில்லை? பரபரப்பு

இந்நிலையில் கிலானியும் ரெவாரி ஸ்வீட்டை மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைத்து விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் மன்மோகன் சிங் குடும்பத்தாரோ, கிலானி அனுப்பிய ஸ்வீட் தங்களை இன்னும் வந்தடையவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார்களாம். இதனால் காங்கிரஸ் கட்சியின் தலைமை கடும் அதிர்ச்சியடைந்துள்ளது. டில்லியில் கடும் அரசியல் பதட்டம் காணப்படுகிறதாம். இந்த மாம்பளம், ரெவாரி ஸ்வீட் மூலம் புதிய திருப்பமாக உருவாகியுள்ள பாகிஸ்தான் இந்திய உறவு குறித்து நோக்கும் அரசியல் நோக்கர்களோ, இந்திய-பாகிஸ்தான் தலைவர்களுக்கு இடையே இப்படி மாம்பழம் பரிமாறிக்கொள்ளும் பழக்கம் புதிதல்ல என்கின்றனர். இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் ஜியா-உல்- ஹக்குக்கு மாம்பழம் அனுப்பி வைத்தார். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மாம்பழம் அனுப்பி மகிழ்ச்சிப்படுத்தினார் என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆக மொத்தம் சுதந்திரத்திற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த இந்திய, பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் எல்ல்லோருமே இப்படி நாவுக்கு ருசியான மாம்பளம், ஸ்வீட் வாங்குவதிலேயே குறியாக இருந்திருக்கின்றனர். ஆனால் அன்றாடம் பாகிஸ்தானில் நடைபெறும் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான அப்பாவி பாகிஸ்தானியர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம் பிரச்சனைகள் உள்ளன. பழங்குடி மக்கள் மீதான போர் ஒரு பக்கம் என்றால் நாளுக்கு நாள் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் காவிரி முல்லை அணையில் கேரள, கர்நாடக அரசுகள் தமிழ்நாட்டின் தண்ணீர் உரிமையை மறுத்து வருகின்றன…. ஆனால் கிலானியும், மன்மோகனும் பரஸ்பரம் மிட்டாயும், மாம்பழமும் பரிமாறிக் கொண்டது போல கருணாநிதி கர்நாடகத்தில் ஆளும் தன் தம்பி எடியூரப்பாவுக்கு மாயவரம் முருக்கையும் , கேரள முதல்வர் அச்சுதானந்தனுக்கு திருநெல்வேலி அல்வா ஒன்றையும் அனுப்பினால்… பதிலுக்கு அவர்கள் என்ன அனுப்புவார்கள்…. நமது முதல்வருக்கு?

7 thoughts on “ரெவாரி ஸ்வீட்டும்- அல்போன்சா மாம்பளமும் பாக்- இந்திய உறவில் புதிய திருப்பம் : கீதாஞ்சலி.”

  1. This article is mapping the asian future in a its own and amazing way. Great!

  2. கோமாளிகளின் ஆட்சியில் மாம்பளமும் , ஸ்வீட்டும்தான் இவர்களுக்குக் கேட்கிறது. இது போன்ற ஒரு கோமாளிதான் முன்னாள் ஜனாதிபதி அப்துல்காலாமும்,,, இப்போது முதல்வராக இருக்கும் கருணாநிதியும்……..ராம்தாஸ் கூட…

  3. இந்திய ஆட்சியாளர்களின் போலியான முகத்தை நகைச்சுவையாக அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை

  4. எள்விதைத்தால் நெல்முளைக்காது. கோமாளிகள் இல்லையென்றால் கோமாளி ஆட்சியாளர் தோன்றமுடியாது. இன்றைய காலத்தில் ஆட்சியாளர்கள் வழித்தோன்றல்மூலம் ஆட்சியை கைப்பற்ற இயலாது. மக்களே அவர்களை தெரிவுசெய்ய வேண்டும். இக்கட்டுரை மல்லார்ந்து படுத்திருந்து வானத்தைநோக்கி துப்புவதற்குச் சமம். கோமாளி ஆட்சியாளர் தோன்றக் காரணமான ஒவ்வொரு குடிமகனும், மகளும் இதற்கு பதில்கூறவேண்டும்.

    1. இந்தியாவில் எந்த மாநிலத்தில் குடிமகனுக்கும், மகளுக்கும் வாக்களிக்க உண்மையான உரிமை இருக்கிரது? பணம், பதவிக்கு விலைபோகாமல் மக்கள் விழிப்படைந்து கோமாளிகளையும், பொறுக்கிகளையும்,கொலைகாரரையும் தூக்கி எறியும்வரை இந்தியா ஒரு குப்பைக் கூளம்தான்.

  5. இது எப்படி மால்லாக்கபடுத்து துப்புவது ஆகும்…….. இந்த கோமாளிகளின் போதையிலிருந்து மக்களை விழிபுணர்வாக்குவதுதான் கட்டுரையின் நோக்கம்.

  6. மக்களை விழிபுணர்வாக்குவதுதான் கட்டுரையின் நோக்கம். என்பதனை வெளிப்படுத்தி என் புரிந்துணர்வின் தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

    இந்தியாவின் சுதந்திரத்தை பிரிட்டிஸ்காரன் இரவில் வழங்கி மக்களை 63 வருடங்களாக தூங்க வைத்துள்ளான் இன்னமும் அவர்கள் எழவில்லையே என்ற ஆதங்கம் கட்டுரையையும் விமர்ச்சிக்க வைத்துவிட்டது.

Comments are closed.