ராணுவ ஆட்சி:காமன்வெல்த்தில் இருந்து பிஜி நீக்கம்!

 

பிஜி நாட்டு சர்வாதிகார அரசு தேர்தல் நடத்த முயற்சி மேற்கொள்ளாததை அடுத்து அந்நாட்டை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்குவதாக இங்கிலாந்து  அறிவித்துள்ளது.

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகளை உள்ளடக்கிய அமைப்பு காமன்வெல்த். இதில் பிஜி எனப்படும் குட்டி தீவு நாடும் ஒன்று.

கடந்த 2006ம் ஆண்டு பிஜியில் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அரசு கலைக்கப்பட்டு, ராணுவ ஆட்சி கொண்டு வரப்பட்டது. மேலும், ராணுவம்  வாரிக் பிராங்க் பெய்னிமராமா என்பவரை இடைக்கால பிரதமராக அறிவித்து, ஆட்சி செய்து வருகிறது.

அங்கு 2010ம் ஆண்டுக்குள் தேர்தல் நடக்க வேண்டும். அதற்கான தேதியை பிஜி ராணுவ அரசு விரைவில் அறிவிக்க வேண்டும் என காமன்வெல்த் அமைப்பு கூறியது. ஆனால், இதை இடைக்கால பிரதமர்  ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், அவர் சமீபத்தில் 2014ல் தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து பிஜியை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்குவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த அந்த அமைப்பின் பொது செயலாளர் கமலேஷ் சர்மா கூறுகையில்,

இது மிகவும் வருத்தமான ஒன்று தான். ஆனாலும் அங்கு ஜனநாயகத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றார்.

இதை தொடர்ந்து பிஜி தீவுக்கு காமன்வெல்த் அமைப்பு நாடுகள் செய்து வந்த அனைத்து தொழில்நுட்ப உதவிகளும் நிறுத்தப்பட்டது. மேலும், பிஜி தீவு அடுத்த ஆண்டு டெல்லியில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் இழந்துள்ளது.

காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கப்படும் இரண்டாவது நாடு பிஜி. முன்னதாக நைஜிரியா கடந்த 1995ம் ஆண்டு காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டது.