ராணுவத்தை அனுப்பும் முன்…சந்தனமுல்லை.

எங்களால் பள்ளிக்கோ, டியூஷன்களுக்கோச் செல்ல முடியவில்லை. தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன, ஆனால் பாடதிட்டங்கள் முடிக்கப்படாமலேயே இருக்கின்றன. மாணவர்களைப் பற்றி யாருமே நினைத்துப் பார்ப்பது இல்லை. எங்களுக்கு விதிக்கப்பட்ட இந்த சூழ்நிலையிலிருந்து வெளியே செல்லும் எங்களால் ளிச்சூழ்நிலைகளுக்குள் பொருந்த முடியவில்லை. மற்ற மாணவர்களோடு போட்டியிட முடிவதில்லை.கல்வி அமைச்சர் எங்களை வீட்டிலேயே கல்வி கற்குமாறு சொல்கிறார். எந்த வழிகாட்டுதலுமின்றி எங்களால் எவ்வாறு வீட்டிலேயே கல்வி கற்க இயலும்? ஒரு அறிவியல் மாணவனால் அறிவியல் சோதனைகளையும், செயல்பாட்டு வழிவகைகளையும் எவ்வாறு வீட்டிலேயே கற்றுக்கொள்ள முடியும்? இணையத்தின் வழியாகவும் கற்குமாறு அவர் சொல்லிவருகிறார். இணையத்தை உபயோகிப்பது/பயன்படுத்துவது எங்களைப் போன்ற இடத்திலிருப்பவர்களுக்கு இன்னும் சாத்தியமாகவில்லையே! இது போன்ற முட்டாள்தனமான யோசனைகளை கூறுவதை கைவிடுங்கள்!”‍ -12 ஆம் வகுப்பு மாணவன, காஷ்மீரிலிருந்து ஒட்டுமொத்த இந்தியாவே ஆசிரியர் தினம் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், காஷ்மீர் மாணவர்களின் ஒட்டுமொத்த மனக்குமுறல் இது. ‘குழந்தை தொழிலாளிகளை ஒழிப்போம்’ என்றும் ‘அனைவருக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமை’ என்றும் முழக்கமிட்டு வரும் நமது அரசு காஷ்மீர் மாணவர்களை கடந்த இருமாதங்களுக்கு மேலாக இப்படித்தான் வீட்டிலேயே முடக்கி வைத்துள்ளது.கூடுதல் ராணுவத்தையும், அதிகாரிகளையும் காஷ்மீருக்கு அனுப்பும் நமது அரசுக்கு அங்கிருக்கும் மாணவர்களின் கல்வி பற்றியோ அவர்களது எதிர்காலத்தை பற்றியோ அல்லது மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவது குறித்தோ என்ன அக்கறை இருக்கிறது?

காஷ்மீர் என்றதுமே எங்கும் பனி படர்ந்த பள்ளத்தாக்குகள், ஆப்பிள் மரங்கள், வண்ண உடைகளில் அழகு குழந்தைகள், படகுகள் பயணிக்கும் ஏரிகள் , சிலுசிலு காற்று என்று கிட்டதட்ட பூலோக சொர்க்கம் என்றுதானே தோன்றுகிறது. அது நமது நாயக நாயகிகள் டூயட் ஆடிப் பாடும் கனவு காஷ்மீர். இந்நிலையைத் தாண்டி அது வந்து நெடுங்காலமாகிறது – கிட்டதட்ட இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து!காஷ்மீரிகளாக இருப்பதைத் தவிர வேறு எந்த தவறும் செய்திராத அம்மாணவர்களிம் நிலை இன்று கேள்விக்குறியாகியுள்ளது. எதிர்காலம் என்ற ஒன்றே அவர்களுக்கு இல்லாதது போலிருக்கிறது. “தீவிரவாதிகள்” என்று முத்திரைக் குத்தப்பட்டு வலம் வர வேண்டியிருக்கிறது. பி.காம் முதலாண்டு படிக்கும் அமான், வாழ்க்கையே சுக்கு நூறாகி இருப்பதாக மறுகுகிறார். “தேர்வுகள் எப்போது நடத்தப்படுமென்று எந்த உத்திரவாதமும் இல்லை. மற்ற கல்லூரிகளில் சேர்வதற்கோ வழிவகைகள் இல்லை. இப்படி இருந்தால் மூன்று ஆண்டுகளில் முடிக்க வேண்டிய பாடத்தை ஆறு ஆண்டுகளில் முடிக்க வேண்டியிருக்கும். ” – வாழ்க்கையில், நாங்கள் எங்கள் கேரியரில் வெற்றி பெற வேண்டாமா என்ற கேள்விக்கு யாரிடம் பதிலிருக்கிறது?நிச்சயமற்ற வாழ்க்கை நிலையும், எந்நேரமும் ரோந்து வரும் ராணுவமும், அதன் அடக்குமுறையும் இளைஞர்களின் வாழ்க்கையை முற்றிலுமாக புரட்டிப் போட்டிருக்கின்றன. குடிப்பழக்கத்திற்கு ஆளாக்கியும், மன உளைச்சலுக்கும் குடும்பங்களின் நிம்மதியையும் குலைத்தும் போட்டிருக்கின்றன. மூன்றில் ஒரு காஷ்மீர் மாணவர் நரம்பு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். கடும் மன உளைச்சல் மற்றும் அடக்குமுறைக்கு ஆளாகும் மாணவர்கள் பரீட்சை நேர டென்சன்களை தவிக்க தூக்க மாத்திரையின் உதவியை நாடுகின்றனர். தமது குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றிய கவலையே இச்சமூகத்தினரிடையே மேலோங்கி இருக்கிறது. “மூடப்பட்ட பள்ளிகளாலும், அரசாங்கத்தாலும் எங்களது குழந்தைகள் இன்று கல்வி கற்பதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கிறார்கள்; பள்ளிகளிலிருந்து விடுபட்டு போயிருக்கிறார்கள்” என்கிறார் பெற்றோர் ஒருவர்.

“துப்பாக்கி எடுத்தவர்கள் அனைவரையும் “தீவிரவாதிகள்” என்று சொல்கிறார்கள். பாகிஸ்தான் உதவுவதாகவும் கூறுகிறார்கள். இளைய சமுதாயத்திற்கு நல்ல கல்வி, நல்ல அமைதியான சுதந்திரமான சூழல், ஆரோக்கியம், வேலை, இவற்றை கொடுத்துவிட்டால் அவர்கள் ஏன் துப்பாக்கி ஏந்தப் போகிறார்கள்” என்ற சபியாவின் கேள்வியில் என்ன நியாயம் இல்லை?

“எங்களை நிம்மதியாக வாழவிடுங்கள். எங்களுக்குத் தேவை அமைதி. எங்களுக்குத் தேவை சுதந்திரம். எங்கள் இடத்தை விட்டு வெளிவேறுங்கள்” என்று கர்ஜிக்கும் மஜித்‍ என்ற கல்லூரி மாணவர் கேட்பது இந்திய அரசின் மந்தமான காதுகளை என்று எட்டப் போகிறது?இந்த நிலை காஷ்மீரில் மட்டுமில்லை, தனி மாநிலமும் சுய அரசியல் நிர்ணயம் கோரும் எல்லா மக்களையும் இந்தியஅரசு இப்படித்தானே அடக்கி வைத்துள்ளது? தனி ஈழம் கேட்ட காரணத்துக்காக சொந்த நாட்டிலேயே அகதிகளாக முள்வேலியில் முடங்கிக் கிடக்கிறார்கள் தமிழ் மக்கள். காட்டில் வாழும் உரிமை கேட்கும் பழங்குடியினர், தனிநாடு கேட்கும் நாகாலாந்தின் நாகா அமைப்பினர்; அஸ்ஸாமியர்; ஜம்மு‍ காஷ்மீர் மக்கள், அவர்தம் இளைய சமுதாயம் அனைவரையும் இரும்புக் கரம் கொண்டு இந்திய அரசு ஒடுக்கி வைத்துவிட்டு, கல்வியை குழந்தைகளின் அடிப்படை உரிமையாக மாற்றியிருக்கிறோம் என்று மார்தட்டிக் கொளவதில் என்ன பிரயோசனம் அல்லது ஆசிரியர் தினத்தை கொண்டாடுவதில்தான் என்ன பெருமை?கட்டுக்கோப்புக்கும், ஒழுக்கத்துக்கு பெயர் போன இந்திய‌ ராணுவம் அங்கு செய்து வரும் கொடுமைகளை,இன்னல்களை வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது. யார் மீது சந்தேகம் வந்தாலும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்ற சட்டம் 90களில் வந்தபின் நிலைமை மோசமானதுதான் மிச்சம். அப்படி கைது செய்தவர்களை இரண்டு ஆண்டுகள் வரை நீதிமன்றத்தின் தலையிடல் இல்லாமலே வைத்திருக்கலாம் எனபது இன்னும் கொடுமை. இப்படி பெற்றோரை, உறவினர்களை இழந்து பள்ளிப் படிப்பை கைவிட்டு குடும்பத்தின் பாரம் சுமந்தவர்களின் வாழ்க்கைக்கும், படிப்புக்கும் பொறுப்பேற்பவர்கள் யார்?

வசதி இருப்பவர்கள் தங்களது பிள்ளைகளை புனாவுக்கு, டெல்லிக்கும் அனுப்புகிறார்கள். சிலர் அண்டை நாடுகளுக்கு அனுப்புகிறார்கள். பாதுகாப்பு கருதி அவர்களது பெயர்கள் கூட வெளியே தெரிவதில்லை. அவதிக்குள்ளாவது ஏழை எளிய மக்கள்தான். பணமும் அதிகாரமும் படைத்தவர்களின் பிள்ளைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆரம்ப மற்றும் உயர்நிலை பள்ளிக்குச் செல்ல வேண்டிய பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் இன்று வீட்டில் முடக்கப்பட்டிருக்கிறார்கள். தினந்தோறும் வன்முறையையும் அடக்குமுறையும் கண்ணெதிரே பார்க்கிறார்கள். கண்ணீர் புகை குண்டுகளிலும், கல்லெறிதலிலும் பங்கேற்கிறார்கள். எந்த நிச்சயமும், எதிர்கால திட்டமுமின்றி தாங்கள் செய்யாத தவறுக்காக முடங்கிப் போயிருக்கிறார்கள். கல்லூரிகளிலும் ,பல்கலை கழகங்களிலும் பதிந்து விட்டு காத்திருக்கிறார்கள். பள்ளி செல்லும் நாளுக்காக காத்திருக்கிறார்கள், இடுகையின் ஆரம்பத்தின் கண்ட மாணவனைப் போல.”கடந்த இருபது ஆண்டுகளில் “தீவிரவாதிகள்” எனப்படுபவர்களால் காணாமல் போனவர்கள் வெறும் 15 பேர்தான். ஆனால் ஆயுதம் தாங்கிய ராணுவத்தால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் மேல்.” என்கிறார் ஒரு காஷ்மீர்வாசி. சொல்லப்போனால், ராணுவத்தை அவர்கள் பாதுகாப்பாக கருதுவதில்லை. ஆக்கிரமிக்கப்பட்டதாகத்தான் கருதுகிறார்கள். இந்திய அரசியல் அமைப்பு மற்றும் ராணுவத்தின் அதிகார துஷ்பிரயோகம், மற்றும் மனித உரிமை மீறலாகத்தான் அவர்கள் நினைக்கிறார்கள். உலகின் பெரிய ஜனநாயக அரசு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியா இன்னும் எவ்வளவு நாளைக்கு சொந்த மக்களையே அடக்கி வைக்கும்?சமீபத்தில் பாகிஸ்தானில் வெள்ளம் வந்து மக்களின் வாழ்க்கையை அடித்துச் சென்றது நினைவிருக்கும்.அதில் 11000க்கும் மேலான பள்ளிக்கட்டிடங்கள் பாதிப்படைந்திருப்பதாக யூனிசெஃப் தளம் கூறுகிறது. பள்ளிக்கட்டிடங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், வீடு,நிலங்களை இழந்த பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் கூடாரங்களில் தற்காலிக பள்ளி நடைபெறுகிறது. அவர்களது வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் பள்ளி செல்லும் குழந்தைகள் கல்வியை இழந்துவிடாமல் இருக்க வழிவகைகள் மேற்கொள்ளப்படுகிறது.இந்திய அரசுக்கு ராணுவத்தை அனுப்புவதுதான் எளிது போல; குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை விட!

(செய்திகள் இணையத்திலிருந்து/ட்விட்டரிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது)

நன்றி – http://sandanamullai.blogspot.com/

One thought on “ராணுவத்தை அனுப்பும் முன்…சந்தனமுல்லை.”

  1. உலகின் ஆயுதத்தயாரிப்பாலளர்களின் முதுகில் மூட்டைப்பூச்சி கடித்து விட்டதென்று ஐ நா தலைவர் கண்ணீர் வடிக்கின்றார் பாவம் இவருக்கு கண் பார்வை இல்லாததனால் காஸ் மீர் மட்டும் அல்ல இலங்கையின் வடக்கு கிழக்கும்
    பார்க்க முடியாத நிலையாம்

Comments are closed.