ராஜபக்சவின் இராஜதந்திரமா!?:பதறி ஒதுங்கும் இந்திய அதிகாரிகள்!!

  
 
 இலங்கைக்கான இந்தியத் தூதுவர் பதவியை ஏற்றுக்கொள்ள இந்திய அதிகாரிகள் பின்னடித்து வருவதாக இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய தூதுவர் அலோக் பிரசாத்தை, அவரது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே திரும்பியழைக்க இந்திய வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளமை குறித்து எமது இணையத்த்தளத்தில் இதற்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இன்னும் இரண்டு மாதங்களுக்குள் அலோக் பிரசாத் நாடு திரும்புவார். ஆனால், அவரது இடத்திற்கு புதியவர் ஒருவரை நியமிப்பதில் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சு பெரும் 
 
  இடர்பாடுகளை எதிர்கொண்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆலோக் பிரசாத் திரும்பியழைக்கப்பட்ட பின்னர், புதிய தூதுவராக யாரை நியமிப்பது என்பது பற்றி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் பதவியை ஏற்குமாறு கோரப்பட்ட இந்திய அதிகாரிகள் பலரும் அதற்குப் பெரும் தயக்கம் காட்டி வருவதே, அடுத்த தூதுவர் யார் என்பதைத் தீர்மானிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தென்காசிய நாடுகளின் இந்தியத் தூதுவர்களாகப் பணியமர்த்தப்படுவோர், பொதுவாக இந்திய அதிகாரிகள் மட்டத்தில் மிக முக்கியமானவர்களே. குறிப்பாக பல்வேறு பரிசீலனைகளுக்குப் பின்னரே இலங்கைக்கான தூதுவர் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கமாகும்.

ஒருவர், இலங்கைக்கான இந்தியத் தூதுவராக நியமிக்கப்படுவாராயின், அவர் இந்திய இராஜதந்திர வட்டாரங்களில் உச்சநிலையை அடைந்துவிட்டார் என்றே கருதப்படுவதுண்டு.

1985 முதல் 1989ம் ஆண்டு வரை ஜோதிந்திர நாத் டிக்சிட் இலங்கை;கான இந்தியத் தூதுவராக இருந்த காலப்பகுதியிலும், அதனையடுத்துவந்தக் காலப்பகுதியிலும், இந்தியத் தூதுவர்கள் இலங்கையின் பேரரசர்கள் போன்றே கொள்ளப்பட்டனர்.

எனினும், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இலங்கைக்கான தூதுவர் பதவியைப் பெறுவதற்கு இந்திய இராஜதந்திர உயர் அதிகாரிகள் பின்னடித்து வருகின்றனர்.

இதற்கு, தற்போதைய தூதுவர் அலோக் பிரசாத்தின் செயலின்மையா? அல்லது அரச தலைவர் ராஜபக்சவின் இராஜதந்திரமா காரணம் என்பது தெரியாமலுள்ளது.

கடந்த காலங்களில், தூதுவர் அலோக் பிரசாத்திற்கு குறித்தொடுக்கப்பட்ட இராஜதந்திரப் பணிகளை அவர் சரிவர நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும்கூட எழுந்ததாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.