யுத்தத்தை நிறுத்துமாறு கோருவது விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவளிப்பதாக அமைந்துவிடும்:ஜெயலலிதா.

16.10.2008.

தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பொன்றுக்கு எதிராகவே இலங்கை அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுத்திருப்பதால் அதனை நிறுத்துமாறு கோரமுடியாது என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அவ்வாறான யுத்தத்தை நிறுத்துமாறு கோருவது விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவளிப்பதாக அமைந்துவிடும் என அவர் நேற்று புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி கூட்டிய சர்வகட்சி மாநாடும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் வெறும் ஏமாற்றுவேலையெனக் குற்றஞ்சாட்டியிருக்கும் அவர், கருணாநிதி தான் விட்ட தவறுகளை மறைப்பதற்காகவே இந்த சர்வகட்சி மாநாட்டை கூட்டியிருப்பதாகத் தெரிவித்தார்.
எனினும், இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்துவதுடன், இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சியளிப்பதை இந்திய மத்திய அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும் என ஜெயலலிதா தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.