யாழ் மற்றும் வவுனியா தேர்தல்களில் அரச ஊடகங்களுக்கு மட்டுமே அனுமதி.

இலங்கையின் வடக்கே யாழ் மாநகர சபைக்கும், வவுனியா நகர சபைக்கும் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில் அது தொடர்பான செய்திகளை சேகரிக்க அரசு ஊடகங்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதியளிக்க இலங்கை அரசு மறுத்துள்ளதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதை எதிர்கட்சி வேட்பாளர்களும் விமர்சித்துள்ளனர்.

எனினும் தேர்தல் நடைபெறும் இடங்களுக்கு ஊடகவியலாளர்களை அனுமதிப்பது இல்லை என்று இலங்கை அரசு முடிவெடுத்துள்ளதாக கூறுவது தவறு என்று இலங்கை பாதுகாப்பு தொடர்பான ஊடக நிலையத்தின் இயக்குநர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் செல்ல விண்ணப்பித்துள்ளவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு பாதுகாப்பு நிலைமைகளுக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.