யாழ். நகரின் மத்தியில் புளொட் உறுப்பினர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு!

யாழ். நகரின் மத்தியில், மருத்துவமனை வீதியில் புளொட் அமைப்பினர் தங்கியிருந்த வீட்டிலிருந்து துப்பாக்கிகள், ரவைகள் உட்பட தொலைத்தொடர்புச் சாதனங்கள் மற்றும் வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த வீட்டிலிருந்து புளொட் உறுப்பினர்கள் வெளியேறியிருந்த நிலையில், அடாத்தாக அவ்வமைப்பின் உறுப்பினர் ஒருவர் தங்கியிருந்தார்.

வெளிநாடொன்றில் தங்கியிருக்கும் குறித்த வீட்டின் உரிமையாளர்கள் அவ்வீட்டினைப் பெறுவதற்கு வெளிநாட்டிலிருந்து வருகை தந்த போது குறித்த உறுப்பினர் வாள் கொண்டு மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், குறித்த உரிமையாளர், நீதிமன்றத்தின் உதவியை நாடிய நிலையில், நீதிமன்றத்தினால் குறித்த நபரை வெளியேற்றுமாறு அறிவிக்கப்பட்டிருந்ததையடுத்து, காவல்துறையினர் பொருட்களை அகற்றுவதற்காக குறித்த வீட்டிற்குச் சென்று அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அங்கிருந்த அலுமாரியொன்றிலிருந்து குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

அவற்றுள் ரி-56 ரக துப்பாக்கி ஒன்று, அதற்கான ரவைகள் 356, 4 ரவைக்கூடுகள், கைத்துப்பாக்கி ஒன்று அதற்கான ரவைக்கூடுகள் 2, வாள்கள் 2 மற்றும் வோக்கி டோக்கி என அழைக்கப்படும் தொலைத்தொடர்புச் சாதனம் 2 ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

குறித்த ஆயுதங்கள் புளொட்அமைப்பின் பதிவில் இருக்கவில்லையென அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்து வருகின்றபோதிலும்,  ஆயுதங்களை வைத்திருந்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன்,  குறித்த நபர் புளொட் அமைப்பின் ஆரம்ப கால உறுப்பினர் எனவும், மானிப்பாயைச் சேர்ந்த 55 வயதினையுடைய சிவகுமார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவரை நேற்று சிறிலங்கா காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட குறித்த நபருக்கு இவ்வாயுதங்களை வழங்கியவர்கள் யார்? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.