யாழ்பாணம் உள்ளிட்ட இரண்டு இரண்டு இடங்களில் இந்திய தூதரகம் கோரிக்கை?

கொழும்பு, மே 31: யாழ்ப்பாணம் உள்பட இரு இடங்களில் துணைத் தூதரகங்களைத் திறக்க அனுமதி அளிக்குமாறு இலங்கையிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள யாழ்ப்பாணம், தென்கிழக்கு கடற்கரை நகரான ஹம்பன்தோடா ஆகிய இரு இடங்களில் துணைத் தூதரகங்களைத் திறக்க இந்தியா விரும்புகிறது. இதுதொடர்பாக இலங்கை அரசுக்கு இந்தியா முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இரு நாடுகளின் அதிகாரிகளும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இதற்கு மேல் தகவல் தெரிவிக்க இயலாது என்றும் இலங்கை வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பான செய்தி சண்டே டைம்ஸ் நாளிதழிலும் வெளியாகியுள்ளது. ஹம்பன்தோடா மாவட்டத்தில் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனால், ஹம்பன்தோடாவில் தனது நாட்டின் துணைத் தூதரகத்தை இந்தியா திறக்க விரும்புவதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. துணைத் தூதரகங்களைத் திறக்க இலங்கை அனுமதி அளித்தால், இலங்கையின் வடக்குப் பகுதியில் ரயில் பாதைகளைச் சீரமைக்கவும், காங்கேசன் துறைமுகம் மற்றும் பலாலி விமான தளத்தைச் சீரமைக்கவும் பல கோடி டாலர் நிதியுதவி அளிக்க இந்தியா முன்வந்துள்ளதாக அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது தலைநகர் கொழும்பில் இந்தியத் தூதரகமும், கண்டியில் துணை தூதரகமும் செயல்படுகின்றன. இவைதவிர, யாழ்ப்பாணத்தில் விசா பரிசீலனை மையத்தை இந்தியா அண்மையில் தொடங்கியது. இந்த விசா பரிசீலனை மையத்தை விஎப்எஸ் லங்கா என்ற தனியார் நிறுவனம் கவனித்து வருகிறது. விசா விண்ணப்பங்களை வழங்குவது, நிறைவு செய்த விண்ணப்பங்களைப் பெறுவது, அதுதொடர்பான தகவல்களை அளிக்கும் பணிகளை மட்டுமே இந்தத் தனியார் நிறுவனம் கவனித்து வருகிறது. ஒருவருக்கு விசா அளிப்பது அல்லது மறுப்பது தொடர்பாக இந்தியத் தூதரக அதிகாரிகளே முடிவு செய்து வருகின்றனர். இதனிடையே கண்டியிலும் விசா பரிசீலனை மையத்தை இந்தியா திங்கள்கிழமை துவங்கியது. இந்த மையம் விசா விண்ணப்பங்களைப் பெறும் பணியை ஜூன் 1 முதல் மேற்கொள்ளவிருக்கிறது