மோசமான காலநிலையால் பல்வேறு தடைகளை எதிர்நோக்கும் அரசாங்கப் படைகள்:கோதபாய ராஜபக்ஷ .

19.10.2008.

வேறுபல அரசியல் வாதிகள் கிளிநொச்சியைக் கைப்பற்றுவது பற்றிக் காலவரையறையொன்றைக் கூறுகின்றபோதும் தான் அதுதொடர்பாக எதுவும் கூறவில்லையென கோதபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியிலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலேயே அரசாங்கப் படைகள் நிலைகொண்டிருப்பதாகவும், ஒரு வாரத்துக்குள் கிளிநொச்சியில் சிங்கக் கொடி ஏற்றப்படுமெனவும் சில அரசியல் வாதிகள் கூறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கிளிநொச்சியைக் கைப்பற்றுவது தொடர்பில் காலவரையறை எதுவும் இல்லையெனவும், ஆனால் சில அரசியல்வாதிகளும், இராணுவ அதிகாரிகளும் கிளிநொச்சியை ஒரு வாரத்தில் பிடிப்போம் எனக் கூறிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், தற்பொழுது அங்கு காணப்படும் மோசமான காலநிலையால் அரசாங்கப் படைகள் பல்வேறு தடைகளை எதிர்நோக்கியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த விசாரணைகள் துரிதமாக நடத்தப்படுகின்ற போதும், வடமத்திய மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் மேஜர் ஜென்ரல் ஜானக பெரேராவின் படுகொலை தொடர்பிலான விசாரணைகள் மாத்திரம் ஏன் மந்தகதியில் முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த கோதபாய, அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், ஜனாக பெரேராவின் படுகொலை குறித்த விசாரணைகளைப் பொலிஸாரும் மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.